Sunday, December 17, 2006

"சிக்குன் குனியா" வேகமாகப் பரவுகின்றது: யாழ். மக்கள் அவதி.

யாழ். குடாநாட்டில் "சிக்குன் குனியா" நோய் வேகமாகப் பரவிவருகின்ற போதிலும் அங்கு வலி நிவாரணிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதால் மக்கள் நோய் தீர்க்க வழியின்றி பெரும் துன்பத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழுக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 வீதி மூடப்பட்டதையடுத்து குடாநாட்டிற்கான அனைத்து விநியோகங்களும் தடைப்பட்டுள்ளன. கப்பலில் பொருட்கள் அனுப்படுகின்ற போதும் அவை போதுமானவையாகவில்லை. கடந்த முறை அனுப்பப்பட்ட மருந்துகள் தீர்ந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். இணுவில் பகுதியிலேயே சிக்குன் குனியா நோய் ஆரம்பித்தது. எனினும் தற்போது நகர் பகுதியிலும் வெகுவாகப் பரவி வருகின்றது. நோயாளர்களால் யாழ். போதானா மருத்துவமனை நிரம்பி வழிகின்றது.

இந்த காய்ச்சலுக்கு நிவாரணமாக பரசிட்டமோல் மற்றும் புறுவன் மாத்திரைகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதிக் கொடுக்கின்ற போதும் புறுவன் மாத்திரையை எந்தக் கடைகளிலும் பெற முடியாதுள்ள அதேவேளை சில கடைகளில் பரசிட்ட மோல் ஒன்று 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை சிக்குன் குனியாவினால் அவதியும் வயோதிபர்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மாத்திரைகள் இல்லாமையினால் பெரிதும் துன்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி>புதினம்.

1 comment:

கலை said...

மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை மட்டுமல்லாது, சரியான சத்துள்ள உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அங்கிருக்கும் மக்கள் நலிவடைந்த நிலையில் இருப்பதும் அங்கு மிக வேகமாக அந்த நோய் பரவுவதற்கு காரணமாகின்றது என அங்கு இருப்பவர்கள் கூறுகின்றார்கள்.