Tuesday, December 12, 2006

பொதுமக்கள் மீது தாக்குதல்: ஐ.நா கண்டனம்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான கடுமையான எறிகணைத் தாக்குலை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1,200-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

மேலும் கிழக்கில் தொடரும் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்களை கவசமாகப் விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 30,000 முதல் 35,000 வரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வாகரையில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கின்றனர். 3,000-க்கும் அதிகமான சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வசமுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.

"வாகரை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை உரிமைகளே நசுக்கப்பட்டுள்ளன" என்று இடைக்கால ஐ.நா பிரதிநிதியும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளருமான அமின் ஆவட் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேரடியாகத் தாக்குதல்களை நடத்துவது அதிகார துஸ்ப்பிரயோகமாகும். இராணுவச் செயற்பாட்டுகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தடை எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவதற்குப் பொதுமக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
நன்றி>புதினம்.

No comments: