Saturday, May 05, 2007

கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர்.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார்.


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனது கடுமையான நிலைப்பாட்டையும் தெரிவிக்க உள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பல தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் யாழ். குடாநாட்டிற்கும் செல்வார் என கூறப்படுகின்றது. பௌச்சர் மீண்டும் அமெரிக்க செல்வதற்கு முன்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்.

நாடு மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும். பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி சிறிலங்காவிற்கான உதவித் தொகைகளை நிறுத்தியுள்ள நிலையிலும் பௌசரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ரிச்சர் பௌச்சரின் சிறிலங்காவிற்கான பயணத்தின் போது மாலைதீவுக்கும் செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி>புதினம்.

No comments: