Sunday, December 31, 2006

தலைமைப் பதவி யேர்மனியிடம்: நெருக்கடியில் சிறிலங்கா.

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்கு கடந்த ஓக்ரோபர் மாதம் ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.

டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் கூட்டணியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜேர்மனி, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதில் உறுதியாக உள்ளதுடன் தனது முடிவை சகல அனைத்துலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பை ஜேர்மனி பொறுப்பேற்பது விடுதலைப் புலிகள் மீதான தடை மீது மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள் விரும்பவில்லை. இந்த தடை தான் இலங்கையில் உக்கிரமடைந்துள்ள போருக்கு காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே தான் அவர்கள், பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.

ஜேர்மனை தளமாகக் கொண்டு இயங்கும் மெடிக்கொ இன்டர்நசனல் பிரதிநிதி தகவல் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் மீதான தடையை தவறாக நோக்குவதாகவும் இது பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழியாக தெரியவில்லை என்றும் இந்த தடை சில தரப்புக்களை வன்முறை மூலம் பிரச்சனையை தீர்ப்பதற்கு வழிகோலியுள்ளதாகவும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அமைதிப் பேச்சுக்களில் அனுசரனையாளராக தொழிற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

Friday, December 29, 2006

சம்பூரில் தமிழர்களை துரத்திவிட்டு, அனல் மின்நிலையம்.




இலங்கை இந்தியா இடையில் நிலக்கரி அனல் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து.

நிலக்கரி அனல்மின்நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி அமைப்புக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

500 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிலக்கரி அனல்மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
நன்ரி>பதிவு.

மகிந்தவின் பதுங்கு குழியை அம்பலப்படுத்திய சண்டேலீடர்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனதும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக இரகசியமாக அமைத்து வரும் 400 மில்லியன் ரூபாய் செலவிலான பதுங்கு குழி தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு குற்றப் புலனாய்வுத்துறையை பணித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் லசந்த விக்கிரமதுங்கவிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஊடகவியலாளர்கள் சண்டே லீடர் பத்திரிகை காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை சூழ்ந்து கொண்டனர்.

அரசினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டமும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளும் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மிகவும் பாதிக்கும் என்று சுதந்திர ஊடக அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

தொடர்புபட்ட செய்தி: 400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி
நன்றி>புதினம்.

Thursday, December 28, 2006

சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை?

சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன.

அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆசியப் பிராந்தியத்தில் ஜனநாயகத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அது விரும்புகிறது.

இந்த குழு சிறிலங்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, ஆபிரிக்கா, மத்திய ஐரோப்பா, மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
http://www.eelampage.com/?cn=30261

Wednesday, December 27, 2006

இந்திய தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கியது தவறு!!!

-ஜாதிக ஹெல உறுமய-
மலையக தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமய, இந்த நிலைமை ஏற்படுவதற்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.யும் காரணமாவர். ஏனெனில், இவர்களே இந்தியத் தமிழர்களுக்கு 2002 இல் பிராஜவுரிமை வழங்கும் துரோகத் தனத்திற்கு முன்னின்றவர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஹெல உறுமய ஏற்கனவே ஜே.வி.பி.யை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலாகவே ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பிரசார செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, வாழ்க்கைச் செலவுக் கேற்ப சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக எமது எதுவிதமான எதிர்ப்பும் கிடையாது. ராமலிங்கம் அவர்களின் மார்க்ஸிய லெனினிஸ்வாத சகோதரர்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான படிப்பினையை புத்தரின் ` `சிகாலோவாத சூத்திரம்" எமக்கு படிப்பித்துள்ளது.

எமது நாட்டை ஆக்கிரமித்தவர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனைத் தடுத்து சிங்களவர்களின் சிறப்புரிமைகளை இல்லாதொழித்து தோட்டப்புற தமிழர் குழுக்களுக்கு 2002 இல் இலங்கை பிரஜாவுரிமையை வழங்கும் துரோகச் செயலுக்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.கூட்டணியே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க.

இதனை நாம் மீண்டும் மீளாய்வு செய்வதற்கு காரணம் நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாதொழித்து மலைநாட்டை உருவாக்கும் பிரபாகரனின் சூழ்ச்சித் திட்டம் இதன் பின்னணியிலேயே இருப்பதென்பதனாலாகும்.

அண்மையில் இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை நுணுக்கமாக ஆராயும் போது நாட்டின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து கிழக்கு மாகாணத்தில் பலமிழந்துள்ள புலிகள் மலையகத்திற்கு ஊடுருவும் தந்திரோபாயமாகவே இது அமைந்துள்ளது தென்படுகிறது.

தொண்டமானும் மலையகத் தலைவர்களும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர் போராட்டத்தை நிறுத்திய போதும் ஜே.வி.பி.அதனை தொடர்வதற்கு மேற்கொண்ட முயற்சியால் தொண்டமானை தோல்வியடையச் செய்வதற்குப் பதிலாக மாறாக முழு நாடுமே தோல்வியைத் தழுவச் செய்யும் நடவடிக்கையாகும் என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நன்றி>லங்காசிறீ.

உல்லாசப்பயணத்துறையில் சிறி லங்காவுக்கு பெரும் வீழ்ச்சி.

சிறி லங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள், அதன் உல்லாசப் பயணத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலைப் பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறி லங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என கணிக்கப்படுகின்றது.

உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையைச் சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளைக் கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதப் பயணிகளையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.4 வீதம் குறைவான பயணிகளே 2006 இல் வந்ததாகவும், 2007 ஆம் ஆண்டிற்கான கோடைக்கால முற்பதிவுகள் மிகக் குறைவாகவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பயணிகள்தான் அதிகளவில் சிறி லங்காவை நாடுவதாகவும், எனினும் இந்த நாடுகள் தமது பயணிகளுக்குக் கொடுத்த முன்னெச்சரிக்கைகளால் உல்லாசப் பயணத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித் ததாகவும் கூறப்படுகின்றது.
http://www.pathivu.com

சிறிலங்கா அரசு மீது, கொபி அனான் சாடல்.

ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை.

அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பங்கிட்டு வழங்குவதற்கு முயற்சி செய்தது. எனினும் சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டங்களை காரணம் கூறி அதனை தடுத்தது.

பின்னர் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்கள் ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்புப் பணிகளை பெருமளவில் பாதித்துள்ளது. ஆழிப்பேரலை பேரனர்த்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நிகழும் சம்பவங்கள் என்னை வேதனைப்படுத்துகிறது. அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படவும், பொதுமக்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றார் அவர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல்களும், அரச அதிகாரிகளின் ஊழல்களும் ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகளை அதிகளவில் பாதித்ததாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட 1.16 பில்லியன் டொலர் உதவித்தொகையில் அரசு 13.5 விகிதங்களையே இதுவரை பயன்படத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Tuesday, December 26, 2006

சுனாமியின் 2ம் ஆண்டு நிகழ்வில் வான்கலங்கள் தாக்குதல்.

சிறீலங்கா இராணுவத்தின் கிபிர் வான்கலங்கள் இன்று செவ்வாய் காலை 9.25 மணியளவில் வாகரை கதிரவேலி வாழைச்சேனைப் பகுதியல் விக்னேஸ்வர் ஆலயத்தில் சுனாமியின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன.

இதேவேளை மாங்கேணி, கஜவத்தை சிறீலங்கா இராணுவ முகாம்களில் இருந்தும் பலத்த எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

இத்தாக்குதலில் 5 வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.pathivu.com

சுனாமி நினைவு வணக்கங்கள்.






நன்றி சுனாமி உயிர் சிற்பங்கள்.


எம் உயிரோடு கலந்து விட்ட உறவுகளே, உங்களுக்கு கண்ணீர் மலர்தூவி கண்ணீர் அஞ்சலிகள் செலுத்துகிறோம்.

Monday, December 25, 2006

விடுதலைப்புலிகளுக்கு நன்றி: ஜோர்தானிய கப்பல்மாலுமிகள்.

விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்: ஜோர்தானிய கப்பல் மாலுமிகள்.

முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர்.

முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர்.

கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்கவும் விடுதலைப் புலிகளால் நேற்று ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் அவர்கள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடியுள்ளனர். கப்பல் கப்டன் தனது நிறுவனத்திடமும், இந்தியாவில் உள்ள ஜோர்தான் தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று விடுதலைப் புலிகளால் இந்த மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் வைத்து கையளிக்கப்பட்ட இவர்கள், வவுனியா வழியாக கொழும்புக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊர்திகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய கப்பல் கப்டன் ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் மாலுமிகளை ஜோர்தானுக்கு அனுப்ப அந்த நாட்டு தூதரகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
தாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் வந்து இது தமது நிர்வாகப்பகுதி என்றும் தம்மால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டதாகவும், சரக்குக் கப்பலை இயக்க தாம் முயன்றும் அது முடியாமல் போனதாகவும், கடைசியில் விடுதலைப் புலிகளின் உதவியுடன் தாம் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனையே மற்றும் மாலுமிகள் தெரிவித்ததுடன் தாம் இங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தம்மை சகோதரர்கள் போலவும் நண்பர்கள் போலவும் அனுசரித்ததாகவும், தம் உயிர்களைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளை தாம் என்றும் மறக்கப் போவதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தங்கள் நிலைமை தொடர்பாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிந்து தமது உறவுகள் அச்சமடைந்து இருந்ததாகவும், ஆனால் தொலைபேசியில் தாம் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் பகுதியில் தாம் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் விரைவில் வந்து சேர்வோம் என்று தெரிவித்ததாகவும் அதன் பின்னரே உறவினர்கள் நிம்மதி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பலின் கப்டன் ரமாஸ் தாம் விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்று தெரிவித்தார்.

கப்பலின் முதன்மைப் பொறியியலாளர் கமால் அபு அப்தியல் தெரிவிக்கையில்,
தாம் இங்கு வாழும் மக்களின் நிலைமையை உணர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தமக்காக உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கப்பலின் 2 ஆவது பொறியியலாளர் அஸ்ரப் அப்துல் இப்ராகிம் தெரிவிக்கையில்,
தாம் செய்திகளில் அறிந்தளவில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் கட்டுப்பாட்டுப்பாட்டில் சிறிய பகுதிதான் இருக்கிறது என்றும் அறிந்திருந்ததாகவும் ஆனால் இங்கு பார்க்கின்ற போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரமாண்டமும் அவர்களிடம் இப்படியொரு பெரிய நிலப்பகுதி கட்டுப்பாட்டில் இருப்பதையும் கண்டு வியப்படைந்தாகவும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

Sunday, December 24, 2006

ஸ்ரீலங்காவிற்கான உதவிகளை நிறுத்த வேண்டும் - ஜேர்மனி.

புதிய சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பமாகாவிட்டால், ஸ்ரீலங்காவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் சமாதானப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே மேலதிக நிதி மற்றும் பொருளாதார உதவிகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் என ஜோமன் அபிவிருத்தி அமைச்சர் ஹெயிற்மேரி விசோரக-ஸியல் (Heidemarie Wieczorek-Zeul) தெரிவித்துள்ளார்.

ஆழிப் பேரலையின் இரண்டாவது நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக பேர்லின் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவிற்கான அனைத்து உதவிகளையும் தனது அமைச்சு நிறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நடவடிக்கையினை ஏனைய மேற்கத்தைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

http://www.playfuls.com/news_10_6165-Minister-No-Money-For-Sri-Lanka-Without-New-Peace-Process.html

Friday, December 22, 2006

தனிஈழமே தீர்வுஎன்றால், அதுவே நிரந்தரத்தீர்வு: கனிமொழி.

இலங்கை இனப் பிரச்னைக்கு தனி ஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கனிமொழி பேசியதாவது:
இலங்கை தமிழர் பிரச்னைக்கு இங்கு உட்கார்ந்து கொண்டு யாரும் தீர்வு கண்டு விட முடியாது. இப்பிரச்னைக்கு தனிஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு.

உலகில் எல்லா நாடுகளும் தங்கள் இன மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்கின்றன. இலங்கை தமிழர்களத் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச் சொல்லும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றார் கனிமொழி.
நன்றி>புதினம்.

தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும்: முதல்வர்.

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உலகமே அறிந்த ஒன்று.

இந்த 10, 15 ஆண்டு காலமாக வந்த உங்களையெல்லாம் வாழ வைப்பதற்கு உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் நடைபெற்றிருக்கிறதே அல்லாமல், உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற ஒரு காலம் வர வேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அது என்னவோ இலங்கைக்கு வர நான் பல முறை முயன்றுங்கூட, நடைபெறவில்லை. இயலாமல் போய்விட்டது. ஏன் இயலவில்லை என்றால், இலங்கையிலே இருந்த, இருக்கிற - அரசு எனக்கு அனுமதி தரவில்லை.

சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்கு செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒரு முறை இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதைச் சொன்ன போது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்று கூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டது.

இலங்கையிலே பல பெரியவர்கள் இலங்கையை அமைதி சூழ் நாடாக ஆக்க வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இலங்கையிலே ஒரு சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்பதற்காக முதல் குரல் கொடுத்தவர், சந்திரகாசன் தந்தை செல்வா தான் என்பதையும், அவர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சியையும் எண்ணிப்பார்க்கின்றேன்.

இலங்கையையே மையமாக வைத்து புதையல்,பாயும் புலி பண்டார வன்னியன் போன்ற கதைகளைக் கூட எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒரு சிலர் படித்திருக்கக் கூடும். இப்படி இலங்கையோடு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் எனக்குள்ள தொடர்பு என்றென்றும் பட்டுப் போகாத ஒன்று, பசுமையான ஒன்று.

இயல்பாகவே எங்களுடைய இரத்த ஓட்டத்திலே உள்ள உணர்வு தான் வெளிப்பட்டிருக்கின்றது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் தெரிவித்து விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கே தமிழகத்திற்கு வந்திருந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கின்ற உங்களை வழியனுப்பி வைக்கின்றேன். இப்போது தற்காலிகமாகத் தான் வழியனுப்பி வைக்க முடியும். விரைவில் உங்களையெல்லாம் மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழி அனுப்பி வைக்கின்ற அந்த நாள் வரட்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

பிரதமரை சந்தித்தனர், தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் சுப.வீரபாண்டியன் உரையாடுகிறார். அருகில் இரா.சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர்.
இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூடமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரமன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
சென்னையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பாக எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு குழுவினர் அளித்த நேர்காணல்:

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஈழத் தமிழர்களின் துயரங்களை விளக்கினோம்.
இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது.

நாங்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நியாயமானவைதான் என்று இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். மேலும் வடக்கு-கிழக்கு பிரிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் கெளரவத்தோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்பாகவும் வாழ வேன்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அண்மையில் இந்தியா வந்திருந்த சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சேவிடமும் இதனைத் வலியுறுத்தியிருக்கிறோம் என்றும் இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருடனான எமது சந்திப்பானது ஒரு திருப்புமுனையாகும் என்றனர் அவர்கள்.
இச்சந்திப்பின் போது இந்திய பிரதமரின் முதன்மை ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி>புதினம்.

Thursday, December 21, 2006

அன்ரன் பாலசிங்கம் பற்றி: கருணாநிதி மகள் கனிமொழி.




தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசிங்கம், தமிழர்களின் பெருமைகளையும், வலிகளையும், துயரங்களையும் உலக மக்களிடையே கொண்டு சென்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை, தத்துவங்களை உலக நாடுகளிடையே எடுத்துச்சென்ற பெருமை அவருக்கு உண்டு. அவர் போர்க்களத்திற்குச் சென்று ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. ஆனால், அவரே ஒரு ஆயுதமாக விளங்கினார்.

மறைந்த பாலசிங்கம் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார். அவரை போல் மக்களின் நியாயங்களை உலக நாடுகளிடையே கொண்டு செல்ல பல குரல்கள் உருவாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலாக மாற வேண்டும். அதற்காக இந்த நேரத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம். அந்த மக்களுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, பயங்கரவாதிகள் அல்ல, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியவர் அன்ரன் பாலசிங்கம். விடுதலைப் புலிகள் பற்றி தவறாக பிரசாரங்கள் செய்யப்படும் போது எல்லாம் அவர் அதை முறியடித்து தெளிவுபடுத்தினார்''என்றார்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி இராமச்சந்திரன் பேசும்போது, "விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துவைத்த சொல்வன்மை பெற்றவர் அன்ரன் பாலசிங்கம்''என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய குறுந்தகட்டை வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இணை பொதுச்செயலாளர் செல்வபெருந்தகை, இயக்குனர் செல்வபாரதி, மருத்துவர் வேலாயுதம், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தி.மு.கவின் விஜயா தாயன்பன், உள்பட பலர் பேசினர்.

படம்: தினத்தந்தி

Wednesday, December 20, 2006

"தேசத்தின் குரல்" பாலா அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்.







தேசத்தின் குரலே, எம்தேசியத்தின் குரலே!

கறுப்பு உருவத்துக்குள் ஒளிந்திருப்பது உமது வெள்ளை உள்ளம்,
அதானால்தான் வெள்ளை மேனியும் உனை விரும்பியதோ?
ஜந்து கருப்பு, பேச்சு வார்த்தை காலத்தில் இருந்து
எம்தேசத்தை காத்தவனே!
தலைவன் சுதந்திர தமிழீழத்தை நோக்கிய,
எமது பயனம் தொடருமென ஆணையிட்டதால்.
உன்பணி முடிந்ததென பாரினை விட்டு அகன்றீரோ?
உம் கனவாம் தமிழீழத்தை, இப்பாரினில் சமையாது
தமிழீழ தேசம் தூங்காது, இது உறுதி.


Tuesday, December 19, 2006

ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் : "த இன்டிபென்டன்"

"அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு.

லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது.

ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், அன்ரன் பாலசிங்கத்துக்கு நோர்வே நாட்டுப் பிரதமர் அனைத்துலக நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததாகவும் எழுதியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக குரல் தரவோ, முடிவுகள் எடுக்கக்கூடிய தகமையுள்ளவர் அன்ரன் பாலசிங்கம் என்றும் மாவோ மற்றும் சேகுவேரா போன்றோரின் கொள்கைகளில் கைதேர்ந்தவர் அன்ரன் பாலசிங்கம் எனவும் தன்னுடைய ஆய்வில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பல ஆய்வாளர்கள், பிரபாகரனுக்கும் பாலசிங்கத்திற்கும் இடையே இருந்த பொருத்தம், போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக வடிவமைத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் அணுகுமுறை 1985 இலிருந்து மிகவும் வெற்றிகரமான பேச்சுக்களை விடுதலைப் புலிகள் நடத்துவதற்கு உதவியிருந்ததுடன் இறுதியாக தோல்வியில் முடிந்த பேச்சின் போது அவர் வெளியேறியிருந்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர் குறிப்பிட்டுள்ளார்.

நோயின் பிடியில் துன்பப்பட்ட வேளையிலும் கடந்த மாதம் அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், தேசத்தில் எமது மக்கள் படும் துயரத்துடன் ஒப்பிடும் போது தனது நோய் ஒரு பொருட்டல்ல என தெரிவித்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Monday, December 18, 2006

சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி!!!

சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற்று வருகிறது என ரைம்ஸ் ஓஃப் இந்தியா செய்தி ஊடகம் கூறுகிறது.
நன்றி>புதினம்.

நிபுணர் குழு பரிந்துரையை, சிறிலங்கா நிராகரிக்கவுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட 17 பேர் அடங்கிய நிபுணர் குழு பல நாள் ஆய்வுக்குப் பின்னர் தீர்வுத் திட்டப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளை அனைத்துக்கட்சிக் குழுவினால் நிராகரிக்கப்படவுள்ளது என உள்வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தப் பரிந்துரையை முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களுக்கு உரிய உரிமையையும் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் அனைத்து நிலையிலும் வழங்க வேண்டும் என்பதே இப்பரிந்துரையின் சாராம்சம்.

இந்தப் 17 பேர் குழுவில், 11 பேர் கையெழுத்திட்ட பரிந்துரை ஒன்றும் இருவர் கையெழுத்திட்ட வெவ்வேறு பரிந்துரைகள் இரண்டும் ஒருவர் சமர்ப்பித்துள்ள பரிந்துரை ஒன்றுமாக மொத்தம் நான்கு பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன.

இந்த பரிந்துரைகளை ஒருங்கிணைத்துத் தருமாறு அரச தலைவர் மகிந்த கேட்டிருந்தார். எனினும் அதிக அளவில் 11 பேர் கையெழுத்திட்ட பரிந்துரையே அனைத்துக்கட்சிக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கருதப்படுகிறது.
நன்றி>புதினம்.

Sunday, December 17, 2006

தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது!!!

-முதல்வர் கருணாநிதி-

விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

"துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசினேன்.

இதுவரை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், இனி, நடக்கப்போவது நல்லவையாக இருக்க வேண்டும் என்று சோனியாவிடம் கூறினேன்.

எத்தனை துயரம் வாட்டி வதைத்தாலும், அதை மறந்துவிட்டு, மனித நேயத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இப் பிரச்சினை தொடர்பாக சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதம், இப் பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண எல்லோரையும் துணையாக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

-தினமணி
http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

"சிக்குன் குனியா" வேகமாகப் பரவுகின்றது: யாழ். மக்கள் அவதி.

யாழ். குடாநாட்டில் "சிக்குன் குனியா" நோய் வேகமாகப் பரவிவருகின்ற போதிலும் அங்கு வலி நிவாரணிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதால் மக்கள் நோய் தீர்க்க வழியின்றி பெரும் துன்பத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழுக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 வீதி மூடப்பட்டதையடுத்து குடாநாட்டிற்கான அனைத்து விநியோகங்களும் தடைப்பட்டுள்ளன. கப்பலில் பொருட்கள் அனுப்படுகின்ற போதும் அவை போதுமானவையாகவில்லை. கடந்த முறை அனுப்பப்பட்ட மருந்துகள் தீர்ந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். இணுவில் பகுதியிலேயே சிக்குன் குனியா நோய் ஆரம்பித்தது. எனினும் தற்போது நகர் பகுதியிலும் வெகுவாகப் பரவி வருகின்றது. நோயாளர்களால் யாழ். போதானா மருத்துவமனை நிரம்பி வழிகின்றது.

இந்த காய்ச்சலுக்கு நிவாரணமாக பரசிட்டமோல் மற்றும் புறுவன் மாத்திரைகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதிக் கொடுக்கின்ற போதும் புறுவன் மாத்திரையை எந்தக் கடைகளிலும் பெற முடியாதுள்ள அதேவேளை சில கடைகளில் பரசிட்ட மோல் ஒன்று 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை சிக்குன் குனியாவினால் அவதியும் வயோதிபர்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மாத்திரைகள் இல்லாமையினால் பெரிதும் துன்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி>புதினம்.

வல்வையில் 40 வயது பெண், பாலியல் வல்லுறவுசெய்து கொலை.

மக்கள் பயக்கெடுதியில் இராணுவத்தின் அடாவடித்தனம்.
நேற்று முன்தினம் வல்வையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் நிர்வாணமாக்கி ஓட விரட்டப்பட்டு கற்பழித்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று வல்வையில் இருந்து நமது நிருபர் அறிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்மணி வல்வையின் பழம் பெரும் நாடக நடிகர் திரு பெரியதம்பி அவர்களின் மகள் என்றும் கடற்கரும்புலி சிதம்பரத்தின் சகோதரியார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மரண விசாரணைகள் நடைபெறுவதாகவும், உடலம் கணவன் பிள்ளைகளிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் வல்வை நடராஜா வீதி இராணுவத்தின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும்
அத்தருணம் பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டதாகவும், இராணுவ முற்றுகையால் அந்த இடத்திற்கு யாரும் போக இயலாமல் இருந்ததாகவும் அறிய முடிகிறது. இது குறித்த விசாரணை அறிக்கைகளும், பிரேதபரிசோதனை அறிக்கைகளும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பலத்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்ஜிதம் செய்யப்பட்ட செய்திகள் கிடைக்க தொடர்பான செய்திகள் வெளிவரும்.

http://www.alaikal.com/index.php?option=co...8&Itemid=34

சந்திரிகாவின் நியமனத்தை யுனெஸ்கோ இடைநிறுத்தியது.

ஐக்கிய நாடுகளின் தென்னாசியாவிற்கான கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்த சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நியமனத்தை யுனெஸ்கோ இடைநிறுத்தியுள்ளது.

இவரின் நியமனம் தொடர்பாக சிறிலங்காவிலும், சர்வதேச நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆசிய நாடுகளுக்கு இவர் மேற்கொள்ளவிருந்த பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.

Saturday, December 16, 2006

சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: சோனியா.

தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை சிறிலங்கா அரசு பயன்படுத்தும் என்பதால் அந்நாட்டு அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உறுதியளித்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெடிமருந்து பொருட்களை எடுத்து சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியது தொடர்பாக கடந்த 11 ஆம் நாள் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. உங்களின் கவலையை நான் முழுமனதாக உணர்கிறேன். நாம் 9 ஆம் நாள் சந்தித்த போதும் இந்த விவகாரத்தை நீங்கள் பேசினீர்கள்.

இந்த வெடிமருந்து பொருட்கள், கடல் அகழ்வுப் பணிகளான மண் தோண்டுதல், பாறைகளை உடைத்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை மூலமாக தனியார் வெடிமருந்து விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கானவை என்று கப்பல் முகவர் கூறுவதாக எனக்கு கூறப்பட்டு உள்ளது. இது சரிதானா என்பதை அறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

எந்த சூழ்நிலையில் எந்த அதிகாரியால் இந்த வெடிமருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது என்று ஆழ்ந்து விசாரிக்கப்படும் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டு உள்ளது. சிறிலங்கா அரசுக்கு எந்தவித ஆயுதங்களோ, பொருட்களோ, அவை பொதுமக்கள் மீது, சிறப்பாக தமிழ் மக்கள் மீது பயன்படுத்தக் கூடும் என்பதால் அவற்றை வழங்குவதில்லை என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்று மத்திய அரசு எனக்கு உறுதியளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நலன்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உயிரையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடிய எவற்றையும் செய்யக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:


இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலும் தமிழர்களின் பல அப்பாவி உயிர்கள் பறிபோய்விட்டது மிகவும் கவலையையும், துயரத்தையும் அளிக்கும் விடயமாகும். இத்தகைய வன்முறை சம்பவங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்று நாங்கள் உறுதியாக குறிப்பிட்டு வருகிறோம். அப்பாவி மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தில் பொருத்தமான அத்தனை மட்டங்களுக்கும் இதை எடுத்துச் சென்று இலங்கையில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து கவலையை எடுத்து சொல்லி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை பெறும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் அவசர அவசியத்தையும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. தொடர்ந்து இந்த விடயம் மேலான கவனத்தில் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, December 15, 2006

பெரும் வெற்றிடம் தோன்றும்: ரவூப் ஹக்கீம்.

தேசத்தின் குரலின் மறைவினால் புலிகள் அமைப்பில் பெரும் வெற்றிடம் தோன்றும்: ரவூப் ஹக்கீம்.

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழர் இனப்பிரச்சனையில் அவரது அர்ப்பணிப்பையும், பேச்சு மேசையில் அவருக்கு இருந்த அபரிமிதமான திறமைகளையும் நான் கண்டு வியந்திருக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இடம்பெற்ற ஆறுகட்டப் பேச்சுக்களில், விடுதலைப் புலிகள் குழுவுக்கு அன்ரன் பாலசிங்கம் தலைமை தாங்கியபோது, அரச குழுவில் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு, விடுதலைப் புலிகள் அமைப்பில் மிகப்பெரிய வெற்றிடமொன்றை உருவாக்கிவிட்டது. தலைமையின் முடிவுதான் இறுதியானது என்ற ஒற்றைக் கொள்கைத்தன்மை கொண்ட விடுதலை அமைப்பில், தானும் சுயமாக முடிவுகளை எடுத்து, எடுத்த முடிவுகளின் வழி உறுதியாக நிற்கும் திறமை கொண்டவர் அவர்.

செப்ரம்பர் 2002 இல் லண்டனில் அவரைத் தனியாகச் சந்தித்தபோது, முஸ்லிம் தரப்பிற்கும் தனியான பேச்சுக்குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை, அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், இதன் பின்னர்தான் எரிக் சொல்ஹெய்மும் இந்தக் கருத்தை வெளிப்படுத்த அவர் மூலம் இணக்கமான ஒரு சூழல் உருவானது என்றும் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் பல்வேறு நோய்களாலும் பாதிப்படைந்து துன்பங்களை அனுபவித்தாலும், இனப்பிரச்சனை தொடர்பில் உறுதியுடன் செயற்பட்டார். அண்மைக் காலத்தில் அவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்தமை போன்ற விடயங்களை நோக்கும்போது, அரசியல் யதார்த்தத்தை அவர் உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்பதை அவதானிக்கலாம் என்றும் ஹக்கீம் கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் அன்ரன் பாலசிங்கத்தின் பயணத்தில், இணையற்ற தோழியாக அவருடன் வாழ்ந்த அவரது துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துக் கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

"தேசத்தின் குரல்" மறைவுக்கு கருணாநிதி அனுதாபம்.

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறியிருப்பதாவது:

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதி தழைத்திட விரும்பிச் செயற்பட்ட நம் போன்றாரிடமும், நோர்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும், ஆற்றலாளரும், அன்பின் உருவமாகத் திகழ்ந்தவரும், இறுதியாக இமைக் கதவுகள் மூடும் வரையில் ஈழத்தின் சுயமரியாதை சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவருமான என்னரும் நண்பர் பாலசிங்கம்.

அவரது மறைவுச் செய்தியைப் பலகாலம் அவருடன் பழகிய என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புத் துணைவியாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி>புதினம்.

Thursday, December 14, 2006

"தேசத்தின் குரல்"


தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
14.12.2006

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிர்ஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.
பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்" என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு?


-குமுதம் ரிப்போர்ட்டர்-

இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி.

இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள் சப்ளைக்கு மத்திய அரசு எந்த வித அனுமதியும் அளிக்கவில்லை' என்று தான் விசாரித்ததில் தெரியவந்துள்ளதாக அறிக்கை கொடுத்திருக்கிறார் முதல்வர்.

டெல்லியில் இருந்த முதல்வர் கருணானிதி, மத்திய அமைச்சர் தயானிதிமாறன் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் , பிரணாஜ் முகர்ஜிடம் 'வெடி மருந்து சப்ளை' விவகாரம் சம்பந்தமாக விசாரித்துள்ளார். இதற்கு 'அப்படி எந்த அதிகார பூர்வமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை' என்று அமைச்சர் பிரணாஜ் முகர்ஜி பதில் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியை 9.12.06 அன்று நேரில் சந்தித்து இது குறித்துப் பேசியுள்ளார். அப்போது' வெடிமருந்து சப்ளைக்கு எதுவும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், உடனே இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் முதல்வரிடம் அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

இவ்விசயத்தை முதல்வர் இதோடு விட்டுவிடவில்லை.' வியாபார ரீதியாக அரசுக்குத் தெரியாமல் எதாவது நடந்திருக்குமா என்பது குறித்தும் உடனடியாக விசாரித்து அறிய, தமிழக காவல் துறைக்கு டெல்லியில் இருந்தே முதல்வர் கருணானிதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தனை காரியங்களையும் செய்துவிட்டுத்தான், தமிழக முதல்வர், ராமதாஸின் அறிக்கைக்குப் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தமிழக அரசின் இந்த அறிக்கையை அதிரடியாக மறுக்கின்றனர் 'டெல்' என்கிற தமிழ்னாடு வெடிமருந்து நிறுவனத்தினைச் சேர்ந்த தொழிற்ச்சங்கத்தினர்.

'தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் துளியும் உண்மையில்லை'. இந்த 'டெல்' தொழிற்ச்சாலையில் இருந்து கடந்த 88ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வெடிபொருட்கள் சப்ளையாகிறது. இலங்கையைச்சேர்ந்த அக்ரம் என்பவர் 'ஸிட்டர்ஸ்' என்கிற பெயரில் சரக்கை எடுக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட, ஒரு லோடு வெடிபொருள் சப்ளையானது.அதுமட்டுமில்லாமல
, அடுத்தமாதமும் ஒரு லோடு கேட்டு அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளார்.

சிறிலாங்காவிற்கு மட்டுமல்லை, ஜோர்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட எங்கள் தொழிற்ச்சாலையிலிருந்து வெடிபொருட்களை வாங்க ஏஜெண்டுகள் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டுவரை இங்கு முதன்மை இயக்குனராக இருந்த திரிபால் ஜ.ஏ.எஸ் அவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியுமே. தற்பொழுது திரிபால் தமிழக முதன்மைச் செயலாளராக இருக்கும் வேளையில், முதல்வருக்கு இது குறித்து தெளிவாக விளக்கியிருக்கலாமே" என்று கேட்டவர்கள் "தயவு செய்து எங்கள் பெயரை வெளியிட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்கள் சொல்வது உண்மையென்றால், தமிழக முதல்வர் அதிரடியாகப் பல இடங்களில் விசாரித்துவிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு என்ன அர்த்தம்?. இதற்கு முதல்வர் தான் பதில் சொல்லவேண்டும்.
நன்றி> குமுதம் ரிப்போர்ட்டர்

பேச்சுவார்த்தை அர்தமற்றது? யுத்தத்தில் சிறிலங்கா அரசு!!!

பேச்சுவார்த்தை அர்த்தமற்றது, யுத்தத்தில் அரசு வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா, நோர்வே- இந்தியா உட்பட்ட அனைத்துலக நாடுகளின் போக்கையும் கடுமையாக சாடியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்னிங்க் லீடர்" வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

கேள்வி: மிகமோசமான அழிவை இந்நாடு சந்திக்க நேரிடுமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடந்தகால தாக்குதல்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் எடுத்தால், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்நாடு தயாராக இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக, நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு ஏன் தயாராக இருக்கக்கூடாது? ஆனால், சு.ப.தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கைகளெல்லாம் வெறும் வார்த்தையில் மட்டும் தான். விடுதலைப் புலிகள் ஒரு தோல்வியடைந்த அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கு கிழக்கில் போர் நடந்தாலும், நாடு சீராகவே இயங்குகிறது. கொழும்பில் வாழும் மக்கள் தங்களது அன்றாடக் கடமைகளை வழமைபோன்று செய்து வருகிறார்கள். இந்நாட்டுக்கு வந்துபோக விரும்புபவர்களும், வழமைபோன்று வந்து செல்கிறார்கள்.
இருந்தாலும், எங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரும், சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடாகத் தோற்றம் கொடுத்து வருகிறார்கள். நாட்டில் இருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க, மிகப் பலமான ஒரு யுத்தத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கும்போது, எப்படி அவர்கள் இந்நாட்டை தோல்வியடைந்த நாடாகக் கருத முடியும்? விடுதலைப் புலிகள் வெற்றி பெறவில்லை. அவர்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. விடுதலைப் புலிகள் சொல்வதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு நகைப்பிற்குரிய கூட்டம். பேசுவதில் வல்லவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆனால் அவரது மிரட்டல்கள் எல்லாம் அர்த்தமற்றவை தான்.

அரசாங்கம் தற்போது கவனத்தில் எடுக்கவேண்டியது அகதிகள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வரும் வடக்கு கிழக்கு பகுதிகளைத் தான். அவர்களுக்கு உதவியும் நிவாரணமும் வழங்கும் அரசின் முயற்சிகள் எல்லாம் விடுதலைப் புலிகளால் தொடர்ந்து தடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணியதில்லை. அதனால், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். கொழும்பில் இடம்பெறும் அத்தனை கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்கும் விடுதலைப் புலிகளே காரணம். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கும் அழிப்பதற்கும் விரும்பும் இன்னும் பலரும், கொழும்பிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் துரோகிகள்.

சு.ப.தமிழ்ச்செல்வன் ஏன் இப்படி பயமுறுத்துகிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏனென்றால், அவர் ஒரு பயங்கரவாதி, பயங்கரவாத செயல்களை முன்னெடுக்கவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளார். தற்போது விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச நாடுகளும் துணை போகின்றன. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேசம் உதவி செய்கிறது.

இங்கு எமது நாட்டில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவினர் கூட துரோகிகள் தான். ஒற்றையாட்சியைக் கொண்ட நாடு என்பதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறியிருக்கையில், மகிந்தவுக்கு எதிரான முடிவை அவர்கள் எடுத்திருப்பது துரோகச் செயல்.
இந்நாடு ஒன்றை இப்போது புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்களைப் பயமுறுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் விடும் மிரட்டல்கள் எல்லாம் பொய்யானவை என்பதை மக்கள் விளங்க வேண்டும்.

கேள்வி: சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

பதில்: மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நாள்முதல், விடுதலைப் புலிகளைப் பேச்சுக்கு வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அன்றுமுதல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். தனிநாட்டை அரசு அனுமதிக்க முடியாது. ஒரு பயங்கரவாத குழுவுக்கு, அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கவும் முடியாது. மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நாள்முதல், சர்வதேச சக்திகள், விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தி வருகின்றன.
படையினர் மத்தியிலும் பல்வேறு துரோகிகள் இருக்கிறார்கள். இவர்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். பல ஆயிரம் பேர் இந்த துரோகத்தால் உயிரிழக்கிறார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. அப்பாவிப் பொதுமக்களும் படையினரும் தினமும் மடிகிறார்கள்.

நோர்வே நாட்டவர்கள் தான் மிக மோசமான துரோகிகள். அவர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றுதான். விடுதலைப் புலிகளைப் போன்றுதான் அவர்களும் செயற்படுகின்றனர். வார்த்தையில் எல்லாம் சொல்வார்கள், ஆனால் செயலில் எதுவும் இல்லை. அகதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் உதவி செய்வதற்கு நோர்வே நாட்டவர்கள் உதவியிருக்கிறார்களா? விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென்று நோர்வே கோரியதா? குறிப்பிட்ட தங்களது இடத்திற்கு வரவேண்டாமென விடுதலைப் புலிகள் கோரினால், இவர்கள் போகாது தவிர்க்கிறார்கள். நோர்வேக் காரரை, இரு என்று விடுதலைப் புலிகள் சொன்னால் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு தலைவணங்குபவர்களாக நோர்வேக்காரர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் எப்படி அனுசரணையாளர் என்று அழைப்பது? மக்கள் வெளிப்படையாகப் பேசும் காலம் வந்துவிட்டது. இந்த நாட்டை நோர்வேக்காரர்கள் அழிப்பதற்கு முன்னர், அவர்களை வெளியேறும்படி மக்கள் கோர வேண்டும்.

கேள்வி: இராணுவ ரீதியாக போரை வெற்றிபெற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியும். பல நூற்றாண்டுகளாக இந்த நாடு யுத்தங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த யுத்தத்தை மட்டும் ஏன் வெற்றிபெற முடியாது? இந்நாடு, தமிழர்களுக்கு எதிராக போர் புரியவில்லை. தங்களைத் தமிழின தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பயங்கரவாத குழுவுக்கெதிராகவே போர் தொடுத்துள்ளது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு குழுவினர், இந்நாட்டு கலாச்சாரம், மக்கள் ஏன் நாட்டையும் அழிக்க முற்படுகிறார்கள்.

கேள்வி: பேச்சுவார்த்தைகளில் ஏதும் நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக எதுவும் இல்லை. ஜெனீவா பேச்சுக்களில் எதை அடைந்தோம்? ஒன்றுமில்லை. அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நாம் பேச்சுக்கு செல்கிறோம். மற்றப்படி, இராணுவ ரீதியாக எம்மால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும்.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடும் அனைத்துலக சமூகம், சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுப்பது துரதிர்ஸ்டமானதல்லவா?

பதில்: நாம் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அல்லது அவர்கள் சிறிலங்காவை தோல்வியடைந்த நாடாக பட்டியலிட்டு விடுவார்கள். அவர்களுக்கு நாம் பிரமாணிக்கமாக நடக்கத் தவறினால், உதவிகளை நிறுத்துவார்கள். அகதிகளுக்கான நிவாரணங்களை நிறுத்துவார்கள். ஏற்கனவே பலதடவை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஏன், எங்களது அண்டை நாடான இந்தியா கூட, வடக்கு கிழக்கு இணைப்பை உச்சநீதிமன்றம் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கி பிரித்ததை, தவறு என்கிறது. எமது நாட்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை, வேறு ஒரு நாடு எப்படி குறை சொல்லலாம்? விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு நாம் போகாவிட்டால், சர்வதேச நாடுகள் எங்களைக் குறை சொல்வார்கள்.

கேள்வி: அப்படியானால், சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுக் கிடப்பதாக கருதுகிறீர்களா? அரசாங்கம் சுயமாக சிந்திக்க முடியாதா?

பதில்: இல்லை, நாம் சர்வதேச சமூகத்தின் தயவில் இருக்கவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள அகதிகளுக்கு உதவி செய்வதற்காக சர்வதேசத்தின் உதவி எமக்குத் தேவை. அதனால், ஒரு அளவிற்கு அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டியுள்ளது.

கேள்வி: அரச படைகள் மத்தியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால், புலிகள் பக்கத்தின் உயர்மட்டத்தில், அரச புலனாய்வுப் பிரிவினர் ஊடுருவ முடியாதிருப்பதற்கு என்ன காரணம்?

பதில்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு திராணியற்றது. மிகவும் நலிவடைந்து விட்டது. ஆனால், எங்களது படையினர் மத்தியில் இருக்கும் துரோகிகள் பலர், விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். அதற்கு விடுதலைப் புலிகள் லஞ்சப் பணத்தை வழங்குகிறார்கள். கடந்த காலத்திலும் படையின் உயர்மட்டத்திலிருந்த சிலர், பெருந்தொகை லஞ்சப் பணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். இதனால், பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளின் அதிர்ஸ்டம், அவர்களது அமைப்பிற்குள் துரோகிகள் இல்லை.

கேள்வி: மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், தாக்குதல் ஆபத்துக்களை நிறுத்துமா?

பதில்: எவ்வாறு இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்பதில்தான் அது இருக்கிறது. முதலில், இந்தச் சட்டம் பற்றி, காவல்துறை மற்றும் படையினருக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தச் சட்டத்தை துஸ்ப்பிரயோகம் செய்யும் நிலமை குறித்து எச்சரிக்கப்பட வேண்டும்.
1995 இல் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தும்படி நான் கோரியபோது, தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.தொண்டமான் எதிர்த்ததுடன், என்னை ஒரு இனவாத காவல்துறை அதிகாரி என்றும் கண்டித்தார். தமிழரைக் கொல்வதாகக் குற்றம் சுமத்தினார். ஆனால், அப்போது இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால், இப்போது நாடு இந்த நிலைக்குப் போயிருக்காது.

இதற்குப் பதிலாக, 2002 இல், அர்த்தமற்ற ஒரு ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் உருவாக்கி கைச்சாத்திட்டார். யுத்த நிறுத்த ஒப்பந்தம், விடுதலைப் புலிகள் நகருக்குள் ஊடுருவவும், மேலதிக ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளவும், தற்கொலை மற்றும் கொலைகளைப் புரியவுமே இடமளித்தது.

கேள்வி: யுத்த நிறுத்த ஒப்பந்தம், அதனது நோக்கத்திற்கு உதவுகிறதா?

பதில்: யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டதாக விடுதலைப் புலிகள் கூட சொல்லி விட்டார்கள். அதற்குப் பின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இப்போது என்ன இருக்கிறது?

கேள்வி: ஆனால், அந்த ஒப்பந்தத்தை அரசு தொடர்ச்சியாக மீறுவதால்தான் அந்த ஒப்பந்தம் செயலிழந்ததாக விடுதலைப் புலிகள் சொல்லியிருக்கிறார்களே?

பதில்: விடுதலைப் புலிகள் அப்படித்தான் சொல்வார்கள். உலகத்திற்கு தாங்கள் சுத்தமாக இருப்பதாக காட்டவேண்டி இருக்கிறது. யுத்த நிறுத்தத்தை அரசு மீறியிருப்பதாக சொல்வது உண்மைதான். ஆனால் மக்களைப் பாதுகாப்பதற்காகவே நாம் அதை மீறுகிறோம். ஆனால், விடுதலைப் புலிகள் அந்த ஒப்பந்தத்தை நாளாந்தமும் மீறுகிறார்கள்.

கேள்வி: ஏ-9, ஏ-15 பாதைகளை அரசாங்கம் மூடி வைத்திருப்பது யுத்தநிறுத்த மீறல் இல்லையா?

பதில்: முகமாலை முன்னரங்கத்தை யார் தாக்க ஆரம்பித்தார்கள்? ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாணத்திற்கு யார் ஆயுதம் கடத்தினார்கள்? மக்களின் உயிர் மிகவும் விலையுயர்ந்தது என்பதை அரசு கவனத்தில் கொண்டு மட்டுமே ஏ-9 பாதையை மூடினோம். பொதுமக்களின் உயிர் எமக்கு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் உயிரைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.

கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தநிறுத்த மீறலில்லையா?

பதில்: அது யுத்தநிறுத்த மீறல் அல்ல. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.

கேள்வி: காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு, பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி மகிந்த விளக்கமளித்து விட்டாரா?

பதில்: இதுவரை இல்லை. ஆனால் அப்படி விளக்கமளிக்க என்ன இருக்கிறது? பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்ப்பிரயோகம் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கை மட்டுமே, காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வளவு தான்.

கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டம், ஊடகங்களை நசுக்குவதற்கும் எவ்வகையிலாவது பயன்படுத்தப்படுமா?

பதில்: ஊடக செயற்பாடுகளை, பயங்கரவாத தடைச்சட்டம் எதுவிதத்திலும் பாதிக்காது என்ற உத்தரவாதத்தை என்னால் தர முடியும். இந்த தடைச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் கூட, ஊடகவியலாளர்கள் மிரட்டப் பட்டார்கள், கடத்தப்பட்டார்கள்.

ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் இதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம், எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என, ஊடகவியலாளர்களுக்கு மகிந்த, ஏற்கனவே உத்தரவாதம் வழங்கியுள்ளார். இதை ஊடகவியலாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாத விடயத்தை பெரிதாக ஊதிக்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நன்றி>புதினம்.

Wednesday, December 13, 2006

ஆய்வறிக்கையின் பின்னணியில் இந்தியா?

அனைத்துக் கட்சி கூட்டத்துக்காக நிபுணர்கள் குழு தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தீர்வுத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வறிக்கையும் பரிந்துரையும் நிபுணர் குழுவினரால் கையளிக்கப்பட்ட மறுநாளே "ஹிந்து" நாளிதழில் (டிசம்பர் 7) அந்த அறிக்கை விவரங்கள் வெளிவந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஆய்வறிக்கை குறித்து இந்தியா ஏற்கனவே அறிந்துள்ளது என சிறிலங்கா அரசு சந்தேகப்படுகிறது.

ஆய்வறிக்கையைக் கையளித்தவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதில் விக்னேஸ்வரன் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக தனியாக, சுயாட்சி உரிமையுள்ள மாகாணத்தை அமைக்கும் திட்டம் பரிந்துரையில் உள்ளதும் இந்தச் சந்தேகத்துக்கு வலுச் சேர்த்துள்ளது. இத்தகைய திட்டம் ஒன்று முன்னுரைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டதாக எந்தத் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அது பிரசுரமாவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என அரச தலைவர் மகிந்த, அமைச்சர் டியூ.குணசேகராவிடம் கூறியிருந்தார். ஆனால் மகிந்த பார்வையிடுவதற்கு முன்னதாகவே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பரிந்துரைத் திட்டம் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நன்றி>புதினம்.

சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்.

ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது.

சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிங்களக் கிராமங்கள் எறிகணை வீச்சுக்களால் பாதிப்படைந்ததால், அப்பகுதி மக்கள், தங்கள் பாதுகாப்புக்காக, ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழி அமைக்கும்படியும், அரசு இதற்கு உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Tuesday, December 12, 2006

பொதுமக்கள் மீது தாக்குதல்: ஐ.நா கண்டனம்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான கடுமையான எறிகணைத் தாக்குலை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1,200-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

மேலும் கிழக்கில் தொடரும் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்களை கவசமாகப் விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 30,000 முதல் 35,000 வரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வாகரையில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கின்றனர். 3,000-க்கும் அதிகமான சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வசமுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.

"வாகரை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை உரிமைகளே நசுக்கப்பட்டுள்ளன" என்று இடைக்கால ஐ.நா பிரதிநிதியும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளருமான அமின் ஆவட் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேரடியாகத் தாக்குதல்களை நடத்துவது அதிகார துஸ்ப்பிரயோகமாகும். இராணுவச் செயற்பாட்டுகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தடை எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவதற்குப் பொதுமக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
நன்றி>புதினம்.

வாகரை பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா அவசர கோரிக்க!!!

ஐக்கிய நாடுகள் சபை இன்று விடுத்த அவசரகோரிக்கை ஒன்றில் வாகரைப் பிரதேசத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் வாழும், தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீதான எறிகணைத்தாக்குதலை உடன் நிறுத்துமாறும், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச உதவி நிறுவனங்களை இப்பிரதேசங்களில் செயற்பட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது. சர்வதேச சட்டங்களை கடைப்பிடிக்கும்படியும் கோரியுள்ளது.

தற்போது இராணுவ நடவடிக்கை இடம்பெறும் பிரதேசங்களில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் யாவும் மீறப்பட்டுள்ளன என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி>பதிவு.

இந்திய மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதல்ல.

-பழ.நெடுமாறன்.

இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதல்ல என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "வீரகேசரி" நாளேட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானமொன்று அண்மையில் தமிழக சட்டபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

பதில்: அந்த தீர்மானம் மிகவும் நல்லபடியானதாகும். எனினும் அது மட்டும் போதாது. இந்திய அரசின் ஓர் அங்கமாக தி.மு.க உள்ளது. இந்திய அரசை வழிநடத்தும் மூத்த தலைவர்களில் ஒருவராக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காணப்படுகிறார். எனவே இவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேரடியாக பேசி இதற்கு ஒரு நல்ல முடிவை காணலாம். ஏனெனில் மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் இயங்கி வருகின்றது. எனவே டெல்லி சென்று முதல்வர் அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்து ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து விளக்கி அவர்களின் துயரைத் துடைக்க முடியும். அதனையே தமிழக முதல்வரிடம் உலகத் தமிழர்கள் இன்று எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி: இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு தங்கள் துயரைத் துடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். இது எந்த அளவு தூரம் சாத்தியமாகும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழகத்திடம் உள்ளது. இந்தியாவின் கீழப்புரத்தில் இலங்கையும் வடக்கே நேபாளமும் இருந்து வருகின்றது. நேபாளத்தில் மன்னர் ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துன்பப்பட்டனர். இதன் போது இந்திய இடதுசாரிகள் இந்தியப் பிரதமருக்கு கொடுத்த நிர்ப்பந்தமே இன்று நேபாள மக்கள் மீண்டும் ஜனநாயக உரிமைகளுடன் மக்கள் வாழ வழி கிட்டியதுடன் மன்னரின் அதிகாரமும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் இது போன்று மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக முதல்வரும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் மேற்கொள்வாரேயானால் நிச்சயம் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வழி அமைக்க முடியும்.

கேள்வி: வடபகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. அந்த நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?

பதில்: வடபகுதி மக்களுக்கு இந்திய அரசு உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென தமிழகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. எனினும் அது இதுவரை சாத்தியமாகவில்லை. குறைந்தபட்சம் ஏ-9 வீதியை திறப்பதற்கேனும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை யாவும் தமிழக அரசின் நிர்ப்பந்தத்திலேயே தங்கியுள்ளது. தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே மக்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசு இதனை உணர்ந்து இலங்கை தமிழர்களின் துயரைத் துடைக்க தம்மால் ஆன பணிகளை கூடுமான அளவு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் சக்தி ஆதரவு காரணமாகவே இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பு தயக்கமான போக்கை காட்டி வருகின்றது. அண்மையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா வருகை தந்ததுடன் இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பினும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எனினும் இந்தியா அதனை மேற்கொள்ள முன்வரவில்லை. இவை அனைத்துக்கும் தமிழக மக்களின் உணர்வு ரீதியான எதிர்ப்பே காரணமாகி விட்டன. எனவே தமிழ்நாடு மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளிலேயே ஈழத்தமிழர்களின் துயரம் முடிவுக்கு வரும் நிலை உள்ளது.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அண்மையில் ஆற்றிய மாவீரர் தின உரையில் தமிழருக்கு தனித்தமிழரசே ஒரே மார்க்கம் என்று கூறி இருந்தார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த அறிவிப்பை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை ஏற்றுத்தான் புலிகள் போர்நிறுத்தம் செய்தனர். சமாதானப் பேச்சை ஆரம்பித்தனர். ஆனால் அதனை சிறிலங்கா அரசு அப்பட்டமாக மீறி உள்ளது. இதனை உணர்ந்து சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் பிரச்னைக்கு ஒரு முடிவு கிட்டும்.

கேள்வி: இந்திய அரசு தனி அரசை அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று கூறப்படுகின்றதே இந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும்?

பதில்: இந்திய அரசு முதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகி அவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டும். சிறிலங்கா அரசின் போக்கின் காரணமாகவே இன்று இந்த நிலை உருவாகி உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். மனித பேரவலம் இலங்கையில் உருவாகி உள்ளது. இந்நிலையில் அதனைப் போக்கவும் தமிழர்களுக்கு நிலையான தீர்வு கிட்டவும் வழிவகுக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவுக்கு பெரும் கடமைப்பாடு உள்ளது. எனவே இலங்கை விவகாரத்தை இந்தியா மெல்ல தட்டிக் கழித்து விடக்கூடாது.

கேள்வி: இலங்கையிலிருந்து வரும் அகதிகள், இளைஞர்கள் கியூப்பிரிவு காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தடுத்து வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: இளைஞர்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்க வேண்டிய உள்ளது. அகதிகள் உண்மையில் சிறை முகாம்களில் இருப்பதைப் போன்றே காணப்படுகின்றனர். புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் இளைஞர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள அகதிகளை பராமரிக்கும் பொறுப்பினை யூ.என்.எச்.சி.ஆர். ஈழ அகதிகளை அவர்களின் பொறுப்பில் விட தமிழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லையென இந்திய மத்திய அரசு கூறுகின்றது. எனினும் அண்மையில் மதுரை அருகே உள்ள மேலூரில் பெருந்தொகை வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகள் தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன?

பதில்: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்காவுக்கு அபாயகரமான ஆயுதங்களை வழங்கப்போவது இல்லையென உறுதியாகக் கூறியுள்ளார். எனினும் வெடிமருந்துகள் அனுப்பப்பட்டவை பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக இதனை மறுத்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றே அரசின் அனுமதியின்றி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய மத்திய அரசின் அனுமதியின்றி அன்னிய நாடு ஒன்றிற்கு வெடிமருந்துகளை அனுப்பி வைக்க முடியாது. அவ்வாறு இந்திய மத்திய அரசிற்கு தெரியாமல் இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்படுமானால் அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.

பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இவ்வாறு நடந்து கொண்டவர்கள் அல்லது ஆயுதக் கடத்தலுக்கு துணை புரிந்தவர்கள் மீது இந்திய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை தமிழக அரசு இதனை பறிமுதல் செய்திருக்கலாம். அதனை விடுத்து அவர்களும் பத்திரமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளது உகந்தது அல்ல.

கேள்வி: இறுதியாக இலங்கைத் தமிழருக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இலங்கை தமிழர்கள் எமது சகோதரர்கள். அவர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகுந்த உறுதியுடன் காணப்படுகின்றனர். எனவே, அவர்கள் நம்பிக்கையுடனும் அஞ்சாமலும் வாழ வேண்டுமென கூற விரும்புகிறேன்.
நன்றி>புதினம்.

Monday, December 11, 2006

இலங்கைக்கு ஆயுதம்: இந்திய தளபதி ஒப்புதல்!!!

கொழும்பு: இலங்கை கடற்படைக்கு ரேடார்கள், சோனார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுத தளவாடங்களை விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் இனவெறித் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கைக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும், இந்தியா வழங்கக் கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகள் செய்யப்பட மாட்டாது என அவ்வப்போது உறுதி கூறி வருகிறது.

ஆனால் சமீபத்தில் மதுரைக்கு அருகே இலங்கை கடற்படைக்கு வெடிபொருள் அனுப்பப்பட்ட லாரி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வெடிபொருள் அனுப்ப அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக பல ரகசிய நிகழ்வுகள் நடந்து வருவதை கொழும்பிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த வெடிபொருட்கள், விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ்கள் செய்தியை திரித்து அனுப்பியுள்ள அதே நேரத்தில், இலங்கைக்கு பல்வேறு வகையான ராணுவ தளவாடங்களை அனுப்ப இந்திய அரசு, அனுமதி அளித்துள்ளதை கடற்படை தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் போட்டு உடைத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி:

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு விடுத்த கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறுகையில், இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையானதாக கருதப்படும் ஆயுத உதவியை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தாக்குதல் ஆயுதங்களைத் தருவதில்லை என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ள போதிலும், இலங்கையின் இறையாண்மையை காக்கத் தேவையான ராணுவ ரீதியிலான உதவியை செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்துடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். தற்போது சோனார்கள், ரேடார்கள், மின்னணு போர் தளவாடங்கள், கடற்படைக்குத் தேவையான தாக்குதல் துப்பாக்கிகள் போன்றவற்றை இலங்கைக்கு வழங்கவுள்ளோம்.

சில ஆயுத தளவாடங்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதி கிடைத்து விட்டது. இதுதொடர்பாக இலங்கை அரசு விடுத்த மேலும் பல கோரிக்கைகளையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு அருகாமையில் உள்ள இலங்கை, மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் நல்ல உறவு நீடிக்கிறது என்று கூறியுள்ளார் அருண் பிரகாஷ்.

அருண் பிரகாஷின் இந்தப் பேட்டிக்கும், மதுரை அருகே பிடிபட்ட இலங்கைக்கான வெடிபொருள் லாரிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த ஆயுத வினியோகம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு முதல்வர் கருணாநிதியிடமே 'பொய்' சொல்லியிருக்கக் கூடும் என சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கனவே மேனன் மற்றும் நாராயணன் ஆகியோரை இலங்கை விவகாரத்தில ஈடுபடுத்துவதற்கு தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. காரணம் இருவருமே மலையாளிகள். இருவரும் இலங்கை அரசுக்கு சாதகமான கருத்தைக் கொண்டவர்கள்.

பாதுகாப்பு ஆலோசகராக நாராயணன் நியமிக்கப்படுவதற்கு முன்பு விடுதலைப் புலிகள் குறித்து காட்டமாக கட்டுரைகளை எழுதி வந்தவர் நாராயணன். அவர் தற்போது பிரதமரின் ஆலோசகராக இருப்பதால், அவரது ஆலோசனை எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமரை சந்தித்து ஆயுத உதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அப்போது, நிச்சயம் அதுபோன்ற உதவி வழங்கப்பட மாட்டாது என பிரதமரும் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அருண் பிரகாஷ் கொடுத்த பேட்டியைப் பார்க்கும்போது எல்லாமே தலைகீழாக இருப்பதாக தெரிகிறது. தமிழக அரசியல் தலைவர்களிடம் ஒரு நிலையும், இலங்கையிடம் இன்னொரு நிலையும் என இரட்டை நிலையை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக தெரிய வருகிறது.

இலங்கை அரசு தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை கிட்டத்தட்ட 28 சதவீதம் அதிகரித்துள்ளது. உக்ரைனிடமிருந்து 4 மிக் போர் விமானங்களை வாங்கவுள்ளது இலங்கை. இதேபோல 20 டி 55 ரக டாங்குகள், 5 சி130 ரக விமானங்கள், 10 பக்தர் ஷகான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

ஏ 9 , ஏ 15 ஆகிய சாலைகளை ராஜபக்ஷே அரசு ஏற்கனவே மூடி விட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்தும், பிற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது என ராஜபக்ஷே அரசின் போக்கைப் பார்க்கும்போது தமிழர்கள் மீது இறுதித் தாக்குதலை தொடுக்க இலங்கை திட்டமிட்டிருப்பதை உணரலாம்.

இதுதவிர தமிழர்களுக்கு எதிரானதாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலுக்கு இலங்கை தயாராகி விட்டதை உணரலாம்.

மொத்தத்தில் கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என தமிழகத் தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைகளை ஏற்பது போல தலையாட்டி விட்டு மறுபக்கம் இலங்கைக்கு பெரும் ஆயுதக் குவியல்களை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்து விட்டது புரிகிறது. அருண் பிரகாஷின் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்:

இந் நிலையில் நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்தன.

கோடியக்கரையைச் சேர்ந்த 80 மீனவர்கள் 45 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் பகுதியில் அவர்கள் வலைகளை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.

கோடியக்கரை மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். அதிர்ஷ்வடசமாக இதில் மீனவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் சில படகுகள் சேதமடைந்தன.

இதையடுத்து வீசியிருந்த வலைகளை அறுத்தெறிந்து விட்டு அங்கிருந்து படகுகளுடன் கரைக்கு விரைந்து உயிர் தப்பினர் கோடியக்கரை மீனவர்கள்.
நன்றி>தற்ஸ்தமிழ்.

அழிப்புக்கு இஸ்ரேல்- சமாதானத்திற்கு நோர்வே?

-சு.ப.வீரபாண்டியன்.

நோர்வேயின் முயற்சிகள் நம்பகத்தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நோர்வே என்று தமிழின உணர்வாளரும், தமிழீழ ஆதரவாளவருமான சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

பெங்களுரிலிருந்து வெளிவரும் "தற்ஸ் தமிழ்" இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டி:

ஈழத்தின் தற்போதைய நிலை?

1950-களில் அறவழியிலும், 1970-களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை.

மாவீரர் நாளில் உரையாற்றியபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மிகத் தெளிவாகவே சொல்லியுள்ளார். தனி தமிழ் அரசே ஒரே தீர்வு, சரியான தீர்வு என்பதை அவர் சொல்லி விட்டார். இதை இறுதிப் போர் அறிவிப்பாகவே நான் கருதுகிறேன்.

நோர்வே மத்தியஸ்தக் குழு கடைசி சமாதான முயற்சியாக வன்னிக்குச் சென்று புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் முயற்சிக்கும் சிறிலங்கா அரசு முட்டுக்கட்டை போட்டு விட்டது. இந்த நிலையில், சிறிலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

இப்போதைய நிலையில், எங்களுடைய நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என்ற ஒன்றை மட்டுமே உலகத்திடமிருந்து புலிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வாய்மொழி ஆதரவையும், உணர்வு வழி ஆதரவையும் தமிழக மக்கள் வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் ஒரணியில் திரண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு இறங்கி வரும். இந்திய அரசு இறங்கி வந்தால் மட்டுமே, ஈழப் போராட்டத்தில் நியாயம் இருப்பதை, புரிந்தோ அல்லது புரியாமலோ, குறைந்தபட்சம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அப்போராட்டத்திற்கு ஆதரவு தர உலக சமுதாயம் முன்வரும்.

ஈழப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை?

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை வரவேற்புக்குரியதாகவே உள்ளது. ஆனால் அது மட்டும் போதுமானதாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. தற்போது உள்ளதை விட ஆதரவு கூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

கடந்த கால ஆட்சியில் தமிழ் ஈழத்திற்கு எதிரான மிகக் கடுமையான நிலை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு ஏறத்தாழ வெளிப்படையாகவே ஆதரவு தருகிறது. சட்டசபையில், ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே இதற்குச் சான்று.

செஞ்சோலை படுகொலைச் சம்பவமாகட்டும், மட்டக்களப்பு படுகொலைச் சம்பவமாகட்டும், தமிழக முதல்வர் கண்டித்துக் குரல் கொடுத்துள்ளார். இதை ஒரு நல்ல தொடக்கமாகவே நான் பார்க்கிறேன்.

தனித் தமிழ் ஈழம் அமைவதை வரவேற்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், தமிழர்களுக்குத் தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சியே என்பதை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். அதேசமயம், அனைவருக்கும் ஏற்புடைய தீர்வு உண்டானால் அதை விட மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.

தீர்வு ஏற்படும் வரை தமிழர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

நோர்வே குழுவின் சமரச முயற்சிகள்?

நோர்வே குழுவின் முயற்சிகள் நம்பகத் தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நோர்வே என்பதே அது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையே ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைதான். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முக்கிய சாலையான ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்க சிறிலங்கா அரசு ஒப்புக் கொள்ளவே இல்லை. இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான கதவை சிறிலங்கா அரசு மூடி விட்டது. இரு தரப்பிலும் இனி பேச்சுவார்த்தையே இருக்காது என்றே நான் நம்புகிறேன்.
இரு தரப்பும் இறுதிப் போருக்குத் தயாராகி விட்டன என்றுதான் நான் கருதுகிறேன்.

சிவசங்கர மேனன், நாராயணன் ஆகியோரின் பங்கு?

முன்பு ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.டிக்சிட் போன்ற அதிகாரிகளும், இப்போது சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்ற அதிகாரிகளும் ஈழப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டனர்.

சிவசங்கர மேனனும், நாராயணனும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பண்டாரி, டிக்சிட் கூறிய யோசனைகளைக் கேட்டுத்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தவறான முடிவை எடுத்தார்.

அதிகாரிகள் என்னதான் அரசுகளுக்கு அறிவுரை சொன்னாலும், மக்கள் எழுச்சி பேரலைக்கு முன்பு, இந்த திசை திருப்பும் செயல்கள் நீண்ட நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியாது. தமிழர் ஆதரவு அதிகாரிகளான ஜி.பார்த்தசாரதி போன்றவர்களை இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுத்துவது நல்லது என கருதுகிறேன்.

அதிகாரிகள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளை முடிவு செய்யும் வேலையை அவர்கள் செய்யக் கூடாது.

கருணாநிதியை தூது அனுப்பினால் சாதிக்க முடியுமா?

முதல்வர் கருணாநிதியால் சிறிலங்கா அரசை நிர்ப்பந்திக்க முடியாது. இந்திய அரசை மட்டுமே கருணாநிதியால் நிர்ப்பந்திக்க முடியும். அதை கருணாநிதி செய்ய, கட்சி பேதமின்றி தமிழகத்தில் உள்ள அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு, அந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்த துணை புரிய வேண்டும்.

மற்றப் பிரச்சினைகளைக் கூட பிறகு வைத்துக் கொள்வோம். ஆனால் ஈழப் பிரச்சினையில், எல்லோரும் ஒன்றுபட வேண்டும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் கூட இந்த இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை வரவேற்கிறேன்.

ராஜபக்சவின் கூட்டு ரோந்து யோசனை?

இது இந்தியாவை மீண்டும் இப்பிரச்சினைக்குள் இழுக்க ராஜபக்ச தீட்டிய சதி. எப்படியாவது இந்தியாவை ஈழப் பிரச்சினைக்குள் இழுத்து விட வேண்டும் என்று நினைத்தே அவர் அப்படி ஒரு யோசனையைக் கூறினார். ஆனால் இந்தியா புத்திசாலித்தனமாக கூட்டு ரோந்து முடியாது என்று கண்டிப்பாக கூறி விட்டது.

இலங்கையின் இறையாண்மையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று கூறும் சிறிலங்கா அரசு, இந்தியாவுடன் கூட்டு ரோந்து மேற்கொள்வது மட்டும் எப்படி அந்நாட்டு இறையாண்மையில் தலையிடுவது ஆகாது என்று கருதுகிறது என்று தெரியவில்லை.
இந்தியாவுக்கு ராஜபக்ச மேற்கொண்ட பயணம் ஒரு மாபெரும் தோல்விப் பயணம் என்பதே எனது கருத்து.

தனி ஈழம் தவிர்த்த வேறு திட்டங்களை புலிகள் ஏற்பார்களா?

முழு சுயாட்சி கொண்ட தன்னாட்சி திட்டம் ஒன்றை புலிகள் ஏற்கனவே தெளிவாக பரிந்துரைத்தனர். ஆனால் அதுகுறித்து விவாதம் நடத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை.
தனித் தமிழ் ஈழம் தவிர்த்து, விடுதலைப் புலிகளால், ஈழத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வேறு எந்தத் தீர்வு ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

ஈழப் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் பங்கு?

கடந்த காலத்தில் ஈழப் பிரச்சினையில் கடும் போக்கை கடைப்பிடித்த அதிமுக இப்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது. இது வரவேற்புக்குரியது.

மதிமுக முன்பை விட தீவிரமாக இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகிறது. அதற்கு முரணாக கூட்டணிக் கட்சியான அதிமுக கருத்து தெரிவிக்காமல் இருப்பதைப் பார்க்க வேண்டும்.

போபாலில் ராஜபக்ச தொடங்கி வைத்த மேயர்கள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மேயர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். புறக்கணிப்பு என்ற நேரடியான காரணத்தையே அவர்கள் சொல்லியிருக்கலாம். இருப்பினும் இந்த 6 மேயர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இப்போது முன்பை விட மிகப் பெரிய அளவில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான நிலை காணப்படுகிறது. திமுக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பேசி வருகிறது. அதேபோல ஈழப் பிரச்சினை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறன் மீது கூட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வழக்கு போடப்படவில்லை. ஏ.கே.47 ஏந்தி தனித் தமிழ்நாட்டை உருவாக்கத் தயங்க மாட்டோம் என்று கூறியதாகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனவே, தமிழகத்தில் ஈமிழத் தமிழர்களுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கும் நிலை உள்ளது என்பதை சொல்லியாக வேண்டும்.
நன்றி>புதினம்.

Sunday, December 10, 2006

இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல - பிரித்தானியா!!!



பிரித்தானியா அரசாங்கம் தனது வெள்ளைப் பட்டியலில் (white list) இருந்து இலங்கையை நீக்கவுள்ளது.

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து
இலங்கையைப் பிரிட்டிஷ் அரசு நீக்கும்
மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததே காரணம்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாதுகாப் பான நாடுகள் பட்டியலில் இருந்து இலங் கையை நீக்க உள்ளதாக உள்நாட்டு அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மக்களுக்குப் பாதுகாப்பான நாடுகள் என்று உள்நாட்டு அலுவலகத்தினால் கரு தப்படும் நாடுகள் "வெள்ளைப் பட்டிய லில்' சேர்க்கப்படுவது நடைமுறையா கும்.

வெள்ளைப் பட்டியலைச் சேர்ந்த நாடு களில் இருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு சென்று தஞ்சம் கோருவோரின் விண்ணப் பங்கள் தஞ்சம் கோருவதற்கும் குடியுரிமை கோருவதற்கும் அப்பீல் செய்யமுடியாத விதிகள் உள்ளன. நாட்டின் பொதுவான நிலையைக் காரணம் காட்டி தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் உள் நாட்டு அமைச்சினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதனை எதிர்த்து அப்பீல் செய்வது தடுக்கப்பட்டிருந்தது.

அவரவரின் தனிப்பட்ட பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருந்ததா என்று அடிப் படையில் அவர்கள் அங்கு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு தங்குவதற்கே வசதி செய்யப்பட்டு வந்தது.

இலங்கையில் 2002ஆம் ஆண்டில் கைச் சாத்தான போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஜூலையில் அது வெள் ளைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் மனித உரிமைகள் வழக்கறி ஞர்கள் உள்நாட்டு அமைச்சின் இந்த ஏற் பாடுகளை ஆட்சேபித்து வந்தனர்.

இலங்கையை பாதுகாப்பான நாடுகள் (வெள்ளைப் பட்டியலில் ) இருந்துநீக்க வேண்டும் என்று கோரி மேல்நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந் தது.
அந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 13,14ஆம் திகதிகளில் விசாரணைக்கு வர இருந்தது.
அதற்கு முன்னதாக இலங்கையை "வெள்ளைப் பட்டியலில்' இருந்து நீக்க உள்ளதாக உள்நாட்டு அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல் கள் அதிகரித்து வருவதைதத் தொடர்ந்தே அதனை வெள்ளைப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள தாக உள்நாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி>உதயன்

ஈழத் தமிழர்களுக்கு வேறு சரண் கிடையாது--கனிமொழி.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர ஈழத் தமிழர்களுக்கு வேறு சரண் கிடையாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

குமுதம் சஞ்சிகைக்கு அவர் அளித்த நேர்காணல்:

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்சினையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்சினை தலைதூக்கும் போதெல்லாம் இங்கே போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

"நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டேன். ராஜீவ் படுகொலையை இலங்கைத் தமிழ் மக்கள் செய்யவில்லை. ஒரே ஒரு தவறுக்காக அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?
அதனாலேயே 'அவர்களுக்கும் நமக்கும் உறவு விட்டுப் போய்விட்டது, அவர்கள் கஷ்டப்பட்டால் நமக்கு கவலையில்லை' என்பது என்ன நியாயம்? ஒரு காலத்தில் அவர்களைப் பற்றிப் பேசவே பயமாக இருந்தது உண்மை. நடுவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தது. மக்கள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தார்கள். இப்போது இலங்கை அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆகவே, திரும்ப எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் புலிகளையும், மக்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது."

சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீதுள்ள அவநம்பிக்கையைப் போக்குவதற்காக ஈழத்தில் ஜெயபாலன் போன்ற சில அறிவுஜீவிகள், மறைமுகமாக வெவ்வேறு நாடுகளில் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை நடத்தச் சொல்வதாகத் தெரிகிறதே?

"ஜெயபாலனோ, பிரபாகரனோ சொல்லி நாங்கள் செய்யப் போவதில்லை. அவர்களுக்காக இங்கே உண்ணாவிரதம் இருந்தால் 'அந்தத் தமிழர்களுக்கு விடுதலை வந்துவிடப் போகிறது, ஈழம் கிடைக்கப் போகிறது' என்று யாராவது நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் இல்லை.

நாங்கள் யாரும் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நாங்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த வாழ்க்கையைத் திருப்பித் தந்துவிட முடியுமா? அமைதியைத்தான் கொண்டு வந்துவிட முடியுமா?

எங்களுக்கு என்று ஒரு ஈடுபாடு உள்ளது. நம்பிக்கை இருக்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை நாட்டு அவதிப்படும் மக்களுக்காகவும் பேசுகிறோம். ஏன் நம் கண் முன்னே, பக்கத்தில் உள்ள நமது இனத்தை, மொழியைப் பேசுகிற மக்களைப் பற்றி, நமது சகோதர சகோதரிகளைப் பற்றிப் பேசக்கூடாது? விடுதலைப் புலிகள் என்கிற ஒரு பயத்தை உருவாக்குவது நிறையப் பேர்களுக்கு வசதியாகப் போய்விட்டது."

சிங்கள ராணுவத்தின் அட்டூழியம் ஒரு பக்கம் என்றால், விடுதலைப் புலிகள் மீது அங்குள்ள தமிழர்களுக்குப் பயம். வேறு வழியில்லாமல் புலிகளோடு போகிறார்கள் என்றால் உங்கள் பதில்?

"எப்படிப் பயம்? ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது."

சக போராளிக் குழுக்களையே தீர்த்துக் கட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஈழம் அடைய வேண்டும் என்பதைவிட தங்களாலேயே அடைய வேண்டுமென நினைப்பவர்கள்...

(இடைமறிக்கிறார்) "நீங்கள் சொல்வது முடிந்து போன கதை. அதைத் திருப்பிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கோ, எதிர்த்துப் பேசுவதற்கோ உங்களிடம் பேசவில்லை. அந்த ஆதரவற்ற மக்களின் பிரச்னைகளைத்தான் பேசுகிறேன். பிரபாகரன் செய்தது தவறா, இல்லையா அல்லது அவரது அமைப்பின் அவசியம், அனாவசியம் ஆகியவை பற்றிப் பேச எனக்குத் தகுதியோ, அருகதையோ இல்லை. தவிர, நான் களத்தில் நிற்கின்ற போராளியோ, அவதிப்படும் மக்களில் ஒருத்தியோ இல்லை. வெளியில் நின்று பரிதாபத்துடன் அக்கறையுடன் கவனிக்கும் பெண்.’’

சரி, சுற்றி வளைக்க வேண்டாம். நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

"அந்தக் கேள்விக்கே இடமில்லை. நான் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசவில்லை. அந்த மக்களைப் பற்றிப் பேசுகிறேன். வேதனைப்படுகிறேன். நான் ஆதரித்தால் ஒரு வண்ணமும், இல்லையென்றால் வேறு வண்ணமும் என் மீது பூசப்படும். நாம் பிரச்னையைத் திசைதிருப்பக் கூடாது."

அந்த மக்களுக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

"எனக்கு எந்தத் தீர்வும் கிடையாது. தீர்வு தமிழ் ஈழமாக இருக்கலாம். வேறாக இருக்கலாம். அங்கே அல்லல்படும் மக்களுக்கும், போராடுபவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதே சமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், தன் மக்கள் மீதே வன்முறையையும், அட்டூழியத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்துவது உச்சகட்டக் கொடுமை. அதனால் மக்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டு இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் வாயை மூடிக்கொண்டுள்ளன. இதுபோல வேறு எங்கே நடந்தாலும் சகித்துக் கொள்ளாது."

விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தாலும் இலங்கை ராணுவம் நம் இனத்தைப் பழிவாங்கலாம் இல்லையா?

"அப்படியென்றால், அமெரிக்கா மீது கூடத்தான் எனக்குக் கோபம் இருக்கிறது. அமெரிக்காவை எரிச்சுடலாமா? (குரலை உயர்த்துகிறார்). அமெரிக்கா அட்டூழியம் செய்கிறது என்று உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து விலகி தனிமைப்படுத்தினால் ஒப்புக் கொள்வோமா? அங்கே இருக்கும் அத்தனை மக்களும் மருந்துகூட இல்லாமல் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போகட்டும் என்று, ஒரு புஷ்ஷிற்காக விட்டு விடுவோமா? இலங்கையில் ராணுவம் குண்டு போடும்போது இப்போதைக்கு அந்த மக்களுக்கு புலிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர்."

செஞ்சோலையில் இலங்கை ராணுவம் குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை என்றால், புலிகள் அட்டூழியம் செய்யவில்லையா?

"சிறிலங்கா பிரச்சினை பற்றியோ, விடுதலைப் புலிகள் வரலாறு பற்றியோ பேச நான் ஒன்றும் நிபுணர் இல்லை. ஏன் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த மக்களைப் பற்றியே கவலை. அதற்குத்தான் உண்ணாவிரதம். இன்னொரு விஷயம், சும்மா 'விடுதலைப் புலிகள், புலிகள்' என்று அந்த அப்பாவி மக்களிடமிருந்து புலிகள் மீது உலக மக்கள் கவனத்தைத் திருப்புவது ஒரு நாடகம். இந்த நேரத்தில் நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர் என்ற முறையில் அந்த மக்களுக்காக நம் அக்கறையையும், உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்."

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைமையில் ஓர் ஆட்சி அமைந்தால், அது இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும் என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?

"இப்போது நம்மூரில் 'இந்தியாவை பிரிட்டிஷ்காரன் ஆண்டபோதுகூடப் பரவாயில்லை' என்று சொல்பவர்கள் இல்லையா? வெள்ளைக்காரன் விட்டுப் போனால் நாடே உருப்படாமப் போய்விடும் என்று சொன்னவர்கள் உண்டு. எதற்காகப் போராடினார்கள்? என் நாட்டை என் மக்கள் ஆள வேண்டும் என்று சொல்ல அந்த மக்களுக்கு உரிமை இல்லையா?"

இந்த உண்ணாவிரதப்போராட்டமெல்லாம் நீங்கள் அரசியலுக்கு வர ஒத்திகையா... ஆழம் பார்க்கிறீர்களா?

(சிரிக்கிறார்) "நிச்சயமாக இல்லை. அரசியலில் எல்லா ஆழத்தையும் பார்த்தாகிவிட்டது. அதற்கு இப்போது அவசியமும் இல்லை."

அன்று உங்களுடன் உட்கார்ந்தவர்கள் இலங்கைப் பிரச்னைக்கு உணர்வுபூர்வமான ஆதரவு என்பதைவிட, கனிமொழியுடன் உட்கார்ந்தால் கலைஞரைத் திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்தில்..
(இடைமறிக்கிறார்) "ஞானக் கூத்தனுக்கு அப்படி அவசியமில்லை. முக்தாவுக்கும் அப்படித் தேவையில்லை. இந்த விஷயத்தில் சுபவீயை விட அதில் அக்கறையுள்ள எத்தனை பேரைப் பார்த்துவிட முடியும்? பொடாவில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்தவர். ரவிக்குமாருக்கு அப்பாவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் போஸ்டரில் கூட என் பெயரைப் போடவில்லை. உட்காரும்வரை யாருக்கும் நான் உட்காரப் போவது தெரியாது. இப்படி உணர்வோடு வருபவர்களை, உங்கள் கேள்வியால் கொச்சைப்படுத்தக் கூடாது. எழுத்தாளர்களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும் சேர்ந்து செய்தது இது."

உங்கள் அப்பா இலங்கை பிரச்னையில் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகத் தோன்றுகிறதே?

"ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குப் பல தடைகள், பொறுப்புக்கள் உள்ளன. அதற்குள் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். ஒரு மாநில அரசு, வெளிநாட்டுக் கொள்கையில் தலையிட முடியாது. ஈழப் பிரச்னை தொடர்பாகப் பல விஷயங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை வலியுறுத்தியிருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதைவிட வேறு என்ன செய்ய முடியும்?"

கருத்துக்கு வரலாம். உங்களுக்குப் பின்னணி இருக்கிறது. எந்தப் பின்னணியும் இல்லாத நம் நாட்டில் ஒருவன், தன் ஏரியாவில் நடக்கும் அநியாயத்தை வெளிப்படையாகப் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடமுடியுமா? ஆட்டோ வந்துவிடாதா?

"எங்கள் கருத்துக் கூட்டங்களில் நான் பேசுவதையும், கார்த்தி பேசுவதையும் காட்டமாக எதிர்த்துப் பேசிவிட்டுத்தான் போகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே! நம்மூரில் தெருவில் ஒருவர் நியாயத்தைத் தட்டிக் கேட்கும்போது, மற்றவர்கள் ஜன்னலை மட்டும் கொஞ்சமாகத் திறந்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தைரியமாகப் பேசறவனுக்குப் பின்னாடி அவன் குடும்பம் மட்டும் நின்றால் போதாது. சமூகமும் நிற்கவேண்டும். தனிக் குரலாக நின்றால்தானே ஒடித்துவிட முடியும்? பத்துப் பேர், ஐம்பது பேர் சேர்ந்தால் பிரச்னை தீர வாய்ப்புண்டு."
நன்றி>புதினம்.

30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு!!!



திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகாம்களில் இருந்து இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிமுதல் மேற்கொண்டனர்.

ஈச்சிலம்பற்றுப்பகுதியில் இரண்டரை கிலோமீற்றர் தொலைவு வரை ஆக்கிரமித்த இப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
இத்தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து மாலையளவில் படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர்.

இதில் படைத்தரப்பில் இரண்டு அதிகாரிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கல்லாறு படைத்தளத்திலிருந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த ஆட்டிலெறிப் பீரங்கி ஒன்றும் விடுதலைப் புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

படையினரின் 5 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்டுள்ளன.
இம் முறியடிப்புத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை.
நன்றி>புதினம்.

Saturday, December 09, 2006

இந்திய அரசுக்கு கண்டனம்.

சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில், சிறிலங்கா கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஊர்தி மதுரை அருகே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னர் உரிய அனுமதி ஆவணங்கள் இருந்தது தெரியவந்ததால், தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்திருக்கிறது. தமிழக மக்களின் கவலையை இது மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த சிறிலங்கா ராஜபக்ச, தளவாடங்கள் அல்லாத பிற இராணுவத் தேவைகளை நிறைவு செய்ய இந்தியா முன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். சிறிலங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்த வெடி பொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு சிறிலங்கா அரச தலைவரின்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில் சிறிலங்கா கடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனையளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்திவிடும். ஆபத்தான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே சிறிலங்காவுக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Friday, December 08, 2006

சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய வெடிபொருட்கள்!!!

சிறிலங்கா கடற்படையினரின் பாவனைக்காக மகாரஷ்ர மாநில நாக்பூரில் இருந்து வெடி பொருட்கள் அடங்கிய லொறி மதுரை வந்த்போது அதனை சோதனையிட்டனர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் மதுரை பொலிஸார்

என இந்திய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வந்தமையினால் பொலிஸார் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதித்தனர்.

இதேவேளை மத்திய அரசு உத்தரவாதத்தையும் மீறி ஆயுத உதவி செய்வது குறித்து தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

40 பெட்டிகளில் வெடிமருந்துகள் டெட்னேட்டர்கள் மற்றும் 4 லட்சம் ரூபா மதிப்புள்ள வெடிபொருட்கள் மேற்குறித்த லொறியில் காணப்பட்டதாகவும் நாகபூர் சோலார் எக்ஸ்புளோசிங் நிறுவனத்தின் வெடிப்பொருட்கள் எனவும் தூத்துக்குடியில் இருந்து கடல்மூலமாக இலங்கைக்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கையில் உள்ள ரக்சமா- வல்சரா என்ற கடற்படையினரின் ஆயுத களங்சிய சாலை என முகவரி ஆவனங்களில் இருந்து பெறப்பட்டதாவும் பொலிஸார் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி>லங்காசிறீ.

கண்காணிப்பு குழுவிற்கு அரசு விளக்கமளிக்கதேவையில்ல.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

சிறீலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது

இந்த விடயம் குறித்து அரசாங்கம் தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்திருந்தது

இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ளார்.

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை தமது அரசாங்கத்திற்கு கிடையாது என்று அவர் கூறினார்.

புயங்கரவாத நடவடிக்கைகள் தொடருமானால் அதனை கட்டுப்புடுத்துவதற்கு சர்வதேச சமூகத்திடம் ஆலோசனை கேட்கவேண்டிய தேவை தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் ஹெனலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

Thursday, December 07, 2006

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப்போகும் கதை.

உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு

உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில.

குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது.
வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது.

வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் என அழைக்கலாம்.
சிங்களம், தமிழ் இரண்டும் அதிகாரபூர்வ மொழிகளாகவும் நிர்வாக மொழியாகவும் இருக்க, சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று நாட்டின் தேசிய மொழிகளாக இருக்கலாம்.
மேலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் பாடசாலை இறுதிப் பரிட்சையில் கட்டாய பாடங்களாக இருக்க வேண்டும்.

தேசிய காவல்துறை சேவை மற்றும் மாகாண காவல்துறை சேவை இரண்டையும் அமைத்து, இரண்டும் ஒருங்கிணைந்து பணிபுரியுமாறு செய்ய வேண்டும்.
சுயாட்சி மாவட்ட சபை, இந்திய தமிழ் கலாசார சபை ஆகியவற்றை அமைப்பதும் அதன் சில ஆலோசனைகள்.

பல துறைகளைச் சேர்ந்த குழுவின் 17 வல்லுநர்களில் 11 பேர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அவர்களில் அறுவர் சிங்களவர்கள். நால்வர் தமிழர்கள். ஒருவர் முஸ்லிம். மற்ற ஆறு பேரும் சிங்களவர்கள்.

இந்தியாவின் பரிந்துரை உட்பட பல பரிந்துரைகளை இக்குழு ஆராய்ந்துள்ளது. தனித் தமிழ் நாட்டுக்கு மாற்றான தீர்வுகளை ஆராய்ந்த இக்குழு, சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு கொடுக்கப்படாததே, அவர்கள் சிறிலங்காவில் இருந்து தனிமைப்படக் காரணம் எனக்கூறுகிறது.

இலங்கையில் வாழும் பல இன, மத, சமூகங்களுக்கிடையே உண்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும். மாகாண ஆட்சிகள், உள்ளூர் ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து சமூகத்துக்கும் மத்திய அரசில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும். அரசியலில் அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என அவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

இலங்கை குடியரசு என நாட்டை அழைக்கலாம். தனி சுதந்திர நாடு எனக் கூறலாம்.
மாகாணங்கள், மாவட்டங்கள், பகுதிகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
விடுதலைப் புலிகள் கேட்டும் சுய அடையாளத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில், அனைவரும் நாட்டு மக்கள் என அழைக்கப்படலாம்.

அனைவரும் சிறிலங்கன் என்று பொது அடையாளத்துக்குள் பலவீனப்படுத்தாமல், ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மொழியையும் கலாசாரத்தையும் வளர்க்கவும் மேம்படுத்தவும் உரிமை வழங்கப்பட வேண்டும். மேலும் தனது வரலாற்றைப் பேணவும் அதிகாரத்தில் தனக்குரிய பங்கைப் பெறவும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

அரசாட்சி, சட்ட விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, கொழும்புக்கும் மற்ற மாகாணங்களுக்குமிடையிலான உறவு உள்ளூர் ஆட்சிகள், பொதுச் சேவை, மொழி, நிலவுடமை, மாகாண அதிகாரங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் இந்த அறிக்கை ஆராய்ந்துள்ளது.

குழுவின் பரிந்துரை அனைத்துக் கட்சி குழுவினருடன் விவாதிக்கப்படும். பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு அரச தலைவர் மகிந்தவிடம் கொடுக்கப்படும்.

எனினும் இந்தப் பரிந்துரைகளுக்கு விடுதலைப் புலிகள் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நன்றி>புதினம்.