-பழ.நெடுமாறன்.
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதல்ல என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "வீரகேசரி" நாளேட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி:
கேள்வி: இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானமொன்று அண்மையில் தமிழக சட்டபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
பதில்: அந்த தீர்மானம் மிகவும் நல்லபடியானதாகும். எனினும் அது மட்டும் போதாது. இந்திய அரசின் ஓர் அங்கமாக தி.மு.க உள்ளது. இந்திய அரசை வழிநடத்தும் மூத்த தலைவர்களில் ஒருவராக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காணப்படுகிறார். எனவே இவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேரடியாக பேசி இதற்கு ஒரு நல்ல முடிவை காணலாம். ஏனெனில் மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் இயங்கி வருகின்றது. எனவே டெல்லி சென்று முதல்வர் அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்து ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து விளக்கி அவர்களின் துயரைத் துடைக்க முடியும். அதனையே தமிழக முதல்வரிடம் உலகத் தமிழர்கள் இன்று எதிர்பார்க்கின்றனர்.
கேள்வி: இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு தங்கள் துயரைத் துடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். இது எந்த அளவு தூரம் சாத்தியமாகும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழகத்திடம் உள்ளது. இந்தியாவின் கீழப்புரத்தில் இலங்கையும் வடக்கே நேபாளமும் இருந்து வருகின்றது. நேபாளத்தில் மன்னர் ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துன்பப்பட்டனர். இதன் போது இந்திய இடதுசாரிகள் இந்தியப் பிரதமருக்கு கொடுத்த நிர்ப்பந்தமே இன்று நேபாள மக்கள் மீண்டும் ஜனநாயக உரிமைகளுடன் மக்கள் வாழ வழி கிட்டியதுடன் மன்னரின் அதிகாரமும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் இது போன்று மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக முதல்வரும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் மேற்கொள்வாரேயானால் நிச்சயம் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வழி அமைக்க முடியும்.
கேள்வி: வடபகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. அந்த நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?
பதில்: வடபகுதி மக்களுக்கு இந்திய அரசு உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென தமிழகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. எனினும் அது இதுவரை சாத்தியமாகவில்லை. குறைந்தபட்சம் ஏ-9 வீதியை திறப்பதற்கேனும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை யாவும் தமிழக அரசின் நிர்ப்பந்தத்திலேயே தங்கியுள்ளது. தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே மக்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசு இதனை உணர்ந்து இலங்கை தமிழர்களின் துயரைத் துடைக்க தம்மால் ஆன பணிகளை கூடுமான அளவு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் சக்தி ஆதரவு காரணமாகவே இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பு தயக்கமான போக்கை காட்டி வருகின்றது. அண்மையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா வருகை தந்ததுடன் இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பினும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எனினும் இந்தியா அதனை மேற்கொள்ள முன்வரவில்லை. இவை அனைத்துக்கும் தமிழக மக்களின் உணர்வு ரீதியான எதிர்ப்பே காரணமாகி விட்டன. எனவே தமிழ்நாடு மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளிலேயே ஈழத்தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரும் நிலை உள்ளது.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அண்மையில் ஆற்றிய மாவீரர் தின உரையில் தமிழருக்கு தனித்தமிழரசே ஒரே மார்க்கம் என்று கூறி இருந்தார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்த அறிவிப்பை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை ஏற்றுத்தான் புலிகள் போர்நிறுத்தம் செய்தனர். சமாதானப் பேச்சை ஆரம்பித்தனர். ஆனால் அதனை சிறிலங்கா அரசு அப்பட்டமாக மீறி உள்ளது. இதனை உணர்ந்து சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் பிரச்னைக்கு ஒரு முடிவு கிட்டும்.
கேள்வி: இந்திய அரசு தனி அரசை அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று கூறப்படுகின்றதே இந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும்?
பதில்: இந்திய அரசு முதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகி அவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டும். சிறிலங்கா அரசின் போக்கின் காரணமாகவே இன்று இந்த நிலை உருவாகி உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். மனித பேரவலம் இலங்கையில் உருவாகி உள்ளது. இந்நிலையில் அதனைப் போக்கவும் தமிழர்களுக்கு நிலையான தீர்வு கிட்டவும் வழிவகுக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவுக்கு பெரும் கடமைப்பாடு உள்ளது. எனவே இலங்கை விவகாரத்தை இந்தியா மெல்ல தட்டிக் கழித்து விடக்கூடாது.
கேள்வி: இலங்கையிலிருந்து வரும் அகதிகள், இளைஞர்கள் கியூப்பிரிவு காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தடுத்து வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்: இளைஞர்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்க வேண்டிய உள்ளது. அகதிகள் உண்மையில் சிறை முகாம்களில் இருப்பதைப் போன்றே காணப்படுகின்றனர். புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் இளைஞர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள அகதிகளை பராமரிக்கும் பொறுப்பினை யூ.என்.எச்.சி.ஆர். ஈழ அகதிகளை அவர்களின் பொறுப்பில் விட தமிழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லையென இந்திய மத்திய அரசு கூறுகின்றது. எனினும் அண்மையில் மதுரை அருகே உள்ள மேலூரில் பெருந்தொகை வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகள் தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன?
பதில்: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்காவுக்கு அபாயகரமான ஆயுதங்களை வழங்கப்போவது இல்லையென உறுதியாகக் கூறியுள்ளார். எனினும் வெடிமருந்துகள் அனுப்பப்பட்டவை பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக இதனை மறுத்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றே அரசின் அனுமதியின்றி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய மத்திய அரசின் அனுமதியின்றி அன்னிய நாடு ஒன்றிற்கு வெடிமருந்துகளை அனுப்பி வைக்க முடியாது. அவ்வாறு இந்திய மத்திய அரசிற்கு தெரியாமல் இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்படுமானால் அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.
பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இவ்வாறு நடந்து கொண்டவர்கள் அல்லது ஆயுதக் கடத்தலுக்கு துணை புரிந்தவர்கள் மீது இந்திய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை தமிழக அரசு இதனை பறிமுதல் செய்திருக்கலாம். அதனை விடுத்து அவர்களும் பத்திரமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளது உகந்தது அல்ல.
கேள்வி: இறுதியாக இலங்கைத் தமிழருக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: இலங்கை தமிழர்கள் எமது சகோதரர்கள். அவர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகுந்த உறுதியுடன் காணப்படுகின்றனர். எனவே, அவர்கள் நம்பிக்கையுடனும் அஞ்சாமலும் வாழ வேண்டுமென கூற விரும்புகிறேன்.
நன்றி>புதினம்.
Tuesday, December 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment