டெல்லி: ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயல்படும் என கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக் ஜலசந்திப் பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைதிப் பணியில் கடற்படை தனது வரம்புக்கு உட்பட்டு உதவிகளைச் செய்யும்.
இலங்கையில் போர் வெடித்தால் அங்கிருந்து அதிக அளவில் அகதிகள் வருவார்கள். அந்த நிலையை சமாளிக்க இந்தியக் கடற்படை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அகதிகள் வருகையின்போது விடுதலைப் புலிகள் ஊடுறுவி விடக் கூடாது என்ற கவலை கடற்படைக்கு உள்ளது. அதைக் கண்காணிக்க இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பும் தங்களது தரப்பிற்குக் கிடைக்கம் தகவல்களை பரிமாறிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மேத்தா.
மேத்தா கூறுவதும் கிட்டத்தட்ட இணைந்து கண்காணிப்பது என்ற அர்த்தத்தில்தான் வருகிறது. எனவே மறைமுகமாக கூட்டு ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கடல் பகுதியை வளைக்கும் சீனா:
முன்னதாக கடற்படை தினத்தையொட்டி நடந்த நிகழ்சியில் சுரேஷ் மேத்தா பேசுகையில், தனது அண்டை நாடுகளின் உதவியுடன் இந்திய கடல் பகுதியில் ஒரு மறைமுக போர்க்களத்தை உருவாக்கி வருகிறது சீனா. எதிர்காலத்தில் இது நமது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் அண்டை நாடுகளான மியான்மர் போன்றவை இன்று நம்முடன் நட்புறவாக உள்ளன. ஆனால் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இவை எதிரிகளாக மாறக் கூடிய வாய்ப்புகளை நாம் புறந்தள்ளி விட முடியாது.
மியான்மருடன் நீண்ட காலமாகவே நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி வைத்துள்ளது சீனா. அதேபோல இலங்கையுடனும் சீனா நட்புறவை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே நெருங்கிய உறவு உள்ளது. ஆப்பிரிக்க கடலோரப் பகுதிகளில் உள்ள நாடுகளோடும் நல்லுறவை ஏற்படுத்தி வருகிது சீனா.
இவற்றை பயன்படுத்தி இந்திய கடல் எல்லையைச் சுற்றிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆரம்பித்துள்ளது. இது மறைமுக போர்க்களமே ஆகும். இந்த நாடுகளின் கடலோர அடிப்படைக் கட்டமைப்புத் திட்டப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் பல முக்கிய விஷயங்கள் சீனாவுக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன.
நமது கடல் பகுதியில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் நாம் தடுக்க வேண்டும். அவற்றை அனுமதிக்கக் கூடாது. சீன நாட்டின் பல்வேறு தயாரிப்புகள் இந்திய கடல் பாதை வழியாகத்தான் செல்கின்றன. இதனால் நமது பொருளாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்களை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வங்கக் கடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே முக்கிய நிலைகளில் நமது கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுரேஷ் மேத்தா.
http://thatstamil.oneindia.in/news/2006/12/03/india.html
Sunday, December 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment