Wednesday, December 13, 2006

ஆய்வறிக்கையின் பின்னணியில் இந்தியா?

அனைத்துக் கட்சி கூட்டத்துக்காக நிபுணர்கள் குழு தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தீர்வுத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வறிக்கையும் பரிந்துரையும் நிபுணர் குழுவினரால் கையளிக்கப்பட்ட மறுநாளே "ஹிந்து" நாளிதழில் (டிசம்பர் 7) அந்த அறிக்கை விவரங்கள் வெளிவந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஆய்வறிக்கை குறித்து இந்தியா ஏற்கனவே அறிந்துள்ளது என சிறிலங்கா அரசு சந்தேகப்படுகிறது.

ஆய்வறிக்கையைக் கையளித்தவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதில் விக்னேஸ்வரன் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக தனியாக, சுயாட்சி உரிமையுள்ள மாகாணத்தை அமைக்கும் திட்டம் பரிந்துரையில் உள்ளதும் இந்தச் சந்தேகத்துக்கு வலுச் சேர்த்துள்ளது. இத்தகைய திட்டம் ஒன்று முன்னுரைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டதாக எந்தத் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அது பிரசுரமாவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என அரச தலைவர் மகிந்த, அமைச்சர் டியூ.குணசேகராவிடம் கூறியிருந்தார். ஆனால் மகிந்த பார்வையிடுவதற்கு முன்னதாகவே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பரிந்துரைத் திட்டம் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: