


மீண்டு வந்த மீனவர்கள்... விலகாத மர்மங்கள்!
அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும், அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை.
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோ, அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள்.
மீண்டு வந்த மீனவர்களில் பத்துப் பேர் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
மீனவர்கள் விடுதலையானதுமே இந்தக் கடத்தல் நாடகத்தின் மர்மங்கள் விலகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ராமேஸ்வரம் வந்திறங்கிய மீனவர்கள் கியூ ப்ராஞ்ச் போலீஸாரின் இறுகிய வளையத்தைவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களுடன் சகஜமாகப் பேச முடியவில்லை. சென்னையில் முதலமைச்சரை சம்பிரதாயமாக அவர்கள் சந்தித்தபோதும், குமரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜோதிநிர்மலா அவர்களை வரவேற்றபோதும் கிளமென்ஸ் என்ற மீனவர் மட்டுமே நிருபர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், ‘‘எங்களைக் கடத்தியவர்கள் முதலில் புரியாத மொழியில் பேசினார்கள். ஆனால், காட்டுக்குள் சிறைவைத்திருந்தபோது தமிழில்தான் பேசினர். தவிர, புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியபோது, இவர்கள் பட்டாசு வெடித்தார்கள். எனவே, எங்களைக் கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’’ என்றார், தீர்க்கமாக. அவரோடு மீண்டு வந்த மற்ற மீனவர்கள் எல்லாம் ஏனோ நிருபர்களிடம் பேசுவதையே தவிர்த்தனர். மீண்டு வந்தவர்களில் பதினான்கு வயதுச் சிறுவனான அனிஸ்டன் மட்டும் பத்திரிகையாளர்களின் பகீரத முயற்சிக்குப் பின் வாயைத் திறந்தான். ‘‘எங்களை விடுவிக்கும் முன்பாக கண்ணைக்கட்டி அழைத்து வந்தனர். அப்போது துப்பாக்கிச்சூடு நடக்கும் சத்தம் கேட்டது. உடனே எங்களைக் கடத்தியவர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசி துப்பாக்கிச் சூட்டை நிறுத்தச் செய்தனர். எனவே, கடத்தியது சிங்கள கடற்படையாக இருக்கும்’’ என போட்டுடைத்திருக்கிறான் அனிஸ்டன்.
அதற்குமேல் அவகாசம் கொடுக்காமல் அத்தனை மீனவர்களையும் கியூ ப்ராஞ்ச் போலீஸார் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அனைவரையும் பத்திரமாக வீடுவரை கொண்டு போய் விட்ட போலீஸார், மீடியாக்களிடம் அதிகம் பேச வேண்டாம் என உத்தரவு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். (இறுதியில், சர்ச்சைக்குரிய பேட்டியைக் கொடுத்த அனிஸ்டனைக் காண, நாம் அவனது இல்லத்திற்குச் சென்றோம். அவன் மீண்டு வந்ததற்கான நேர்ச்சைகளைச் செய்வதற்காக ஏதோ வெளியூர் கோயிலுக்கு குடும்பத்துடன் போயிருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.)
இதற்கிடையே, மீண்டு வந்த மீனவர்களை வரவேற்று உபசரித்த குமரி டி.ஆர்.ஓ. ஜோதி நிர்மலாவின் கண்களிலும் பளிச்சென பட்டது அனிஸ்டன்தான். ‘தம்பி, இங்கே வா’ என அனிஸ்டனை அழைத்து அவரது வயது விவரங்களைக் கேட்ட டி.ஆர்.ஓ., மீனவப் பிரதிநிதிகளுக்கு ஒரு மினி லெச்சரே கொடுத்தார். ‘இந்தப் பதினான்கு வயதுச் சிறுவனை கடலுக்கு அனுப்பியிருக்கிறீர்களே! தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாதீர்கள். எல்லா கடலோர கிராமங்களிலும் இதை ஓர் அறிவிப்பாகச் செய்யுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தார்.
பதிலுக்கு அனிஸ்டனின் குடும்பச் சூழல் பற்றி டி.ஆர்.ஓ.விடம் மீனவப் பிரதிநிதிகள் சொன்ன தகவல்கள் படுசோகமானவை. 1992_ம் ஆண்டில் அனிஸ்டனின் தந்தை பர்த்தலோமை, இதேபோல் கடலில் காணாமல் போய் 57 நாட்களுக்குப்பிறகு மீண்டு வந்தாராம். அதில் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர், அதன்பிறகு கடல்தொழிலுக்குச் செல்வதில்லை. எனவே, தனது இளைய தம்பிகள் இருவர் மற்றும் பெற்றோரைப் பாதுகாக்கவே அனிஸ்டன் கடல் தொழிலுக்கு வந்தாராம்.
இந்த நிலைமைகளைக் கேள்விப்பட்ட குளச்சல் எம்.எல்.ஏ. ஜெயபால், அனிஸ்டனின் படிப்புச்செலவை ஏற்பதாகக் கூறியிருக்கிறார். அவரது குடும்பத்திற்கும் அரசு உதவ வேண்டும் என மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். வீடு திரும்பிய அனிஸ்டனை, அவரது பெற்றோர் உச்சிமோந்து ஆனந்தக்கண்ணீர் பெருக வரவேற்ற விதம் நெகிழ வைப்பதாக இருந்தது.
இதேபோல கோடிமுனை, கொட்டில்பாடு கிராமங்களில் பட்டாசு வெடித்து இந்த மீனவர்களுக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். ‘‘பத்து மீனவர்கள் மீட்கப்பட்டதால் பத்துக் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன’’ என நெகிழ்வோடு கூறினார், மீனவப்பிரதிநிதி ஒருவர்.
ச. செல்வராஜ்
- குமுதம் ரிப்போர்ட்டர், May 27, 2007
1 comment:
வேடிக்கையாக இருக்கிறது, கடத்தப்பட்டவர்கள் தமிழக தமிழர்கள், அவர்கள்விடுவிக்கப்பட்டு விட்டார்கள்,அவர்கள் இப்போது இருப்பது தமிழகத்தில், தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சிசெய்கிறார்கள், ஆனால் தமிழக தமிழருக்கு இன்னமும் யார் கடத்தினார்கள் என்று தெரியாது:-)
Post a Comment