Sunday, May 13, 2007

சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம்!!!

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்:

கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை விட்டு தப்பி ஓடும்படி சிறிலங்கா புலனாய்வுத்துறை வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் வெளிநாடு ஒன்றிற்கு இந்த வாரம் தப்பிச் சென்றுள்ளார்.

கிழக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ள வேளையில் கருணாவின் பிரசன்னம் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற கருத்தும் அரசிடம் உண்டு. கருணா குழுவுடன் அரசுக்கு உள்ள தொடர்புகளை பல அனைத்துலக நிறுவனங்கள், மற்றும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். அண்மையில் பயணம் செய்த அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், பிரித்தானிய பிரதிநிதி ஹிம் ஹாவல் ஆகியோரும் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு கருணா குழுவினரே காரணம் என தெரிவித்திருந்தனர்.

கிழக்கில் ஒரு இடைக்கால அரசை அமைத்து அதற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என கருணா விரும்பியிருந்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் தன்னை கற்பனை செய்திருந்தார்.

கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. கருணாவின் புதிய கட்சியின் பெயரில் இருந்து ஈழம் என்னும் சொல்லை அகற்றிவிடுமாறு அரசு முன்னர் பணித்திருந்தது. இப்படியான பணிப்புரை ஈ.பி.டி.பிக்குக் கூட விடுக்கப்படவில்லை.

கருணாவை விட பிள்ளையானுடன் இராணுவத் தரப்பிற்கு உறவுகள் அதிகம். மேலும் பிள்ளையானின் அரசியல் ஆசைகளும் குறைவு என்பதுடன் அனைத்துலக ரீதியிலும் பிரபலமற்றவர் என்பது அரசின் கருத்து. எனவே தான் கருணாவை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

கருணா குழுவின் பேச்சாளரான அசாத் மௌலானாவும் காணாமல் போயுள்ளார். அவரது செல்லிடப்பேசி வேலை செய்யவில்லை. அவரும் மங்களன் மாஸ்ரரும் நடுநிலைமையில் இருந்தவர்கள். பின்னர் அவர்கள் பிள்ளையான தரப்புடன் கட்டாயமாக இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருணா தரப்பில் உள்ள இனியபாரதி, றியாசீலன், சின்னத்தம்பி, ஜெயதான், சந்திவெளி மாமா, மகிலன், திலீபன் ஆகியோர் உள்ளனர். பிரான்சில் இருந்து வழங்கப்பட்ட பணத்தின் மூலம் அவர்கள் கருணா குழுவுக்குள் பிளவை உண்டு பண்ணியதாக இராணுவம் கூறுகின்றது.

ஆனால் இராணுவப் புலனாய்வுத்துறையால் பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிருஸ்ணன் என்னும் முன்னைய ஈ.என்.டி.எல்.எஃப் நபர் மூலம் கருணா குழு உடைக்கப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்த சிந்துஜனும் அவரது நான்கு சகாக்களும் இனியபாரதியினால் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து கருணாவுடன் சந்திப்புக்காக கொழும்பு சென்று கொண்டிருந்த பிள்ளையான் இடைநடுவில் தனது பயணத்தை கைவிட்டு கிழக்குக்கு திரும்பியிருந்தார். இதில் காயமடைந்த சீலன் மருத்துவமனையில் உள்ளார்.

சிந்துஜனின் கொலையை பாரதியே செய்தது என்பதற்கு சாட்சியாக இருந்த சிந்துஜனின் தந்தையாரும் இந்த வாரம் கல்லாறில் கருணா தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிள்ளையான் தரப்பு பொலநறுவை, திருமலைப் பகுதிகளிலும், கருணா குழு மட்டக்களப்பிலும் தங்கியுள்ளது. இரு குழுக்களும் இராணுவ பாதுகாப்பில் உள்ளனர்.

கருணா குழுவில் உள்ள முக்கால் பங்கு உறுப்பினர்கள் பிள்ளையானுடன் உள்ளனர். பிரதீப் மாஸ்ரர், ஜெயத்தான் ஆகியோரும் பிள்ளையானின் ஆதரவை நாடியுள்ளனர். கருணா தனது பிடியை முற்றாக இழந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

No comments: