Tuesday, May 08, 2007

சிறிலங்காவிற்கான நிதிகளை நிறுத்த வேண்டாம் என, ரஜபக்சா மன்றாட்டம்.

அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர்.

"இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்."


மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அந்த அரசியல் பத்தியின் முக்கிய பகுதிகள்:

"மனித உரிமை மீறல்கள், அனைத்துலகத்தின் அழுத்தங்கள், உலகத்தில் ஏற்பட்டு வரும் தவறான நிலைப்பாடுகள், பொருளாதார பேரழிவு போன்றவற்றில் மகிந்த ராஜபக்ச மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றார். இது அவரது கொடுமையான போர், இராணுவத் தீர்வு மனநிலை, தான்தோன்றித்தனமான கொள்கைகள் போன்றவற்றின் அறுவடையாகும்.

மனித உரிமை விதிகளை கடைப்பிடிக்கும் படி அனைத்துலக சமூகம் மகிந்தவை கேட்டுள்ள போது, மகிந்த தமது நாட்டின் மீதான நல்லெண்ணத்தை சிதைத்து வரும் அதேசமயம் சிறிலங்காவிற்கான நிதிகளை நிறுத்த வேண்டாம் என மன்றாடியும் வருகிறார்.

மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு நிறுத்த முடியாத பட்சத்தில் அதன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் படி அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க அரச தலைவர் ஜேர்ச் புஷ்சை கேட்டிருந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த மகிந்த, அரச தலைவர் விசாரணைக்குழுவை அமைப்பதுடன், அதனை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவையும் வரவழைப்பதாக புஷ்சுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08.05.07) அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான துணைச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் சிறிலங்காவிற்கு ஒரு கடுமையான செய்தியுடன் வருகின்றார். பௌச்சர் சிறிலங்காவில் நடைபெற்று வந்த அமைதி முயற்சிகளில் பங்கு பற்றியிருந்தவர், அவர் இணைத்தலைமை நாடுகளுடனும் பல சுற்று பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

பௌச்சர் எதிர்வரும் புதன்கிழமை யாழ். குடாநாட்டுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார். சிறிலங்காவினால் கூறப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போருக்கு ஆதரவளித்த அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை மணி சிறிலங்காவின் கவலையை அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகள் மற்றும் நிதி சேகரிப்புக்களை அமெரிக்கா தடுத்து நிறுத்திய போதும் அது விடுதலைப் புலிகளை உலகத்தின் பயங்கரவாதிகளாக உடனடியாக நோக்கவில்லை. மகிந்த ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உலக பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போர் என்பது முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிரான போராகும். அமெரிக்க அதிகாரிகளின் வரைவிலக்கணத்தில் விடுதலைப் புலிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

எனவே விடுதலைப் புலிகளின் மீதான அனைத்துலகத்தின் நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், உலக சமூகத்தினால் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மகிந்த அரசாங்கம், அதில் பெரும் தவறுகளை இழைத்து வருகின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் இதில் மிகவும் கவனமாக திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை ஒரு ஒழுக்கமுள்ள படையினராக நிலைநிறுத்தி வருகின்றனர். அது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான கடத்தல்கள், காணாமல் போதல் போன்றன உட்பட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொடூரமான போருக்கு எதிராக போராடும் ஒரு அமைப்பாக விடுதலைப் புலிகள் தம்மை நிலைப்படுத்த உதவியுள்ளது.

இதனால் உலகத்தின் ராடார் திரைகளில் இருந்து சிறிலங்கா மறைந்து வருவதுடன் அது புறக்கணிக்கப்பட்ட தேசமாகவும் மாறி வருகின்றது. கடந்த வருடத்தில் இருந்து அமெரிக்காவின் கண்களில் இருந்து சிறிலங்கா மறைந்து வருகின்றது என வொசிங்டனை தளமாக கொண்ட புறூக்கிங் நிறுவனத்தை சேர்ந்த கலாநிதி ரீபன் பிலிப் கோகின் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான வான் தாக்குதல்கள் அனைத்துலக மற்றும் பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என அரசாங்கம் கூறிய போதும், அது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோட்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என வெளிவிவகார கொள்கைகளை ஆராய்ந்து வரும் 500 உயர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் பிலிப் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடைகள் குறித்து அமெரிக்காவில் மட்டுமல்லாது பிரித்தானியாவிலும் சவால்கள் தோன்றியுள்ளன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் 4 மணிநேரம் நடைபெற்ற விவாதத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமற்றதானாலும் அது சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை நிறுத்தியுள்ளது. இதற்கு சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களே இதற்கு காரணமாகும்.

சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெரும் பிரிவினையான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சிறிலங்கா அரசாங்கம், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த முற்படாது விட்டால் அது மிலேனியம் சவால்களுக்கான நிதியினை இழப்பது உட்பட பல எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என குறிப்பிட்ட எண்ணிக்கையான செனட் உறுப்பினர்கள் மகிந்தவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

உணவு, எரிபொருள் போன்றவற்றை யாழ். குடாநாட்டிற்கு அனுப்புவதற்கான பாதையை அரசாங்கம் திறக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்தினை அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் ஜோன் எஃப் கென்னடியின் இளைய சகோதரரான எட்வேட் கென்னடியும் மற்றும் செனட்டரான றொப் கென்னடி, முன்னாள் ஜனநாயகக் கட்சி அரச தலைவர் வேட்பாளர் ஜோன் ஹெரி ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பரில் கேட்டிருந்தனர்.

சிறிலங்காவின் அரசாங்கப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள், நீதிக்கு புறம்பாக தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல் துன்புறுத்தப்படுதல் தொடர்பாக கென்னடி, ஹெரி ஆகியோருடன் மற்றுமொரு உயர் ஜனநாயக கட்சியின் செனட்டரான கிறிஸ்த்தோபர் ஜே டொட்டும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இதனிடையே சிறிலங்கா மிலேனியம் சவால்களுக்கான நிதியினை பெறும் தகுதியை இழக்கலாம் என ஆளும் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரும், வெளிவிவகார உறவுகளுக்கான தலைவருமான செனட்டர் றிச்சார்ட் லுகர் அண்மையில் மகிந்தவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். லுகர் வெளிவிவகார கொள்கைகளின் குரு என அமெரிக்காவில் போற்றப்படுபவர், 1976 ஆம் ஆண்டு தொடக்கம் செனட்டர் பதவியை வகித்து வருகின்றார்.

எனினும் மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள அரச தலைவர் விசாரணைக்குழு மற்றும் அனைத்துலக நிபுணர் குழுவிரை அழைத்தது என்பன ஒரு அனுகூலமான அறிகுறி என லுகர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட்டர்களின் கருத்துக்கள் அண்மையில் சுதந்திர இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எதிரொலித்துள்ளது. அந்த அமைப்பின் மே மாத அறிக்கையில் சிறிலங்காவுக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு 1980 களில் உருவாக்கப்பட்டு ஊடகங்களில் அச்சு ஊடகங்கள், ஒலி, ஒளிபரப்பு ஊடகங்கள், இணையத்தள ஊடகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் 0 தொடக்கம் 100 புள்ளிகள் வழங்கப்படுவதுண்டு. இது சுதந்திரமான நாடு, பகுதியான சுதந்திர நாடு, சுதந்திரமற்ற நாடு என்ற தரப்படுத்தல்களுக்கு உட்படுவதுண்டு. சிறிலங்கா பகுதியான சுதந்திர நாடு என்ற தரப்படுத்தலுக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் அங்கு ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்துள்ளது.

மோசமான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் நிறுத்தாது விட்டால் மிலேனியம் சவாலுக்கான நிதியினை நிறுத்துமாறு கடந்த ஏப்பிரல் 6 ஆம் நாள் சுதந்திர இல்லம் கேட்டுக்கொண்டுள்ளது. இது விடுதலைப் புலிகளின் மீதான அனுதாபத்தினால் அல்ல அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டது.

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மனித உரிமை மீறல்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டரான டிக் டேர்பின் கடந்த ஆண்டு டிசம்பரில் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

சிறுவர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்களில், சில நாடுகள் தமது சொந்த படைகளுக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும் சில நாடுகள் தமது படையினரின் துணை இராணுவக் குழுக்களின் மூலம் சிறுவர்களை படையில் சேர்ப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. கருணா குழு அரச படையினரின் ஆதரவுடன் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக முன்னர் அலன் றொக் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் சிறுவர் படைச்சேர்ப்புக்கு உதவக்கூடாது எனவும், அமெரிக்காவின் ஆயுதங்கள் சிறார்களின் கைகளில் சேரக்கூடாது எனவும் சில அமைப்புக்கள் தெரிவித்திருந்தன. அமெரிக்கா இத்தகைய நாடுகளுக்கான தனது இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என டார்பினின் தெரிவித்துள்ளார்.

இவை மட்டுமல்லாது சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது கவலையை அமெரிக்காவின் செனட்டின் நீதியாளர் சபையின் தலைவரான நீதிபதி லெஹியும் மகிந்தவுக்கு தெரிவித்திருந்தார்.

செனட்டரின் கடிதத்திற்கு மகிந்த பதில் அனுப்பியதை அவர்கள் உறுதி செய்த போதும் அதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்களை விட விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களே அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லாப் பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். அமெரிக்க கண்ணை மூடிக்கொண்டு சிறிலங்காவிற்கான தனது நிதி உதவியினை நிறுத்தப்போவதில்லை.

எனினும் லுகரின் கூற்றின் பிரகாரம் உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம்.

அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நிதி உதவிகளை பெறுவதற்குரிய சிறிலங்கா அரசாங்கத்தின் தகமைகளை இல்லாது செய்து விடும். மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறுவதற்கான உறுதிமொழிகள் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போதும், இன்று வரை அந்த நிதி வழங்கப்படவில்லை.

ஆனால் இந்த நிதியானது புஷ்சின் நிர்வாகத்தினால் வழங்கப்படுவது என்பதை மகிந்த கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் புஷ்சின் கட்சி 2008 ஆம் ஆண்டு வீழ்ச்சி காண்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனவே புதிய அரச தலைவர் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதுடன் முன்னைய திட்டங்களை மாற்றவும் முயற்சிக்கலாம்.

எனவே சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் நிபந்தனைகளை விரைவாக பூர்த்தி செய்து இந்த நிதியினை பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

No comments: