Monday, May 28, 2007

நெடுந்தீவு ராடார் நிலையம் படையினருக்கு பெரும் இழப்பு: ஏஎஃப்பி.

இடம்பெற்று வரும் மோதல்களில் இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். எனினும் நெடுந்தீவில் இருந்த கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். இந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி ஆய்வில் அமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.


அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

புதிதாக இடம்பெற்று வரும் வான், கடல் தாக்குதல்கள் அரச படையினரும், விடுதலைப் புலிகளும் ஒரு பெரும் சமருக்கு தயாராகி வருவதையே கட்டுகின்றது. அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் உக்கிரமடைந்த மோதல்களால் சிறிலங்காவில் 5,000 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கடல், வான் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக சிறிலங்காப் படையினர் மிக்-29 ரக மிகை ஒலி வானூர்திகளையும், எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளையும், கடற்படையின் கப்பல்களுக்கான கனரக பீரங்கிகளையும் கொள்வனவு செய்ய எண்ணியுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைதி முயற்சிகள் இறந்துவிட்டன. அமைதி முயற்சிகளுக்கு சிறியளவிலான சந்தர்ப்பமே உண்டு. போர்நிறுத்தம் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. எதிர்வரும் மாதங்களில் நாம் அதிக மோதல்களை காணலாம் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு மாதமாக மந்தமாக இருந்த களநிலைமைகள் கடந்த வாரம் விடுதலைப் புலிகளால் கேந்திர முக்கியத்துவம் மிக்க நெடுந்தீவில் நடத்தப்பட்ட தாக்குதலால் முடிவுக்கு வந்துள்ளது.

இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர், எனினும் கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். நெடுந்தீவில் இருந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் கடல்வழி தாக்குதல் திறனை நிரூபித்துள்ளனர் என பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் நமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றும் ஒரு நடவடிக்கையே நெடுந்தீவு தாக்குதல். யாழை கைப்பற்றும் தமது திட்டத்தை விடுதலைப் புலிகள் கைவிடவில்லை என்பதன் அறிகுறி இது என டெய்லி நியூஸ் தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

தீவகத்தின் மீது தொடர்ச்சியான தாக்குத்கள் நிகழுமாயின் அது யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் பலத்தை பரவலடைய செய்கின்றனர். இது போரை பலவீனப்படுத்தும் என ஓய்வுபெற்ற பிரிக்கேடியர் ஜெனரல் விபுல் பொரெயூ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தங்களிடம் உள்ள Zlin-143 ரக வானூர்திகள் மூலம் நான்கு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இது போரை வேறு பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் இராணுவ வெற்றிகள் சாத்தியமானது என நம்பவைக்க முற்படுகின்றனர். இதனால் எதிர்வரும் வாரங்களில் வன்முறைகள் அதிகரிக்கலாம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

படையினர் தமது நடவடிக்கைகளை நிறுத்தாத போது தாம் பேச்சுக்களுக்கு செல்லப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் 2006 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான நிலையை அடைதுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இருதரப்பினதும் மோதல்களுக்கு இடையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளலாம் எனவும், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் என்பன அதிகரித்து வருவதாக அது தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் முடிவில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதுடன், 215,000 மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்கான ஒரே வழி எல்லா தரப்பினரும் தமது வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதேயாகும் என பிரித்தானியாவின் சிறிலங்காவிற்கான தூதுவரான டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

அந்த ராடார் மதிப்பு பல கோடியாமே. Instead they lost weapons to LTTE every time, they can ask weapon provider countries to give weapons to LTTE directly. They can save some time and people.