Thursday, May 10, 2007

தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் இலங்கைக்கே!


போரழிவுகளினாலும், ஆழிப்பேரலை, மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தின் பேரழிவுகளினாலும் அல்லாடும் இலங்கைத் தீவை, பொருளாதாரச் சீரழிவு என்ற மற்று மொரு நெருக்கடி மோசமாகத் தாக்கி முடக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதாக அரசியல் தலைவர்களும், அவர்களுக் குச் சார்பான புள்ளி விவரங்களை அள்ளி வெளியிடும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரும் வாய்வீச்சாக அறிவித்தாலும் கூட, களத்தில் என்னவோ மக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் இருக்கின்றது.

வடக்கு , கிழக்கை தமிழர் தாயகத்தை பொறுத்தவரை போரழிவு மற்றும் ஆழிப்பேரலைப் பேரழிவுகளிலிருந்து அப் பகுதி மக்கள் இன்னும் மீளவேயில்லை. இராணுவ முனைப் பில் போரியல் போக்கில் தீவிரம் காட்டும் அரசுப் படை களினால் நாட்டுக்குள் இடம்பெயரும் அகதிகளின் எண் ணிக்கை பல லட்சங்களை எகிறித் தாண்டுகின்றது. வீடு, வாசல்களை நிலபுலன்களை உடைமைகளை உறவுகளை துறந்து, சரித்திரபூர்வ வாழிடங்களை விட்டு வேரோடும், வேரடி மண்ணோடும் தூக்கி வீசப்பட்டு, அன்றாட ஜீவ னோபாயத்துக்கான தொழில்களையும் பறிகொடுத்து, அகதி முகாம்களில் அல்லலுறும் தமிழர்களின் அவலம் சொல்லுந்தர மன்று.

தங்களின் பொருள்களையும் பொருண்மியத்தையும் இழந்து வடக்கு, கிழக்குத் தமிழர்கள் பெருந்துன்பம் அனுப விக்கின்றார்கள் என்றால், மறுபுறத்தில் கொழும்பு அரசின் கொள்கைப் போக்கால் முழு இல்ங்கைத் தீவினதும் பொருளா தாரமே படுத்து, முடங்கிவிடும் சீரழிவு நிலையை நோக்கிப் படு மோசமாக வீழ்ந்துகொண்டிருக்கின்றது.

நாளொரு விலையும் பொழுதொரு பாய்ச்சலுமாக எரி பொருளின் விலை உயர்ந்துகொண்டிருக்கின்றது. கோதுமை மா விலையேற்றம், எரிவாயு விலை அதிகரிப்பு, பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்வு என்று வரிசையாகப் பொருள் களின் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அவசிய சேவைகளின் கட்டணங்களும் விலைகளும் உய ரப் பறந்து வானைத் தொட்டு நிற்கின்றன.

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் பெறு மதி அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சுருங்கக் கூறுவதானால் ரூபாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு மோசமாகச் சரிந்து செல்கின்றது.

போரியல் போக்கில் மூர்க்கப் பிடிவாதம் கொண்டுள்ள அரசுத் தலைமை, அதனால் பொருளாதாரத்தைக் கோட்டை விட்டு விட்டு விழி பிதுங்கித் தவிக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு, அவர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவுசெய்யும் நீதியான தீர்வு ஒன்றை விட்டுக்கொடுப்போடு வழங்கி, நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதன்மூலம் அமைதித் தீர்வுகண்டு, அதன் வாயிலாக முழு இலங்கைத் தீவையுமே அபிவிருத்தி செய்து, உயர்த்துவதற் குக் கிடைத்த வாய்ப்பை தனது பௌத்த சிங்களப் பேரின வாத மேலாண்மைப் போக்கினால் தொலைத்துவிட்டுத் தடு மாறுகின்றது மஹிந்த அரசு.
தமிழர்களுக்கு உரிமைகள் எதையும் வழங்கிவிடக் கூடாது, அவர்களை அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடி மைப்படுத்தி ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங் கணம் கட்டி நிற்கும் கொழும்பு, அதற்காக யுத்த வெறித் திட் டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.

இதற்காகத் தனது பாதுகாப்புச் செலவினத்தை சுமார் நாற் பது வீதத்துக்கும் அதிகமாக உயர்த்தி, நாட்டின் பொருளா தாரத்தைப் படுக்கவைத்துவிட்டது அரசுத் தலைமை.
ஏற்கனவே முன்னைய கொழும்பு அரசுகள் யுத்தப் பேர ரக்கனுக்காக சர்வதேசத்திடம் பட்ட பெருந்தொகைக் கடன் நிலுவையில் நின்று, இலங்கையின் நிகர வருமானத்தை ஏப்பம் விட்டுக்கொண்டிருக்க, அது போதாது என்று பரிதவிக்க, பற்றாக்குறைக்கு இன்னும் கடன் வாங்கிப் போர் நடத்தத் துடி யாய்த் துடிக்கிறது மஹிந்தரின் தலைமை.

பேச்சு மேசையைப் புறக்கணித்து, யுத்தக் களத்தைத் தேர்ந்தெடுத்ததால் இப்போது விடுதலைப் புலிகளின் வான் வழி அச்சுறுத்தலைப் புதிதாக எதிர்நோக்கும் பெரும் இக் கட்டு நெருக்கடி அரசுத் தலைமைக்கு.

அந்தச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக மேலும் அவசர அவ சரமாக வான்வழிச் சவாலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கான செலவினம் என்ற பெயரில், பெரும் தொகைப் பணத்தை கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கத் தயாராகி விட்டது கொழும்பு.
ஏற்கனவே நொந்து, நொடிந்து போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கப் போகின்றது இந் தப் பொறுப்பற்ற யுத்தவெறித் தீவிரம்.

தேசியப் பிரச்சினையை அமைதி வழியில் தீர்த்துவைப்பதற்கு சர்வதேசம் நீட்டும் நட்புறவுக் கரங்களை தென்னிலங் கைப் பேரின வாதம், கர்ச்சித்துக்கொண்டு கிளம்பி எதிர்த்துப் புறமொதுக்குகின்றது. அமைதித் தீர்வு காண்பதற்கான முயற் சிகளில் உதவிப் பங்களிப்புச் செய்ய முன்வரும் நாடுகளுக்கு எதிராகக் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின் றன.
போரியல் முனைப்பில் தீவிரமாக அரசுத் தலைமை இருப்பதால் நாட்டுக்கான உதவித் திட்டங்களை சர்வதேச நாடுகள் முடக்க ஆரம்பித்துவிட்டன. பிரிட்டன், ஜேர்மன் போன்றவற்றைத் தொடர்ந்து பல நாடுகள் இந்த மார்க்கத் தைக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகின்றன.

யுத்த நெருக்கடியால் வெளிநாட்டு முதலீடுகள் கணிச மாகக் குறைந்து வருகின்றன. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் உள்ளூர் உற்பத்தித் தொழில்கள் படுத்துவிட்டன.
போதாக்குறைக்கு அளவுகணக்கின்றி நூற்றுக்கும் அதிகமாக அமைச்சுக்கள், பிரதி அமைச்சுகள் போன்ற வற்றை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை, தனது அர சியல் வங்குரோத்து நிலைமையைச் சமாளிப்பதற்காக அர சுத் தலைமையே சீர்கெடுத்து வருகின்றது.

இந்தப் பின்னணிகளையும், பொருளாதாரம் போகும் போக்கையும், அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு பேயாட்டம் போடுவதையும் நோக்குபவர்கள் தோல்வி யடைந்த நாடுகளின் பட்டியலில் முதல் நிலைமை இலங் கைக்கு விரைவில் கிடைக்கும் என்பது திண்ணம் என்பதை உணர்கிறார்கள்.
நன்றி>உதயன்.

No comments: