சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மனித உரிமை மீறல்களை தடுக்காது போனால் அரசுக்கான அனைத்துலகத்தின் உதவிகளை அந்த நாடுகளின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்போவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளதாவது:
எமது அமைப்பு சிறிலங்கா தொடர்பான விடயங்களில் செயற்திறனுள்ள நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, யப்பான் உட்பட பல நாடுகளுடன் சிறிலங்காவில் உள்ள தற்போதைய நிலை தொடர்பாக தொடர்புகளை கொண்டுள்ளது.
எனினும் நாம் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தும்படி அவர்களை இன்றுவரை கோரவில்லை. மனித உரிமைகள் தொடர்பாக கொழும்பு மீது அதிக கவனத்தை செலுத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மனித உரிமைகளை மதிப்பதற்கும் பொதுமக்களின் மீதான வன்முறைகளை குறைப்பதற்கும் இணைத்தலைமை நாடுகளும், ஏனைய நாடுகளும் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும். நிதி உதவியானது இத்தகைய அழுத்தங்களில் ஒன்று. சில நாடுகள் இந்த வழியில் செல்வதற்கு தற்போது தீர்மானித்துள்ளன.
மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதை நாம் எதிர்க்கின்றோம் ஏனெனில் அது பொதுமக்களை பாதிக்கலாம். எனினும் துரதிர்ஸ்டமாக அனைத்துலக சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் தற்போதைய அணுகுமுறைகள் அங்கு நடைபெறும் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கடத்தல்கள், எழுந்தமானமாக தடுத்து வைத்தல், கண்மூடித்தனமான வான் குண்டுவீச்சுக்கள், பலவந்தமாக மீளக்குடியமர்த்துதல், ஊடகத்துறையின் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றில் சிறிய தாக்கத்தையே உண்டுபண்ணியுள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.
Sunday, May 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment