Saturday, December 02, 2006

நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்கு, கடும் விமர்சனம்.

இலங்கையின் சமாதான முன்னெடுப்பு: நோர்வேயின் பங்கு குறித்து அனைத்துலக சிக்கல்களுக்கான குழு கடும் விமர்சனம்.

இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் நோர்வேயின் பங்கு குறித்து (International Crisis Group) அனைத்துலக சிக்கல்களுக்கான குழு கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளது.
இது விடயம் தொடர்பான அறிக்கையொன்றினை அனைத்துலக சிக்கல்களுக்கான குழு இந்த வாரம் வெளியிட்டிருப்பதாக நோர்வேஜிய நாழிதழான டக்ஸ்சாவீசன் (dagsavisen) இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை குறைபாடான அடிப்படைகளைக் கொண்டுள்ளதோடு, நேர்த்தியான திட்டமிடலுக்குட்படவில்லை என்றும், அது அவசரமாக ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையென்றும் அவ் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கை இராணுவ ரீதியிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வழிவகுத்த போதும், சமாதான முன்னெடுப்புக்கள் மந்தமானதாகவும் குறைபாடுகளையுமே கொண்டிருந்தது. அதுவே ஈற்றில் போர் வெடிப்பதற்கும் வழிகோலியுள்ளது.

சமாதான முன்னெடுப்பானது தீர்க்கப்படாத இனச்சிக்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உகந்த முதற்கட்ட முயற்சியாகும். அதன் பின்னான நான்கு ஆண்டுகாலப் பகுதி குறிப்பிடத்தக்க அளவில் வடக்கு-கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வழி சமைத்தது.
ஆனால் அங்கு நிலவும் முரண்பாடு மிகவும் சிக்கலானது. சிக்கலான பல விடயங்கள் போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எரிக் சொல்ஹெம் நிராகரிப்பு
போர் நிறுத்த உடன்படிக்கை அவசர ஏற்பாடு என்ற அனைத்துலக சிக்கல்களுக்கான குழுவின் குற்றச்சாட்டினை எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார். தாம் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிக்கலான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படவில்லை, ஆனால் அவை கருத்தில் எடுக்கப்பட்டு, மத்திய கிழக்கு தீர்வுக்குரிய "ஒஸ்லோ உடன்படிக்கை" போன்று நிகழ்ச்சி நிரலில் பின் தள்ளப்பட்டுள்ளன.

சில சிக்கலான பிரச்சினைகள் கையிலெடுக்கப்படாது, சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தரப்புகளுக்கிடையில் பரஸ்பரம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காகவே இலகுவான பிரச்சினைகள் முதலில் கையாளப்பட்டன. அதுகூட இரு தரப்பினரின் முடிவாக இருந்ததே அன்றி நோர்வேயின் முடிவல்ல.

இறுதித் தீர்வு பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, போர் நிறுத்தம் மற்றும் பொருளாதார கூட்டுச்செயற்பாடு போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பாகப் பேசுவதையே இரு தரப்பினரும் விரும்பினர் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துளார்.

சமாதான முன்னெடுப்பில் நோர்வே "அனுசரணையாளராக கடமையாற்றியதே தவிர சர்வாதிகாரியாக அல்ல" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: