Wednesday, December 27, 2006

உல்லாசப்பயணத்துறையில் சிறி லங்காவுக்கு பெரும் வீழ்ச்சி.

சிறி லங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள், அதன் உல்லாசப் பயணத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலைப் பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறி லங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என கணிக்கப்படுகின்றது.

உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையைச் சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளைக் கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதப் பயணிகளையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.4 வீதம் குறைவான பயணிகளே 2006 இல் வந்ததாகவும், 2007 ஆம் ஆண்டிற்கான கோடைக்கால முற்பதிவுகள் மிகக் குறைவாகவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பயணிகள்தான் அதிகளவில் சிறி லங்காவை நாடுவதாகவும், எனினும் இந்த நாடுகள் தமது பயணிகளுக்குக் கொடுத்த முன்னெச்சரிக்கைகளால் உல்லாசப் பயணத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித் ததாகவும் கூறப்படுகின்றது.
http://www.pathivu.com

No comments: