Tuesday, May 15, 2007

புலிகளா? சர்வதேசமா? மக்களே தீர்மானிப்பர்.

-சி.இதயச்சந்திரன்-

இலங்கையின் வான் பாதுகாப்பிற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விசேட தூதுவர்களின் இந்தியப் பயணம் சொல்லப்படாத செய்திகள் பலவற்றை இருபுறமும் காவிய வண்ணமுள்ளன. மீனவர் கடத்தல் தொடர்பான பிரச்சினையோடு, தமிழக எழுச்சியை மௌனமாக்கும் காரியங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மீனவர்களை விடுவிக்கும் வரை, இராணுவ தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்க வேண்டுமென 'தினமணி" செய்தி கூறுகின்றது.

இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் சீராகச் செல்லும் இவ்வேளையில், நேரடிப் பிரசன்னத்திற்கான தடையாகவிருப்பது போர் நிறுத்த ஒப்பந்தம். அவ்வொப்பந்தம் உடைவதற்கு தானொரு மூல காரணியாக இருப்பதையிட்டு சில சங்கடங்களும் இந்தியாவிற்கு உண்டு.

வான் பாதுகாப்பு என்ற போர்வையில், இலங்கையின் அழைப்பை ஏற்று உள்நுழைந்தால், விடுதலைப் புலிகளோடு மோத வேண்டுமென்கிற சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதோடு, சர்வதேச மத்தியஸ்தத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தானே மறுதலித்தது போலாகி விடுமென்கிற தர்மசங்கடமான நிலைக்குள் ஆட்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தேசியப் பாதுகாப்பிற்காக ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய அரசு தயங்காதென்பதையும் அரச பாதுகாப்புத்துறை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறிவிட்டார்.

இந்நகர்வுகள் சகலவற்றிற்கும் பெருந்தடங்காலக விருப்பது போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவாகும். அவர்களையும் ஏதோவொரு வகையில் வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அரசிற்குண்டு.

மேற்குலக உத்தரவாதம், இந்தியாவிற்கு வழங்கப்பட்டால், அதன் உள்நுழைவு தடங்கலற்ற பாதைக்கு வழிவகுக்கும்.
அதேவேளை, மேற்குலகில் விடுதலைப் புலிகளின் மீது கொடுக்கப்படும் அழுத்தங்களும், பயங்கரவாத முத்திரை பதித்த பிரசாரங்களும் முன்னெடுக்கப்படும்போது இறுதிப் போரிற்கான ஆதரவுத் தளத்தினை உருவாக்கும் முயற்சிக்கு உந்துதலை அளிக்கின்றது.

இந்தியாவிலும், மேற்குலகிலும் விடுதலைப் புலிகளுக்கெதிரான பரப்புரைகள் அதிகரித்து, தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை மலினப்படுத்தும் நிலைப்பாடு விரிவடைவதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் செயலிழக்கச் செய்தாலும், அது பற்றிக் கண்டும் காணாதது போன்ற போக்கினை இவ்விரு சக்திகளும் கடைப்பிடிக்கலாம்.
அதை நியாயப்படுத்தும் கருத்துருவாக்கத்தை தமது திட்டமிட்ட பரப்புரை ஊடாக இருவரும் உருவாக்குகிறார்கள்.

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலும், விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்கி, படைவலுச் சமநிலை சீர்குலைக்கப்பட வேண்டுமென்பதை மையமாகக் கொண்டே வகுக்கப்பட்டுள்ளதை சமகால நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள காலத்தில், அரசு கிழக்கில் மேற்கொள்ளும் படை நகர்வுகளையிட்டு மேற்குலகமானது அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதை சகலரும் உணர்வர்.

அதேவேளை பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் வர மறுக்கிறார்களென்கிற அரசின் பரப்புரையை, தமது கருத்தாக, எதிரொலிக்கும் காரியத்தையும் மேற்குலகம் செய்கிறது. அரசின் இராணுவ அத்துமீறல்களைப் பற்றி விமர்சிக்காமல், ஆயுதக்குழுக்கள் மீது கண்டனங்களைத் தொகுப்பதோடு தமது கடமை முடிந்துவிட்டதென ஒதுங்கிக்கொள்வதையும் இவர்கள் விரும்புகிறார்கள்.

ஆகவே, புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமது அடுத்த நகர்வுகளை மேற்குலகம் மேற்கொள்ளும் வேளையில், இலங்கையில் ஏற்படும் மாற்றங்களூடாகத் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது.

வான்புலிப் பிரவேசத்தால், இலங்கையின் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை அதீத கலங்கல் நிலைக்குள்ளாவதால், பொருள் வளமீட்டும் கேந்திர நிலையங்களுக்கு சமீபமாகவுள்ள இராணுவ நிலைகளை இடம்மாற்றும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி சில அதிரடி நகர்வுகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு யாழ். குடாவிற்கும் சென்று திரும்பியுள்ளார்.

இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் கொழும்பில் கூடுவதற்குமுன், இந்தியப் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க டெல்லிக்கு விரைந்துள்ளார்.

இதேவேளை மோசமடையும் இலங்கை நிலைவரம் குறித்து கடந்த திங்களன்று, மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடலை நிகழ்த்தியுள்ளார் அமெரிக்கா அதிபர் ஜோர்ஜ் புஷ். ஜனாதிபதி மஹிந்தவின் விசேட செய்தி குறித்தே இவ்விருவருக்குமிடையே உரையாடல் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

அச்செய்தி குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய வேண்டிய தேவையும் அமெரிக்காவிற்கு உண்டு. நிலைமை மோசமடைவதால் தனது உள்நுழைவிற்கான நகர்விற்கு தடையாகவுள்ள ஒப்பந்தம் மற்றும் கண்காணிப்புக்குழு பற்றிய வெளிப்படுத்தலையும் மிகவும் சாதூரியமாகவும் இந்தியா புரிய வைத்திருக்கும்.

போரின் உக்கிரத்தை தணிப்பதற்கு பேச்சுவார்த்தை மேடையைத் தயார்படுத்த வேண்டுமென்று இணைத்தலைமைகள் விரும்பினாலும், 'மாவட்ட சபை"ப் பேச்சு அதற்கான சிறிதளவு நம்பிக்கையையும் தகர்த்து விட்டதென்பதே பெருங்கவலையாக மாறிவிட்டது.

ரிச்சர்ட் பௌச்சரின் குடாநாடுப் பயணத்தின் போதும், வன்னியின் மீது விமானத்தாக்குதல் தொடர்ந்துள்ளது. யாழ். மக்களின் மனநிலையை முகர்ந்து பார்த்து, புலி ஆதரவு தளத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முயற்சித்த பௌச்சரின் எதிர்பார்ப்பிற்கு, ஒருங்கிணைந்த சக்தியாகத் திரண்டுள்ள மக்களின் உள உரண், தடுமாற்றத்தை அளித்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆளணி, படைவலு வினை பூரணமாக அறியமுடியாமலிருப்பது போன்றே, தாயக மக்களின் ஆழ்மனதில் இறுக்கப்பட்டள்ள விடுதலை உணர்வினையும் இவர்களால் இலகுவில் அளக்க முடியாதுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையில் வாழும் எந்த இனக் குழுவிற்கும் நம்பிக்கையும் இல்லை. எதிர்பார்ப்பும் கிடையாது. கண்காணிப்புக் குழுவின் மௌனத்தோடு, ஒப்பந்தமும் மரணித்துவிட்டது. வெற்றுக் காகிதங்களைக் காவித்திருந்து குடாநாட்டினுள்ளும் வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்தியாவின் அடுத்தகட்ட தீர்மானகரமான நகர்விற்கு முன்பாக, அமெரிக்க குழுவினர் தமது காய் நகர்த்தலை சடுதியாக ஆரம்பித்துள்ளனர்.

பேசியே தீர்க்க முடியுமென்கிற மந்திரப் போர்வையின் பின்னால் ஒளிந்த படி, தமக்குள் வெட்டி ஓடும் தந்திரநகர்வுகளை மேற்குலகமும் இந்தியாவும் அரங்கேற்றுகின்றன. ஆனாலும், தமிழ்த்தேசிய இனத்தின் பிறப்புரிமையான தாயகம், தன்னாட்சி போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை பெருந்தேசிய இனம் அங்கீகரிக்கப் போவதில்லையென்பதே யதார்த்தம்.

மாவட்ட சபைதான் தீர்வென்றால், பிரிந்து செல்வதே மாற்று வழியாக இருக்கும். தமிழ்மக்களின் எதிர்கால வரலாற்றை புலிகள் இயக்கமா, சர்வதேசமா தீர்மானிக்கு மென்பது குறித்து அம்மக்களே முடிவெடுப்பர்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (13.05.07)

1 comment:

திருவடியான் said...

நல்ல ஆய்வுக்கட்டுரை.

பாய்ந்து வரும் வேலுக்கு மார்பைக் காட்டுவது வீரமல்ல, விலகிக்கொண்டு தம்மைக் காப்பாற்றிக்கொள்ளல் விவேகம் என மூதாதையர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

வெளிநாடு செல்ல வசதியற்றோர் ஈழநாட்டில் அல்லலுகின்றனர். மக்கள் தீர்மானிப்பர் என்று சொல்லுவது சரியான விளக்கமாக இருக்க முடியாது. மக்கள் என்பார் சமாதானமான போரற்ற, உயிர்ப்பலியற்ற சமுதாயத்தைத் தருவோரைத் தான் நோக்கி நிற்கின்றனர், நிற்பர்.

எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆகவே சுவரைக் காப்பாற்றிக் கொள்ள ஆன காரியங்களைச் செய்வதே சாலச் சிறந்தது.