
தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது:
ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசிங்கம், தமிழர்களின் பெருமைகளையும், வலிகளையும், துயரங்களையும் உலக மக்களிடையே கொண்டு சென்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை, தத்துவங்களை உலக நாடுகளிடையே எடுத்துச்சென்ற பெருமை அவருக்கு உண்டு. அவர் போர்க்களத்திற்குச் சென்று ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. ஆனால், அவரே ஒரு ஆயுதமாக விளங்கினார்.
மறைந்த பாலசிங்கம் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார். அவரை போல் மக்களின் நியாயங்களை உலக நாடுகளிடையே கொண்டு செல்ல பல குரல்கள் உருவாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலாக மாற வேண்டும். அதற்காக இந்த நேரத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம். அந்த மக்களுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, பயங்கரவாதிகள் அல்ல, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியவர் அன்ரன் பாலசிங்கம். விடுதலைப் புலிகள் பற்றி தவறாக பிரசாரங்கள் செய்யப்படும் போது எல்லாம் அவர் அதை முறியடித்து தெளிவுபடுத்தினார்''என்றார்.
ம.தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி இராமச்சந்திரன் பேசும்போது, "விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துவைத்த சொல்வன்மை பெற்றவர் அன்ரன் பாலசிங்கம்''என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய குறுந்தகட்டை வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை கனிமொழி பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இணை பொதுச்செயலாளர் செல்வபெருந்தகை, இயக்குனர் செல்வபாரதி, மருத்துவர் வேலாயுதம், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தி.மு.கவின் விஜயா தாயன்பன், உள்பட பலர் பேசினர்.
படம்: தினத்தந்தி
1 comment:
அதெல்லாம் சரி வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளாக எப்போ இருக்கப்போகிறார் இவர்.
Post a Comment