யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வடபகுதிக்கான விநியோகங்களை பெருமளவில் பாதிக்கும்.
விடுதலைப் புலிகள் பூநகரியில் இருந்து 130 மி.மீ பீரங்கிகள் மூலம் பலாலித் தளத்தை தாக்கியிருந்தனர். அது 27 கி.மீ தூரவீச்சு கொண்டது.
இந்த பீரங்கித் தாக்குதலின் போது படையினர் தமது பாதுகாப்பைத் தேடி ஓடியுள்ளனர். அவர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கும் போது அவர்களால் தரையின் ஒரு பகுதியையே பார்க்க முடியும். வானத்தைப் பார்க்க முடியாது இது தான் அன்று பலாலியில் நடந்தது. முதலில் பீரங்கித் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் வான்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளிடம் இரண்டுக்கும் மேற்பட்ட வானூர்திகள் உள்ளன. அவர்களின் வானூர்திகள் கொழும்புக்கு வந்து தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பிவிட்டன. அவர்களால் கொழும்புக்கு வந்து குண்டுவீச முடியுமானால் மிக இலகுவாக யாழ். குடாநாட்டுக்கும் செல்ல முடியும். அது அவர்களின் தளத்தில் இருந்து 10 நிமிட பயணத்தூரத்தில் உள்ளது. இது தான் பலாலியினதும் அங்கு உள்ள படையினரினதும் நிலைமைகள்.
விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மேலும் ஒரு தடவை வானில் எழுந்தால் அவை அழிக்கப்படும் என பாதுகாப்பு விவாகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக அவரால் உத்தரவாதம் தர முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார் சரத் முனசிங்க.
மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 30 வருடங்களாக பணியாற்றி இருந்ததுடன், யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாகவும், இராணுவத்தின் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Friday, May 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment