Monday, May 07, 2007

சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைத்துப் பேசும் வாய்ப்புக்கு கண்டனம்.

சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல்

சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது.


ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம். தெரிவிக்கிறோம்.

அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றி பிரித்தானியாவுக்கு தார்மீக உரிமை இல்லை. இலங்கையை ஆதிக்கம் செய்து இந்த மக்களின் அனைத்து மனித உரிமைகளையும் மீறியது பிரித்தானியாதான். அண்மைக்காலம் வரையாக அடிமை வியாபாரம் செய்து வந்தது பிரித்தானியாதான்.

சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் தனது தூதரக எல்லைகளுக்கு அப்பால் பிரித்தானிய ஆளுநர் போல் செயற்படுகிறார்.

அப்படியான செயற்பாடுகள் நீடிக்கும் நிலையில் இங்கே எந்த ஒரு வெளிநாட்டுத் தூதுவரும் எதுவிதமான பணியையும் மேற்கொள்ள இயலாது. பிரித்தானிய தூதுவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் சிறிலங்கா அரசாங்கமும் தவறு செய்து வருகிறது.

பிரித்தானியாவினால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காணவே சிறிலங்கா அரசாங்கம் போராடி வருகிறது.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரித்தானியா விரும்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைத்துப் பேசும் வாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: