Tuesday, May 01, 2007

ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம்.

இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது.

தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும்.

இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என்றும் இனப்பிரச்சனையில் தொடர்புடைய குழுக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) செயலாளர் டொன் மிகின்னொன்னவுக்கு இக்குழு அழைப்பு விடுக்க உள்ளது.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ள கெய்த் வாஜ் இது தொடர்பில் கூறுகையில், இலங்கையில் அமைதி வழித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஈடுபாட்டை இது வெளிப்படுத்துகிறது என்றார்.

"2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய சுற்றுப் பேச்சுக்களை நாடாளுமன்றக் குழு உருவாக்கும்" என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: