Thursday, December 07, 2006

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப்போகும் கதை.

உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு

உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில.

குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது.
வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது.

வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் என அழைக்கலாம்.
சிங்களம், தமிழ் இரண்டும் அதிகாரபூர்வ மொழிகளாகவும் நிர்வாக மொழியாகவும் இருக்க, சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று நாட்டின் தேசிய மொழிகளாக இருக்கலாம்.
மேலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் பாடசாலை இறுதிப் பரிட்சையில் கட்டாய பாடங்களாக இருக்க வேண்டும்.

தேசிய காவல்துறை சேவை மற்றும் மாகாண காவல்துறை சேவை இரண்டையும் அமைத்து, இரண்டும் ஒருங்கிணைந்து பணிபுரியுமாறு செய்ய வேண்டும்.
சுயாட்சி மாவட்ட சபை, இந்திய தமிழ் கலாசார சபை ஆகியவற்றை அமைப்பதும் அதன் சில ஆலோசனைகள்.

பல துறைகளைச் சேர்ந்த குழுவின் 17 வல்லுநர்களில் 11 பேர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அவர்களில் அறுவர் சிங்களவர்கள். நால்வர் தமிழர்கள். ஒருவர் முஸ்லிம். மற்ற ஆறு பேரும் சிங்களவர்கள்.

இந்தியாவின் பரிந்துரை உட்பட பல பரிந்துரைகளை இக்குழு ஆராய்ந்துள்ளது. தனித் தமிழ் நாட்டுக்கு மாற்றான தீர்வுகளை ஆராய்ந்த இக்குழு, சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு கொடுக்கப்படாததே, அவர்கள் சிறிலங்காவில் இருந்து தனிமைப்படக் காரணம் எனக்கூறுகிறது.

இலங்கையில் வாழும் பல இன, மத, சமூகங்களுக்கிடையே உண்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும். மாகாண ஆட்சிகள், உள்ளூர் ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து சமூகத்துக்கும் மத்திய அரசில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும். அரசியலில் அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என அவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

இலங்கை குடியரசு என நாட்டை அழைக்கலாம். தனி சுதந்திர நாடு எனக் கூறலாம்.
மாகாணங்கள், மாவட்டங்கள், பகுதிகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
விடுதலைப் புலிகள் கேட்டும் சுய அடையாளத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில், அனைவரும் நாட்டு மக்கள் என அழைக்கப்படலாம்.

அனைவரும் சிறிலங்கன் என்று பொது அடையாளத்துக்குள் பலவீனப்படுத்தாமல், ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மொழியையும் கலாசாரத்தையும் வளர்க்கவும் மேம்படுத்தவும் உரிமை வழங்கப்பட வேண்டும். மேலும் தனது வரலாற்றைப் பேணவும் அதிகாரத்தில் தனக்குரிய பங்கைப் பெறவும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

அரசாட்சி, சட்ட விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, கொழும்புக்கும் மற்ற மாகாணங்களுக்குமிடையிலான உறவு உள்ளூர் ஆட்சிகள், பொதுச் சேவை, மொழி, நிலவுடமை, மாகாண அதிகாரங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் இந்த அறிக்கை ஆராய்ந்துள்ளது.

குழுவின் பரிந்துரை அனைத்துக் கட்சி குழுவினருடன் விவாதிக்கப்படும். பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு அரச தலைவர் மகிந்தவிடம் கொடுக்கப்படும்.

எனினும் இந்தப் பரிந்துரைகளுக்கு விடுதலைப் புலிகள் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நன்றி>புதினம்.

No comments: