Saturday, December 09, 2006

இந்திய அரசுக்கு கண்டனம்.

சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில், சிறிலங்கா கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஊர்தி மதுரை அருகே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் உரிய அனுமதி ஆவணங்கள் இருந்தது தெரியவந்ததால், தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்திருக்கிறது. தமிழக மக்களின் கவலையை இது மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த சிறிலங்கா ராஜபக்ச, தளவாடங்கள் அல்லாத பிற இராணுவத் தேவைகளை நிறைவு செய்ய இந்தியா முன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். சிறிலங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்த வெடி பொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு சிறிலங்கா அரச தலைவரின்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில் சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனையளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்திவிடும். ஆபத்தான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே சிறிலங்காவுக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: