Thursday, December 14, 2006

பேச்சுவார்த்தை அர்தமற்றது? யுத்தத்தில் சிறிலங்கா அரசு!!!

பேச்சுவார்த்தை அர்த்தமற்றது, யுத்தத்தில் அரசு வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா, நோர்வே- இந்தியா உட்பட்ட அனைத்துலக நாடுகளின் போக்கையும் கடுமையாக சாடியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்னிங்க் லீடர்" வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

கேள்வி: மிகமோசமான அழிவை இந்நாடு சந்திக்க நேரிடுமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடந்தகால தாக்குதல்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் எடுத்தால், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்நாடு தயாராக இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக, நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு ஏன் தயாராக இருக்கக்கூடாது? ஆனால், சு.ப.தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கைகளெல்லாம் வெறும் வார்த்தையில் மட்டும் தான். விடுதலைப் புலிகள் ஒரு தோல்வியடைந்த அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கு கிழக்கில் போர் நடந்தாலும், நாடு சீராகவே இயங்குகிறது. கொழும்பில் வாழும் மக்கள் தங்களது அன்றாடக் கடமைகளை வழமைபோன்று செய்து வருகிறார்கள். இந்நாட்டுக்கு வந்துபோக விரும்புபவர்களும், வழமைபோன்று வந்து செல்கிறார்கள்.
இருந்தாலும், எங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரும், சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடாகத் தோற்றம் கொடுத்து வருகிறார்கள். நாட்டில் இருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க, மிகப் பலமான ஒரு யுத்தத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கும்போது, எப்படி அவர்கள் இந்நாட்டை தோல்வியடைந்த நாடாகக் கருத முடியும்? விடுதலைப் புலிகள் வெற்றி பெறவில்லை. அவர்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. விடுதலைப் புலிகள் சொல்வதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு நகைப்பிற்குரிய கூட்டம். பேசுவதில் வல்லவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆனால் அவரது மிரட்டல்கள் எல்லாம் அர்த்தமற்றவை தான்.

அரசாங்கம் தற்போது கவனத்தில் எடுக்கவேண்டியது அகதிகள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வரும் வடக்கு கிழக்கு பகுதிகளைத் தான். அவர்களுக்கு உதவியும் நிவாரணமும் வழங்கும் அரசின் முயற்சிகள் எல்லாம் விடுதலைப் புலிகளால் தொடர்ந்து தடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணியதில்லை. அதனால், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். கொழும்பில் இடம்பெறும் அத்தனை கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்கும் விடுதலைப் புலிகளே காரணம். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கும் அழிப்பதற்கும் விரும்பும் இன்னும் பலரும், கொழும்பிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் துரோகிகள்.

சு.ப.தமிழ்ச்செல்வன் ஏன் இப்படி பயமுறுத்துகிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏனென்றால், அவர் ஒரு பயங்கரவாதி, பயங்கரவாத செயல்களை முன்னெடுக்கவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளார். தற்போது விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச நாடுகளும் துணை போகின்றன. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேசம் உதவி செய்கிறது.

இங்கு எமது நாட்டில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவினர் கூட துரோகிகள் தான். ஒற்றையாட்சியைக் கொண்ட நாடு என்பதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறியிருக்கையில், மகிந்தவுக்கு எதிரான முடிவை அவர்கள் எடுத்திருப்பது துரோகச் செயல்.
இந்நாடு ஒன்றை இப்போது புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்களைப் பயமுறுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் விடும் மிரட்டல்கள் எல்லாம் பொய்யானவை என்பதை மக்கள் விளங்க வேண்டும்.

கேள்வி: சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

பதில்: மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நாள்முதல், விடுதலைப் புலிகளைப் பேச்சுக்கு வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அன்றுமுதல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். தனிநாட்டை அரசு அனுமதிக்க முடியாது. ஒரு பயங்கரவாத குழுவுக்கு, அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கவும் முடியாது. மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நாள்முதல், சர்வதேச சக்திகள், விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தி வருகின்றன.
படையினர் மத்தியிலும் பல்வேறு துரோகிகள் இருக்கிறார்கள். இவர்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். பல ஆயிரம் பேர் இந்த துரோகத்தால் உயிரிழக்கிறார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. அப்பாவிப் பொதுமக்களும் படையினரும் தினமும் மடிகிறார்கள்.

நோர்வே நாட்டவர்கள் தான் மிக மோசமான துரோகிகள். அவர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றுதான். விடுதலைப் புலிகளைப் போன்றுதான் அவர்களும் செயற்படுகின்றனர். வார்த்தையில் எல்லாம் சொல்வார்கள், ஆனால் செயலில் எதுவும் இல்லை. அகதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் உதவி செய்வதற்கு நோர்வே நாட்டவர்கள் உதவியிருக்கிறார்களா? விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென்று நோர்வே கோரியதா? குறிப்பிட்ட தங்களது இடத்திற்கு வரவேண்டாமென விடுதலைப் புலிகள் கோரினால், இவர்கள் போகாது தவிர்க்கிறார்கள். நோர்வேக் காரரை, இரு என்று விடுதலைப் புலிகள் சொன்னால் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு தலைவணங்குபவர்களாக நோர்வேக்காரர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் எப்படி அனுசரணையாளர் என்று அழைப்பது? மக்கள் வெளிப்படையாகப் பேசும் காலம் வந்துவிட்டது. இந்த நாட்டை நோர்வேக்காரர்கள் அழிப்பதற்கு முன்னர், அவர்களை வெளியேறும்படி மக்கள் கோர வேண்டும்.

கேள்வி: இராணுவ ரீதியாக போரை வெற்றிபெற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியும். பல நூற்றாண்டுகளாக இந்த நாடு யுத்தங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த யுத்தத்தை மட்டும் ஏன் வெற்றிபெற முடியாது? இந்நாடு, தமிழர்களுக்கு எதிராக போர் புரியவில்லை. தங்களைத் தமிழின தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பயங்கரவாத குழுவுக்கெதிராகவே போர் தொடுத்துள்ளது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு குழுவினர், இந்நாட்டு கலாச்சாரம், மக்கள் ஏன் நாட்டையும் அழிக்க முற்படுகிறார்கள்.

கேள்வி: பேச்சுவார்த்தைகளில் ஏதும் நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக எதுவும் இல்லை. ஜெனீவா பேச்சுக்களில் எதை அடைந்தோம்? ஒன்றுமில்லை. அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நாம் பேச்சுக்கு செல்கிறோம். மற்றப்படி, இராணுவ ரீதியாக எம்மால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும்.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடும் அனைத்துலக சமூகம், சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுப்பது துரதிர்ஸ்டமானதல்லவா?

பதில்: நாம் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அல்லது அவர்கள் சிறிலங்காவை தோல்வியடைந்த நாடாக பட்டியலிட்டு விடுவார்கள். அவர்களுக்கு நாம் பிரமாணிக்கமாக நடக்கத் தவறினால், உதவிகளை நிறுத்துவார்கள். அகதிகளுக்கான நிவாரணங்களை நிறுத்துவார்கள். ஏற்கனவே பலதடவை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஏன், எங்களது அண்டை நாடான இந்தியா கூட, வடக்கு கிழக்கு இணைப்பை உச்சநீதிமன்றம் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கி பிரித்ததை, தவறு என்கிறது. எமது நாட்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை, வேறு ஒரு நாடு எப்படி குறை சொல்லலாம்? விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு நாம் போகாவிட்டால், சர்வதேச நாடுகள் எங்களைக் குறை சொல்வார்கள்.

கேள்வி: அப்படியானால், சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுக் கிடப்பதாக கருதுகிறீர்களா? அரசாங்கம் சுயமாக சிந்திக்க முடியாதா?

பதில்: இல்லை, நாம் சர்வதேச சமூகத்தின் தயவில் இருக்கவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள அகதிகளுக்கு உதவி செய்வதற்காக சர்வதேசத்தின் உதவி எமக்குத் தேவை. அதனால், ஒரு அளவிற்கு அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டியுள்ளது.

கேள்வி: அரச படைகள் மத்தியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால், புலிகள் பக்கத்தின் உயர்மட்டத்தில், அரச புலனாய்வுப் பிரிவினர் ஊடுருவ முடியாதிருப்பதற்கு என்ன காரணம்?

பதில்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு திராணியற்றது. மிகவும் நலிவடைந்து விட்டது. ஆனால், எங்களது படையினர் மத்தியில் இருக்கும் துரோகிகள் பலர், விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். அதற்கு விடுதலைப் புலிகள் லஞ்சப் பணத்தை வழங்குகிறார்கள். கடந்த காலத்திலும் படையின் உயர்மட்டத்திலிருந்த சிலர், பெருந்தொகை லஞ்சப் பணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். இதனால், பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளின் அதிர்ஸ்டம், அவர்களது அமைப்பிற்குள் துரோகிகள் இல்லை.

கேள்வி: மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், தாக்குதல் ஆபத்துக்களை நிறுத்துமா?

பதில்: எவ்வாறு இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்பதில்தான் அது இருக்கிறது. முதலில், இந்தச் சட்டம் பற்றி, காவல்துறை மற்றும் படையினருக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தச் சட்டத்தை துஸ்ப்பிரயோகம் செய்யும் நிலமை குறித்து எச்சரிக்கப்பட வேண்டும்.
1995 இல் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தும்படி நான் கோரியபோது, தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.தொண்டமான் எதிர்த்ததுடன், என்னை ஒரு இனவாத காவல்துறை அதிகாரி என்றும் கண்டித்தார். தமிழரைக் கொல்வதாகக் குற்றம் சுமத்தினார். ஆனால், அப்போது இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால், இப்போது நாடு இந்த நிலைக்குப் போயிருக்காது.

இதற்குப் பதிலாக, 2002 இல், அர்த்தமற்ற ஒரு ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் உருவாக்கி கைச்சாத்திட்டார். யுத்த நிறுத்த ஒப்பந்தம், விடுதலைப் புலிகள் நகருக்குள் ஊடுருவவும், மேலதிக ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளவும், தற்கொலை மற்றும் கொலைகளைப் புரியவுமே இடமளித்தது.

கேள்வி: யுத்த நிறுத்த ஒப்பந்தம், அதனது நோக்கத்திற்கு உதவுகிறதா?

பதில்: யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டதாக விடுதலைப் புலிகள் கூட சொல்லி விட்டார்கள். அதற்குப் பின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இப்போது என்ன இருக்கிறது?

கேள்வி: ஆனால், அந்த ஒப்பந்தத்தை அரசு தொடர்ச்சியாக மீறுவதால்தான் அந்த ஒப்பந்தம் செயலிழந்ததாக விடுதலைப் புலிகள் சொல்லியிருக்கிறார்களே?

பதில்: விடுதலைப் புலிகள் அப்படித்தான் சொல்வார்கள். உலகத்திற்கு தாங்கள் சுத்தமாக இருப்பதாக காட்டவேண்டி இருக்கிறது. யுத்த நிறுத்தத்தை அரசு மீறியிருப்பதாக சொல்வது உண்மைதான். ஆனால் மக்களைப் பாதுகாப்பதற்காகவே நாம் அதை மீறுகிறோம். ஆனால், விடுதலைப் புலிகள் அந்த ஒப்பந்தத்தை நாளாந்தமும் மீறுகிறார்கள்.

கேள்வி: ஏ-9, ஏ-15 பாதைகளை அரசாங்கம் மூடி வைத்திருப்பது யுத்தநிறுத்த மீறல் இல்லையா?

பதில்: முகமாலை முன்னரங்கத்தை யார் தாக்க ஆரம்பித்தார்கள்? ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாணத்திற்கு யார் ஆயுதம் கடத்தினார்கள்? மக்களின் உயிர் மிகவும் விலையுயர்ந்தது என்பதை அரசு கவனத்தில் கொண்டு மட்டுமே ஏ-9 பாதையை மூடினோம். பொதுமக்களின் உயிர் எமக்கு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் உயிரைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.

கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தநிறுத்த மீறலில்லையா?

பதில்: அது யுத்தநிறுத்த மீறல் அல்ல. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.

கேள்வி: காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு, பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி மகிந்த விளக்கமளித்து விட்டாரா?

பதில்: இதுவரை இல்லை. ஆனால் அப்படி விளக்கமளிக்க என்ன இருக்கிறது? பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்ப்பிரயோகம் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கை மட்டுமே, காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.

கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டம், ஊடகங்களை நசுக்குவதற்கும் எவ்வகையிலாவது பயன்படுத்தப்படுமா?

பதில்: ஊடக செயற்பாடுகளை, பயங்கரவாத தடைச்சட்டம் எதுவிதத்திலும் பாதிக்காது என்ற உத்தரவாதத்தை என்னால் தர முடியும். இந்த தடைச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் கூட, ஊடகவியலாளர்கள் மிரட்டப் பட்டார்கள், கடத்தப்பட்டார்கள்.

ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் இதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம், எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என, ஊடகவியலாளர்களுக்கு மகிந்த, ஏற்கனவே உத்தரவாதம் வழங்கியுள்ளார். இதை ஊடகவியலாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாத விடயத்தை பெரிதாக ஊதிக்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நன்றி>புதினம்.

No comments: