-குமுதம் ரிப்போர்ட்டர்-
சிங்கள இனவாதம் நரவேட்டை ஆடுவதற்கு, ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்பதனை முதல்வர் கலைஞர் ஐக்கிய முன்னணித் தலைவி சோனியா காந்தியிடம் பக்குவமாக எடுத்துக்கூறி வந்திருக்கிறார். தமிழ் மக்களின் உணர்வை எங்கே எடுத்துக் கூறினால் பரிகாரம் கிடைக்குமோ, அங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். சோனியாவிடம் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் அவ்வளவு விரிவாக அவர் விவாதித்ததாகத் தெரியவில்லை!
முல்லைத்தீவு செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது சிங்கள விமானங்கள் குண்டுகள் போட்டன. பச்சிளம் குழந்தைகள் பலியாகின. சட்டமன்றத்தில் அதற்குக் கலைஞர் கண்டனம் தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது பற்றிச் சிந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்றார்.
தமிழக அரசிற்குத் தெரியாமலே சிங்கள போலீஸ்காரர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அது, மைய அரசின் ஏற்பாடுதான். ஈழப் பிரச்னையில் மைய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.
கோவையில் பயிற்சி பெற்ற சிங்களவர்களைப் பின்னர் பெங்களூருக்குக் கடத்திப்போய் பயிற்சி அளித்தனர். இப்போது சண்டிகரில் சிங்கள ராணுவ விமானிகளுக்கு ‘மிக்’ விமானத்திலிருந்து எப்படிக் குண்டு போடுவது என்று பயிற்சி அளிக்கின்றனர். இலங்கையின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காக்க, சிங்களக் கடற்படைக்கு உதவும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக நமது கடற்படைத் தளபதி கூறுகிறார்.
ஆயுதங்களைத் தவிர, சிங்கள ராணுவத்திற்கு எல்லா உதவிகளும் செய்வோம் என்று, தற்போது டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபட்சேக்கு, மைய அரசு உறுதி அளித்திருப்பதாகக் கூறுகிறார்கள். வேதனை தரும் செய்தி. விளங்கச் சொல்வதென்றால், சிங்களச் சிப்பாய்களுக்குத் துப்பாக்கி தரமாட்டார்கள். ஈழத் தமிழனை எப்படிச் சுட்டுக்கொல்வது என்று பயிற்சி அளிப்பார்கள்.
சிங்கள விமானிகளுக்குக் குண்டுகள் தரமாட்டார்கள். ஆனால், ஈழப் பரப்பில் எப்படிக் குண்டு வீசி அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது என்று கற்றுத் தருவார்கள்.
சிங்கள இனவாத அரசிற்கு இந்திய ராணுவப் பிரிவுகள் அளிக்கும் பயிற்சிகள், ஈழத் தமிழ் இனத்தையே அழிக்கத்தான் பயன்படுகின்றன. இதனை முதன்முறையாகத் தம்மைச் சந்தித்த எம்.கே. நாராயணனிடமும் சிவசங்கர மேனனிடமும் கலைஞர் எடுத்துரைத்தார். ஈழப் பிரச்னையில் தமது நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார். வந்தவர்கள் பிரதமரின் தூதர்கள்.
அவர்கள் அண்மையில் மீண்டும் வந்தனர். வெளியுறவுச் செயலாளர் என்ற முறையில் மேனன் கொழும்பு சென்று சென்னை வந்தார். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் எம்.கே. நாராயணன் டெல்லியிலிருந்து வந்தார். இருவரும் கலைஞரைச் சந்தித்தனர்.
ஈழப் பிரச்னையில் மைய அரசின் கொள்கையில் மறு பரிசீலனை தேவை என்று ஏற்கெனவே கலைஞர் தெரிவித்த கோரிக்கை, செயலுக்கு வரவில்லை. வந்தவர்களோ, ஈழத்திற்கு அரிசி, பருப்பு அனுப்புவது பற்றி ஆலோசிக்க வந்தனர். அப்படி அனுப்பப்படுவதில் பெரும் பகுதி சிங்கள ராணுவத்திற்குத்தான் செல்கின்றன.
ஈழத்திற்கு மாநில சுயாட்சி என்ற கோணத்தில், மைய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதில் கலைஞர் தெளிவாக இருக்கிறார். ஆனால், அந்தத் திசையில் வந்தவர்கள் சிந்திக்கவில்லை.
ஈழப் பிரச்னையில் இதுவரை மைய அரசு சரியான நிலை எடுக்கவில்லை. சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழகத்தில் குடிகொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் இலங்கை அதிபர் ராஜபட்சே இந்தியா வந்தார். தகிக்கும் தனது உணர்வுகளைத் தமிழகம் கொட்டிவிட்டது. ராஜபட்சேயின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு இயக்கங்களும் பல்வேறு வடிவில் போராட்டங்கள் நடத்தின. ஈழப் பிரச்னையில் கலைஞரின் கரங்களை வலுப்படுத்தும் முறையிலேயே அந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்தன.
சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு நடத்திய உண்ணாவிரதமும் அதில் கனிமொழி கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். ஈழப் பிரச்னையில் கலைஞர் எங்கே நிற்கிறார் என்பதனைக் கனிமொழி இங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கலைஞர் டெல்லி சென்றார். ஈழ மக்களுக்கு என்ன தேவை _ தமிழகத்தின் உணர்வு என்ன என்பதனை அவர் சோனியாவிடம் தெரிவித்திருக்கிறார்.
ஈழப் பிரச்னையில் அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கவில்லை என்று காழ்ப்புணர்ச்சியாளர்கள் கதை கட்டியதும் உண்டு. கங்கையின் அடி நீரோட்டம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அவர்களுக்கும் தெரியவில்லை.
ஈழத் தமிழர்களுக்கு என்ன உரிமை என்பதனைப் பேசுங்கள் என்று பிரதமரின் தூதர்களை இரண்டு முறையும் கலைஞர் கேட்டுக்கொண்டார். நோய் அறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார். கோரிக்கைக்குப் பலன் கிடைத்திருக்கிறது.
ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு என்ன அதிகாரம் என்பதனை நிர்ணயம் செய்யுங்கள் என்று மத்திய அரசு இலங்கை அதிபரிடம் தெரிவித்திருக்கிறது. அடுத்த மாதமே அறிவிப்பு வரும் என்று ராஜபட்சே சொல்லியிருக்கிறார். அதற்காக, நொண்டிகள் கூடி கும்மி அடித்துக்கொண்டிருக்கிறார்க��
�் என்று கூறியிருக்கிறார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இலங்கைத் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள், காதறுந்த ஊசிகள் என்று ஈழத் தமிழ் மக்கள் தூக்கியெறிந்துவிட்ட கங்காணிக் குட்டிக் கட்சிகள் அடங்கிய அனைத்துக் கட்சி அமைப்பை ராஜபட்சே அமைத்திருக்கிறார். அந்தக் கட்சிகள் கூடி பஞ்சாயத்துக்களுக்கு எந்த அளவு அதிகாரம் அளிக்கலாம் என்று அடுத்த மாதம் அறிவிக்குமாம். அதுவே, ஈழத் தமிழர் பிரச்னைக்கும் தீர்வாக அமையுமாம். இப்படிக் கேழ்வரகில் நெய் வடியும், பிடித்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
அந்த அனைத்துக் கட்சி அமைப்பில் ஈழப் போராளிகளுக்கு இடமில்லை. ஈழ மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை. பின்னர் எப்படி ஈழப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்? ஈழ மக்கள் என்ன கோருகிறார்கள்? இலங்கைதான் தங்கள் தாயகம். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள். இதற்கு ராஜபட்சேக்கள் என்ன சொல்கிறார்கள்? அதனைப் பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கோ, மற்ற மத்திய அமைச்சர்களோ கேட்டதாகத் தெரியவில்லை.
இன்றைக்கு தினம் தினம் ஈழ மக்கள் உயிருக்குப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் மீது சிங்கள ராணுவம் தேரோட்டம் நடத்தப் பார்க்கிறது. எந்த அளவிற்கு அங்கே மனித உரிமைகள் மிதிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன என்பதனை ஐ.நா.வின் உயர்ந்த மனித உரிமைக்குழுவே அம்பலப்படுத்தியது. சுனாமி நிவாரண நிதியாக ஈழ மக்களுக்கு அனுப்பப்பட்ட உலக உதவிகளை, எப்படி சிங்கள ராணுவமே கொள்ளை அடித்துக்கொண்டது என்பதனை ஐ.நா.வின் இன்னொரு அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
ஈழப் போராளிகளுக்கு ஆதரவாகவே, நார்வே செயல்படுகிறது என்று டெல்லியில் ராஜபட்சே நீலிக் கண்ணீர் வடித்தார். ஐ.நா. அமைப்புக்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு இதுதான் என்று அந்தச் சோலை வனத்தில், தினம் தினம் சிங்கள விமானங்கள் குண்டு மாரி பொழிகின்றன. மைய அரசு என்ன செய்யப்போகிறது? இன்றைக்கு ஈழத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சிதான் என்பதனை உலகம் ஒப்புக்கொள்கிறது. மைய அரசு ஒப்புக்கொள்கிறதா? ஈழம் எரியும்போது, டெல்லியில் ராஜபட்சேக்களுக்குப் பட்டுக்கம்பள வரவேற்பு என்பதனை, தமிழகம் ஏற்கவில்லை என்பது தெரிகிறதா? இதுவரை தெரியாவிட்டாலும் இனியாவது தெரிந்துகொள்ள வேண்டும்!
நன்றி>குமுதம் ரிப்போர்ட்டர், Dec 10, 2006
Wednesday, December 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment