Wednesday, December 27, 2006

சிறிலங்கா அரசு மீது, கொபி அனான் சாடல்.

ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை.

அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பங்கிட்டு வழங்குவதற்கு முயற்சி செய்தது. எனினும் சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டங்களை காரணம் கூறி அதனை தடுத்தது.

பின்னர் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்கள் ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்புப் பணிகளை பெருமளவில் பாதித்துள்ளது. ஆழிப்பேரலை பேரனர்த்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நிகழும் சம்பவங்கள் என்னை வேதனைப்படுத்துகிறது. அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படவும், பொதுமக்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றார் அவர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல்களும், அரச அதிகாரிகளின் ஊழல்களும் ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகளை அதிகளவில் பாதித்ததாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட 1.16 பில்லியன் டொலர் உதவித்தொகையில் அரசு 13.5 விகிதங்களையே இதுவரை பயன்படத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: