இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உலகமே அறிந்த ஒன்று.
இந்த 10, 15 ஆண்டு காலமாக வந்த உங்களையெல்லாம் வாழ வைப்பதற்கு உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் நடைபெற்றிருக்கிறதே அல்லாமல், உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற ஒரு காலம் வர வேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அது என்னவோ இலங்கைக்கு வர நான் பல முறை முயன்றுங்கூட, நடைபெறவில்லை. இயலாமல் போய்விட்டது. ஏன் இயலவில்லை என்றால், இலங்கையிலே இருந்த, இருக்கிற - அரசு எனக்கு அனுமதி தரவில்லை.
சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்கு செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒரு முறை இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதைச் சொன்ன போது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்று கூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டது.
இலங்கையிலே பல பெரியவர்கள் இலங்கையை அமைதி சூழ் நாடாக ஆக்க வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இலங்கையிலே ஒரு சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்பதற்காக முதல் குரல் கொடுத்தவர், சந்திரகாசன் தந்தை செல்வா தான் என்பதையும், அவர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சியையும் எண்ணிப்பார்க்கின்றேன்.
இலங்கையையே மையமாக வைத்து புதையல்,பாயும் புலி பண்டார வன்னியன் போன்ற கதைகளைக் கூட எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒரு சிலர் படித்திருக்கக் கூடும். இப்படி இலங்கையோடு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் எனக்குள்ள தொடர்பு என்றென்றும் பட்டுப் போகாத ஒன்று, பசுமையான ஒன்று.
இயல்பாகவே எங்களுடைய இரத்த ஓட்டத்திலே உள்ள உணர்வு தான் வெளிப்பட்டிருக்கின்றது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் தெரிவித்து விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கே தமிழகத்திற்கு வந்திருந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கின்ற உங்களை வழியனுப்பி வைக்கின்றேன். இப்போது தற்காலிகமாகத் தான் வழியனுப்பி வைக்க முடியும். விரைவில் உங்களையெல்லாம் மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழி அனுப்பி வைக்கின்ற அந்த நாள் வரட்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.
Friday, December 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment