Wednesday, December 27, 2006

இந்திய தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கியது தவறு!!!

-ஜாதிக ஹெல உறுமய-
மலையக தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமய, இந்த நிலைமை ஏற்படுவதற்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.யும் காரணமாவர். ஏனெனில், இவர்களே இந்தியத் தமிழர்களுக்கு 2002 இல் பிராஜவுரிமை வழங்கும் துரோகத் தனத்திற்கு முன்னின்றவர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஹெல உறுமய ஏற்கனவே ஜே.வி.பி.யை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலாகவே ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பிரசார செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, வாழ்க்கைச் செலவுக் கேற்ப சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக எமது எதுவிதமான எதிர்ப்பும் கிடையாது. ராமலிங்கம் அவர்களின் மார்க்ஸிய லெனினிஸ்வாத சகோதரர்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான படிப்பினையை புத்தரின் ` `சிகாலோவாத சூத்திரம்" எமக்கு படிப்பித்துள்ளது.

எமது நாட்டை ஆக்கிரமித்தவர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனைத் தடுத்து சிங்களவர்களின் சிறப்புரிமைகளை இல்லாதொழித்து தோட்டப்புற தமிழர் குழுக்களுக்கு 2002 இல் இலங்கை பிரஜாவுரிமையை வழங்கும் துரோகச் செயலுக்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.கூட்டணியே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க.

இதனை நாம் மீண்டும் மீளாய்வு செய்வதற்கு காரணம் நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாதொழித்து மலைநாட்டை உருவாக்கும் பிரபாகரனின் சூழ்ச்சித் திட்டம் இதன் பின்னணியிலேயே இருப்பதென்பதனாலாகும்.

அண்மையில் இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை நுணுக்கமாக ஆராயும் போது நாட்டின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து கிழக்கு மாகாணத்தில் பலமிழந்துள்ள புலிகள் மலையகத்திற்கு ஊடுருவும் தந்திரோபாயமாகவே இது அமைந்துள்ளது தென்படுகிறது.

தொண்டமானும் மலையகத் தலைவர்களும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர் போராட்டத்தை நிறுத்திய போதும் ஜே.வி.பி.அதனை தொடர்வதற்கு மேற்கொண்ட முயற்சியால் தொண்டமானை தோல்வியடையச் செய்வதற்குப் பதிலாக மாறாக முழு நாடுமே தோல்வியைத் தழுவச் செய்யும் நடவடிக்கையாகும் என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நன்றி>லங்காசிறீ.

No comments: