Sunday, December 31, 2006

தலைமைப் பதவி யேர்மனியிடம்: நெருக்கடியில் சிறிலங்கா.

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்கு கடந்த ஓக்ரோபர் மாதம் ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.

டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் கூட்டணியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜேர்மனி, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதில் உறுதியாக உள்ளதுடன் தனது முடிவை சகல அனைத்துலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பை ஜேர்மனி பொறுப்பேற்பது விடுதலைப் புலிகள் மீதான தடை மீது மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள் விரும்பவில்லை. இந்த தடை தான் இலங்கையில் உக்கிரமடைந்துள்ள போருக்கு காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே தான் அவர்கள், பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.

ஜேர்மனை தளமாகக் கொண்டு இயங்கும் மெடிக்கொ இன்டர்நசனல் பிரதிநிதி தகவல் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் மீதான தடையை தவறாக நோக்குவதாகவும் இது பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழியாக தெரியவில்லை என்றும் இந்த தடை சில தரப்புக்களை வன்முறை மூலம் பிரச்சனையை தீர்ப்பதற்கு வழிகோலியுள்ளதாகவும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அமைதிப் பேச்சுக்களில் அனுசரனையாளராக தொழிற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: