"தமிழீழம் சிவக்கிறது" என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூல் விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்றும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக எழுதுவது சட்டப்படி குற்றம் என்றும் 2002ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் மீதும் இந்த நூல்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தமிழ் முழக்கம் ஷாகுல் அமீது மீதும் தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 124 (ஏ) இந்திய குற்றவியல் சட்டம் 505 (1பி) மற்றும் 120ஆவது பிரிவு (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குத்தொடர்ந்தது. நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதியில் தீர்ப்புக் கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் அரசு துணை வழக்கறிஞர் இந்த வழக்கைத் திரும்பப்பெறுவதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
குற்றம் சாட்டப்பவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பறிமுதல் செய்யப்பட்ட "தமிழீழம் சிவக்கிறது" நூலின் படிகளைத் திரும்பத் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்கை அரசு திரும்பப் பெற்றுவிட்டப் பிறகு நூல்களைத் தரமறுப்பது சரியல்ல என வாதாடினார்.
அரசுத் தரப்பில் வாதாடிய அரசு வழக் கறிஞர் மேற்கண்ட நூலில் சட்ட விரோதமான செய்திகள் அடங்கியிருப்பதாகவும் இந்த நூல் பொதுமக்களிடம் பரவினால் தமிழகத்தின் அமைதி பாதிக்கப்படும் இந்த நூலைத் திருப்பித்தருவது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று கூறினார்.
அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி திரு.எம். வேலு, நூல்களை திருப்பித் தரவேண்டியதில்லை என்று தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளதாக வழக்கறிஞர் என். சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
வழக்கே தள்ளுபடி ஆன பிறகு கைப்பற்றப்பட்ட நூல்களை அரசு கொடுக்க மறுப்பது முறைகேடானதாகும். எந்த வழக்கிலும் இப்படி ஒரு முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கையை அரசு மேற்கொண்டதில்லை.
"தமிழீழம் சிவக்கிறது"
1987ஆம் ஆண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாட்டை அமுல்நடத்தாத சிங்கள அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட நிகழ்ச்சியிலிருந்து 1991ஆம் ஆண்டு வங்கக்கடலில் சர்வதேச எல்லையில் தனது நாட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த தளபதி கிட்டுவின் கப்பலை இந்தியக் கடற்படை சுற்றி வளைத்துக்கொண்டபோது அவரும் அவரது தோழர்களும் உயிர்த்தியாகம் செய்துகொண்ட நிகழ்ச்சிவரை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து இந்நூலில் பழ. நெடுமாறன் எழுதியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் தமிழீழத்தில் அவர் செய்த சுற்றுப்பயணமும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை அவர் சந்தித்துப் பேசிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நன்றி>தென்செய்தி
Wednesday, May 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment