Tuesday, December 19, 2006

ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் : "த இன்டிபென்டன்"

"அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு.

லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது.

ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், அன்ரன் பாலசிங்கத்துக்கு நோர்வே நாட்டுப் பிரதமர் அனைத்துலக நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததாகவும் எழுதியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக குரல் தரவோ, முடிவுகள் எடுக்கக்கூடிய தகமையுள்ளவர் அன்ரன் பாலசிங்கம் என்றும் மாவோ மற்றும் சேகுவேரா போன்றோரின் கொள்கைகளில் கைதேர்ந்தவர் அன்ரன் பாலசிங்கம் எனவும் தன்னுடைய ஆய்வில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பல ஆய்வாளர்கள், பிரபாகரனுக்கும் பாலசிங்கத்திற்கும் இடையே இருந்த பொருத்தம், போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக வடிவமைத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் அணுகுமுறை 1985 இலிருந்து மிகவும் வெற்றிகரமான பேச்சுக்களை விடுதலைப் புலிகள் நடத்துவதற்கு உதவியிருந்ததுடன் இறுதியாக தோல்வியில் முடிந்த பேச்சின் போது அவர் வெளியேறியிருந்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர் குறிப்பிட்டுள்ளார்.

நோயின் பிடியில் துன்பப்பட்ட வேளையிலும் கடந்த மாதம் அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், தேசத்தில் எமது மக்கள் படும் துயரத்துடன் ஒப்பிடும் போது தனது நோய் ஒரு பொருட்டல்ல என தெரிவித்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: