Thursday, May 31, 2007

யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்: இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை!

யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால், பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள், தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால், இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ்ப்பாணம் 2002ல் அரசுப் படைகள் வசம் வந்தது.

தற்போது யாழ் தீபகற்பத்தின் பெரும்பகுதியை அரசுப் படைகள் வைத்துள்ளன. அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் பிடியில் சிக்கி தமிழர்கள் சொல்லொணா அவதிகளை அனுபவித்து வருகின்றனர்.

செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசு தமிழர்களை அங்கிருந்து வெளியேறவும் விடாமல் கொடுமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விமான பலத்துடன் முன்பை விட வலுவாக திகழும் விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணம் பகுதியை ராணுவத்திடமிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான திட்டம் பிரபாகரன் தலைமையில் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை மீட்கும் இறுதிப் போராக இதை திட்டமிட்டுள்ள புலிகள், இதற்காக சில உயிரிழப்புகளை தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை பிரபாகரனும் அங்கீகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் யாழ் தீபகற்பத்தை மீட்க புலிகள் பெரும் போரில் குதிக்கக் கூடும் என்று கூறப்படுவதால் இலங்கையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை சமாளிக்க, விமானம் தாக்கும் ஏவுகணைகளை தர வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்க்ஷேவின் தம்பி கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்துள்ளார்.

அவரது பயண விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள அவர் தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கை அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோரை படு ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்ஷே.

இப்பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு வேளை இந்தியா இந்த உதவிகளைச் செய்ய மறுத்தால் பிற நாடுகளிடமிருந்து இவற்றைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனியும் இந்தியாவை நம்பி இருக்கப் போவதில்லை. இந்த உதவிகளை இந்தியா செய்யாவிட்டால் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை நாட இலங்கை தயங்காது என்றும் இந்தியத் தரப்பிடம் கோத்தபயா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தி மூலம்: தற்ஸ் தமிழ்

No comments: