Thursday, May 10, 2007

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம்!

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது.

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடயம் தொடர்பாக அமெரிக்க அரசு சிறீலங்கா அரசு மீது பிரயோகித்த அழுத்தத்தையும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் வரவேற்றுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க வெள்ளைமாளிகைப் பேச்சாளர் சோன் மைக்-கோமக், சிறீலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு மீண்டும் அழைத்துவர அமெரிக்கா முயற்சி செய்வதாக கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் கடினமான காரியம் என்றும் கூறிய வெள்ளைமாளிகைப் பேச்சாளர் சோன் மைக்-கோமக், பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
நன்றி>புதினம்.

No comments: