Monday, May 14, 2007

சிறிலங்காவுக்கான உதவிகளை வேறு நாடுகளும் நிறுத்தலாம்?

சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தவறியமை மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளை நிறுத்துவதற்குத் தவறியதன் காரணமாக அந்த நாட்டுககான நிதி உதவியை மேலும் பல நாடுகள் இடைநிறுத்திக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவும், பிரித்தானியாவும் சிறிலங்காவுக்கான தமது நிதி உதவியில் ஒரு பகுதியைத் தடுத்து வைத்திருக்கும் அதேவேளையில் மேலும் பல நாடுகள் இதனைப் பின்பற்றலாம் என அனைத்துலக செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் அந்த செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சிறிலங்காவுக்கான நிதி உதவியை மனித உரிமை விவகாரத்துடன் தொடர்புபடுத்துமாறு கோரும் மனித உரிமை ஆர்வலர்களுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கு ஜப்பானே அதிகளவு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா விவகாரத்தில் மேலும் அதிகளவு பங்களிப்பை வழங்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஜப்பானைக் கேட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முன்னணிப் பங்களிப்பை ஜப்பான் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் கவலையை அமெரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சரும் தன்னுடைய கொழும்புப் பயணத்தின் போது வெளிப்படுத்தியிருந்தார்.

மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அதிகளவு நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்காவின் மனித உரிமை நிலைமையில் ஒட்டுமொத்தமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 700-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போன யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பெளச்சர் பயணம் செய்திருந்தார்.

அதேவேளையில், சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு குறித்து வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன. ஜேர்மனியைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவும், சிறிலங்காவுக்கான தனது உதவிகளைக் குறைத்துக்கொண்டிருக்கின்றது.
நன்றி<புதினம்.

No comments: