Sunday, May 06, 2007

சாம்-16 ஏவுகணைகளால் முயற்சித்தும் வீழ்த்த முடியாத புலிகளின் வானூர்திகள.


தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை நோக்கி இரு முறை சாம்-16 ரக ஏவுகணைகளை ஏவ முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என்று சிறிலங்கா இராணுவத்தினர் கவலையடைந்திருப்பதாக கொழும்பு வார ஏடான சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

பல இலட்சக்கணக்கான கணக்கான மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தை கண்டு கழித்துக் கொண்டிருந்தனர். தமது வீடுகளில், களியாட்ட விடுதிகளில், சமூக நலக் கூடங்களில், விடுதிகளில், மைதானங்களில் அகண்ட தொலைக்காட்சி திரைகளில் துடுப்பாட்டப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

அப்போது கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் திடீரென மின்சாரம் தடைப்பட்டதுடன் வெடி ஓசைகளும் கேட்கத் தொடங்கின. கொழும்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் பரவின. பதற்றமடைந்த மக்கள் தமது வீடுகளுக்குச் சிதறி ஓடத் தொடங்கினர்.

பல்வேறு பகுதிகளிலும் இருந்து வானை நோக்கி கண்டபடி தாக்குதல்களை நடத்திய படையினர் மக்களின் இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருந்தனர். கொழும்பு துறைமுகத்தை விடுதலைப் புலிகளின் குண்டுவீச்சில் இருந்து பாதுகாக்கும் முகமாக கடற்படைக் கப்பல்களில் இருந்தும் வானை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக வதந்திகள் பரவின.

சிறிலங்கா அரச தலைவர் மாளிகையில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் மகிந்த மாளிகை மீது வான் தாக்குதல் நிகழ்வதாக வதந்திகள் பரவ வழிவகுத்து விட்டன.

இதே போன்று இராணுவத் தலைமையகம், இரத்மலானை வான்படைத் தளம் எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக வதந்திகள் பரவின.

உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதனை பாதுகாப்புத்துறையும், இராணுவத்தினரும் குறிப்பட்டளவு நேரம் உணர முடியாதவர்களாகவே இருந்தனர்.

கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் இருந்து 101 கி.மீ தொலைவில் உள்ள பாலாவியில் இரு வான்கலங்களை அவதானித்த பின்னர் அவற்றை மத்திய ராடார்களில் அவதானிக்க முடியவில்லை.

பின்னர் உஸ்வெறிகெயாவாவில் அவற்றை கடற்படைப் படகு அவதானித்த போது இரு வானூர்திகளில் ஒன்று முத்துராஜவலப் பகுதியை நோக்கியும் மற்றொன்று கொழும்பு துறைமுகப்பகுதியை நோக்கியும் பிரிந்து செல்லத் தொடங்கின.

முதலாவது வானூர்தி முத்துராஜவலப் பகுதியில் உள்ள செல் எரிவாயு சேமிப்பு நிலையம் மீது இரு குண்டுகளை வீசியது. அதில் ஒன்று இரு சேமிப்புத் தாங்கிகளுக்கு இடையில் வீழ்ந்து வெடித்ததில் தீயணைப்பு தடுப்பு இயந்திரம் சேதமடைந்தது. இந்த மையத்தில் உள்ள கோபுரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு மின் விளக்கானது, வானோடி இலகுவாக இலக்கின் மீது குண்டை வீச உதவியதாக படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மீண்டும் திரும்பிய வானூர்தி, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு பகுதி மீதும் குண்டுகளை வீசியது.

இரண்டாவது வானூர்தி கொலன்னாவ நோக்கிச் சென்று குண்டுகளை வீசியது. முதலாவது குண்டு டீசல் சேமிப்பு தாங்கியின் அருகில் வீழ்ந்து வெடித்தது.

அங்கு வீசப்பட்ட இரண்டாவது குண்டு வெடிக்கவில்லை. அது 35 கிலோ எடையும், ஒரு மீற்றர் நீளமும், சி-4 வெடிமருந்துகளையும், இரும்பு குண்டுகளையும் கொண்ட குண்டாகும்.

மூன்றாவது குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அதனை இன்றுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதனிடையே தம்மிடம் உள்ள சாம்-16 ரக ஏவுகணையினால் விடுதலைப் புலிகளின் வானூர்தியை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று படைத்தரப்பினர் கவலையடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக இந்த ஏவுகணைகளுடன் சிறிலங்கா வான்படையினர் கொலன்னாவ பகுதியில் தயாராகவே இருந்தனர்.

அவர்களுடன் பாதுகாப்பு கட்டளை மையம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களை பரிமாறி வந்தது.

வான் படையினர் வானூர்தியின் ஒலியை தெளிவாக கேட்ட போதும் அவர்களின் சாம்-16 ஏவுகணையினால் விடுதலைப் புலிகளின் வானூர்தியை தனது தாக்குதல் இலக்கிற்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால் 15 செக்கன்களில் ஏவுகணையின் மின்கலம் செயலிழந்து விட்டது. பின்னர் மற்றுமொரு ஏவுகணையை சுடுநிலைக்கு கொண்டு வந்தனர். மிகவும் இருளாக இருந்தது. எனவே வானூர்தியை ஏவுகணையின் இலக்கிற்குள் கொண்டுவர முடியவில்லை.

கொலன்னாவையில் குண்டை வீசிய பின்னர் வானூர்தி பொரளை, நுகேகொட வழியாக இரத்மலானை நோக்கிச் சென்றது. ஆனால் அவை எப்படி வன்னிக்குச் சென்றன என்பது குறித்து தெரியவில்லை. இது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட நான்காவது வெற்றிகரமான வான் தாக்குதல் ஆகும்.

மார்ச் 26 கட்டுநாயக்கா மீதான தாக்குதல்,

ஏப்ரல் 23 பலாலித் தளம் மீதான தாக்குதல்,

ஏப்ரல் 26 கட்டுநாயக்கா மீதான தாக்குதல் முயற்சி,

ஏப்ரல் 29 கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகள்

மீதான தாக்குதல்கள் என்பன இந்த நான்கு தாக்குதல்களும் ஆகும்.

விடுதலைப் புலிகளிடம் 5 செக்கோஸ்லாவாக்கிய தயாரிப்பான Zlin-143 ரக வானூர்திகள் உள்ளதாகவும் அவையே இந்த நான்கு தாக்குதல்களிலும் பங்கு பற்றியதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளிடம் தற்போது 10 வானூர்திகள் உள்ளதாக கூறப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SA-16 GIMLET தொடர்பான சில தகவல்கள்:

சோவியத்தின் தயாரிப்பான இந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை மனிதர்களால் காவிச் செல்லக்கூடியதாகும். இது தாழ்வாகப் பறக்கும் வானூர்திகள் மற்றும் உலங்குவானூர்திகளை தாக்கி அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டது.

இது சாம்-7, சாம்-14 ஆகியவற்றின் நவீன வடிவமாகும் 1986 ஆம் ஆண்டு பாவனைக்கு வந்த இந்த ஏவுகணைகள் சாம் - 18 9M39 ஏவுகணைகளை விட தாக்கி அழிக்கும் வலிமையை அதிகம் கொண்டவை.

இது கடந்த ஊதா வழிகாட்டிகளை உடையதுடன், இரு IR மற்றும் UV என வர்ணங்களை தேடிச் செல்லக்கூடியது. இரு வர்ண வழிகாட்டிகளை கொண்டிருப்பதனால் வானூர்திகளில் இருந்து வீசப்படும் Flares ரக எதிர்ப்பு சாதனங்களின் பாதிப்புக்களை சாம்-16 குறைக்கக் கூடியது.

5000 மீற்றர் துரா வீச்சுடைய சாம்-16 ஏவுகணை 3500 மீற்றர் உயரங்களில் பறக்கும் வானூர்திகளை வீழ்த்த வல்லது.

வேகம் : ஒலியின் இரு மடங்கு
தாக்குதல் உயரம்: 3,500 மீற்றர்
தாக்குதல் தூர வீச்சு 500 - 5,000 மீற்றர்
ஏவுகணையின் தாக்கும் பகுதி: 2 கி.கிராம்
வழிகாட்டி: IR மற்றும் UV
நன்றி>புதுனம்.

No comments: