தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த ஆனையிறவுச் சமரின் போது யாழ். குடாநாட்டுக்குள் சிக்கிக் கொண்ட 32 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியது என்று யாழ். தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது:
யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளும்
சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் நாள் படையினர் முன்நோக்கி பாய்தல் நடவடிக்கையை ஜெனரல் தளுவத்தை, ஜெனரல் வீரசூரியா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இது விடுதலைப் புலிகளின் உளவுறுதியை அதிகரித்திருந்தது.
1995 ஆம் ஆண்டு மணலாறு மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எமக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்து சிறப்பு படையினரை அனுப்பி வைக்குமாறு பாதுகாப்புத் தரப்பை கேட்டிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் இலக்கு பூநகரி அல்லது ஆனையிறவு தான் என கூறியதுடன் படையினரை அனுப்ப மறுத்துவிட்டனர்.
விடுதலைப் புலிகள் தாக்கினால் படையினரை அனுப்புவதாக ஜெனரல் தளுவத்தை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் தாக்குதலை தொடுப்பதற்கு முன்னரே எனக்கு படையினர் தேவை அதற்கு பின்னர் அல்ல என நான் தெரிவித்திருந்தேன்.
சூரியக்கதிர் நடவடிக்கை ஜெனரல் நீல் டயஸ், கருணாதிலக ஆகியோரின் தலைமையில் தொடங்கி கோப்பாய் வரை சென்ற நிலையில் இருந்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. விடுதலைப் புலிகளின் ஏவுகணையினால் எமது 3 வானூர்திகள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் காயப்பட்ட படையினரை அகற்றுவது, ஆயுதங்களை நகர்த்துவது என்பன மிகவும் கடினமாக இருந்தது. எனவே நடவடிக்கையை நிறுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் தளுவத்தை எனது கருத்துக்களை கேட்டார்.
நான் எனது பிரிக்கேட் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு தெரிவிப்பதாக கூறினேன். பின்னர் நடவடிக்கையை மேற்கொள்ள சம்மதித்தேன். தளுவத்தை அதற்கு அனுமதி அளித்தார். விடுதலைப் புலிகளால் பொறிவெடிகள், கண்ணிவெடிகள் வீதிகள், வீடுகள் என்பவற்றில் புதைக்கப்பட்டிருந்தன. அதுவே எமக்கு பெரும்சவாலாக இருந்தது. நாம் கொழும்புத்துறையை கைப்பற்றுவததை நாம் முதன்மையாக கொண்டிருந்தோம்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் எமது நடவடிக்கை தடைப்பட்டது, அவர்களுக்கு எமது திட்டம் ஏற்கனவே தெரிந்து விட்டது. எனவே எமது திட்டத்திற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக நான் எனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். அவர்கள் நான் நடவடிக்கையை தொடர விரும்பவில்லை என சந்திரிகாவிடம் தெரிவித்திருந்தனர்.
என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரிகா அது தொடர்பாக விசாரித்தார். நவம்பர் 26 ஆம் நாள் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட வேண்டும் என அவர் என்னிடம் தெரிவித்தார். நாம் அவசரமான நடவடிக்கைகளில் இறங்கினால் பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என நான் அவருக்கு விளக்கினேன். நான் நன்றாக திட்டமிட்ட நடவடிக்கை மூலம் யாழ்பாணத்தை கைப்பற்றுவேன் என அவரிடம் தெரிவித்தேன்.
இரண்டு நாட்களின் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சந்திரிகா நடவடிக்கைகள் தொடர்பாக விசாரித்தார். நடவடிக்கை தொடர்வதாகவும் வெற்றியின் பின்னர் தெரிவிப்பதாகவும் நான் அவரிடம் தெரிவித்தேன்.
முன்னாள் பாதுகாப்புத்துறை மேலதிகாரிக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. நவம்பர் 30 ஆம் நாள் எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு ஏதும் நடந்துவிட்டால் எனது பிள்ளைகளின் நிலை குறித்து கவலை அடைந்தேன். பின்னர் டிசம்பர் 1 ஆம் நாள் யாழ். நகரம் மீதான தாக்குததலை தொடங்கினோம்.
விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்து தாக்கினார்கள். மோட்டார் தாக்குதலில் கேணல் ஜுவ் காயமடைந்தார். கட்டளை அதிகாரி காயமடைந்ததாக மேஜர் சன்னா வெடுகே எனக்கு தெரிவித்தார். அவரை நான் பார்த்துக் கொள்வதாகவும் நடவடிக்கையை தொடரும்படியும் நான் அவருக்கு கூறினேன். பின்னர் நாம் யாழ். நகரத்தை கைப்பற்றினோம்.
நான் உடனடியாக சந்திரிகாவை தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தேன். எனக்கு பதவி உயர்வும் பல சலுகைகளும் தருவதாக அரச தலைவர் கூறினார். இரு தினங்களின் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சந்திரிகா யாழ். நகரத்தில் சிங்க கொடியேற்றும் வைபவத்தை நடத்தச் சொல்லி சிலர் தனக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் யாழ். நகரம் சிறிலங்காவின் ஒரு பகுதி அதில் கொடியேற்றுவது உங்களுக்கு அவமானமானது என நான் தெரிவித்தேன். இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் கொடியேற்றுவதே வழக்கமானது. ஆனால் பல நபர்கள் கொழும்பில் இருந்து வந்தனர் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.
179 தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் நாம் 19 இராணுவத்தினரை இழந்தோம். வலிகாமத்துக்குப் பின்னர், தென்மராட்சி பகுதி சமருக்காக 53 ஆம் படையணி நிறுத்தப்பட்டது. அதில் 131 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். பருத்தித்துறை நோக்கி நாங்கள் முன் நகர்ந்தபோது விடுதலைப் புலிகள் காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டனர். மே 12 ஆம் நாளன்று யாழ். குடாநாடு இராணுவத்தினர் வசம் வந்தது.
2000 இல் யாழ். குடாவை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொண்டனர். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்ட வீரசூரிய யாழ். குடாநாட்டில் உள்ள அதிகாரிகள் போரை நடத்தமுடியாதவர்களாக உள்ளதாக தெரிவித்தார். ஜெனரல் பலேகல்ல, ஜெனரல் செனிவிரட்ன ஆகியோர் கட்டளை அதிகாரிகளாக இருந்தனர். நான் அங்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். ஜெனரல் ரத்வத்தை அதை அனுமதிக்க மாட்டார் என வீரசூரிய தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் மறுபடியும் நான் யாழ். குடாவுக்கு செல்வதற்கு அனுமதியை கோரினேன். அமைச்சர் அதற்கு சம்மதிக்க மாட்டார் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஏப்ரல் 20 ஆம் நாள், சந்திரிகா சிகிச்சைக்காக பிரித்தானியாவில் தங்கியிருந்தார், ரத்வத்தை நுவரேலியாவில் இருந்தார். அப்போது என்னை இணைந்த நடவடிக்கை தளபதியாக யாழ். குடாவுக்கு அனுப்புவதற்கான முடிவு பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி என்னிடம் தெரிவித்தார்.
ஆனையிறவு வீழ்ச்சி கண்டு விட்டது, யாழ். குடாநாடும் சில தினங்களில் வீழ்ச்சி கண்டுவிடும் என அவர் என்னிடம் தெரிவித்தார். இதனை தடுப்பதற்கு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கையை நான் எடுப்பேன் என அவரிடம் தெரிவித்தேன். எனக்கு உதவியாக ஜெனரல் சரத் பொன்சேகாவும் அனுப்பப்பட்டார்.
இது எனது கடைசிப்பயணமாக இருக்கலாம். எனவே நான் எனது மனைவி பிள்ளைகளுடன் சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு இரு தினங்கள் தேவை என அவரிடம் நான் தெரிவித்தேன். அவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் தந்தார். நான் யாழ். குடாவிற்கு செல்வது இலத்திரனியல் ஊடகங்களில் உடனடியாக வெளிவந்து விட்டது. நான் எனது வீட்டை அடைந்த போது நண்பர்களும், உறவினர்களும் என்னை சூழ்ந்து கொண்டு செல்ல வேண்டாம் என தடுத்தனர். அதிகாரிகள் என் மீது பழியை சுமத்தி தமது கைகளை கழுவுவதற்கு முயற்சிப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
16 வயது நிரம்பிய எனது மகள் கண்ணீர் மல்க யாழ். குடாவுக்கு செல்ல வேண்டாம் என என்னிடம் மன்றாடினார். நான் அங்கு செல்லா விட்டால் அங்குள்ள 32,000 படையினரும் மாண்டு விடுவார்கள் என நான் எனது மகளிடம் கூறினேன்.
நான் யாழை அடைந்த போது அங்கு எல்லாம் கைவிட்டு பேயிருந்தது. மிகவும் முக்கியமான பகுதிகளுக்கு மேலதிக படையினரை அனுப்பினேன். படையினரின் உளவியல் உறுதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினேன். மே 4ஆம் நாளன்று என்னை கொழும்புக்கு வரும்படி சந்திரி;கா அழைத்திருந்தார். நான் கொழும்புக்குச் சென்றால் இராணுவத்தினரின் மன உறுதி பாதிக்கும் என்று ஜெனரல் வீரசூரியவிடம் கூறினேன். கடைசி வானூர்தி இரவு 7.30 மணிக்கு புறப்படும். அதில் சென்றுவிட்டு காலையில் திரும்பிவிடுங்கள் என்று அவர் எனக்கு அறிவுறுத்தினார்.
நான் கொழும்பு அலரி மாளிகை சென்ற போது பாதுகாப்புச் சபைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்தியாவில் இருந்து கப்பல்களின் உதவிகளை பெற்று படையினரை வெளியேற்ற உதவுமாறு கோரி கதிர்காமரை தான் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக சந்திரிகா என்னிடம் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் ஆனால் யாரும் பதில் கூறவில்லை.
இந்த நடவடிக்கை மூலம் 10,000 படையினரை கூட காப்பாற்ற முடியாது. ஒரே வழி எம்மை போரிட அனுமதியுங்கள் என நான் கூறினேன். பல்குழல் உந்துகணை செலுத்திகளை கொள்வனவு செய்து தரும்படி கோரினேன். பின்னர் உடனடியாக யாழ். குடாவுக்கு திரும்பினேன். அதன் பின்னர் எமக்கு சாப்பிட நேரம் இருக்கவில்லை. உணவை விட ஆயுதங்களும், வெடி பொருட்களும் முக்கியமாகின. எனவே உணவு கொண்டுவரும் வானூர்திகளை நிறுத்தி ஆயுதங்களை வரவழைத்தோம். பின்னர் பல்குழல் உந்துகணை செலுத்திகள் எமக்கு கிடைத்தன. இறுதியில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினோம்.
றோகண விஜயவீர கைது
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீராவை கைது செய்த குழுவுக்கு நான் தலைமை தாங்கினேன். அவரை கைது செய்வதே எனது கடமை நான் அவரை துன்புறுத்தவில்லை. அவரின் மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்புவதற்கு நான் உதவினேன். விஜயவீர என்னுடன் வந்தார். அவர்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒரு வர்த்தகரின் வானை ஒழுங்கு செய்தோம்.
விஜயவீரவின் மகள் தனது வளர்ப்பு நாய் குட்டியையும் கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். நாயை கொண்டு சென்றால் அது குரைத்து அயலவர்களை எழுப்புவதுடன், சோதனை நிலையங்களையும் உசார் படுத்திவிடும் என பக்குவமாக அவருக்கு விளங்கப்படுத்தினேன். அவரை கைது செய்து கொடுத்தது தான் எனது பணி அதன் பின்னர் நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை.
யாழ். குடாவை 2000 ஆம் ஆண்டு தக்கவைத்த பின்னர் எனக்கு இராணுவத் தலைமையகத்ததில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் என்னை பதவியில் இருந்து நீக்கி பிரதம அதிகாரியாக நியமித்திருந்தனர். நான் எனது பதவியை மட்டும் இழந்தேன் ஆனால் நாடு பலவற்றை இழந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தோனேசியாவில் நடவடிக்கை
அவுஸ்திரேலியாவில் தூதுவராக கடமையாற்றிய போது இந்தோனேசிய தூதுவருடன் உறவுகளை பேணி இந்தோனேசியாவில் இருந்து விடுதலைப் புலிகள், ஆயுதங்கள் கடத்துவதை தடுத்ததுடன், அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டுவதையும் தடுத்தேன். என்னை இந்தோனேசியாவுக்கு தூதுவராக நியமித்த போது அதனை நான் மறுத்திருக்க முடியும்.
எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல்களை தடுப்பதற்காக அங்கு சென்றேன். அங்கு இந்தோனேசியா அதிகாரிகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தலுடன் தொடர்புபட்ட இரண்டாவது தலைவரை கைது செய்தோம்.
தற்போது என்னை தூதுவர் பதவியில் இருந்து நீக்கியதனைத் தொடர்ந்து நான் கவலை அடைந்துள்ளேன். ஏனெனில் விடுதலைப் புலிகள் மீண்டும் பெருமளவில் ஆயுதங்களை கடத்த முயற்சிக்கலாம். அவர்கள் இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் மட்டத்தில் உறவுகளை ஏற்படுத்தினால் அது எமக்கு நல்லதல்ல.
தேர்தலில் போட்டியிட அழைப்பு
2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் பங்குகொள்ளுமாறு எனக்கு தொலைபேசி அழைப்பை விடுத்திருந்தார். எனது நண்பர் மங்கள சமரவீரவும் அதே போன்றதொரு கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால் நான் நிராகரித்து விட்டேன். எனக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் நான் அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் பதவியையே ஏற்றுக்கொண்டேன்.
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் நான் அமெரிக்கா அதிகாரிகளுடன் பேசி விடுதலைப் புலிகளை தடை செய்தேன். பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எனது தனிப்பட்ட நண்பர். 1980 களில் கிழக்கு மற்றும் வவுனியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளில் அவர் என்னுடன் பணியாற்றி உள்ளார்.
அவர் ஒரு றெஜிமென்ற் அதிகாரி, முதலாவது கஜபாகு படைப்பிரிவில் இருந்தார். 1990 களில் யாழ். கோட்டையை காப்பாற்றும் நடவடிக்கையில் அந்த படைப்பிரிவு பங்குபற்றி இருந்தது. பல்வேறு வழிகளில் பலர் பிரிந்திருப்பது கவலையானது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் ஒரு இராணுவத்தில் 34 வருடங்களும், இராஜதந்திர மட்டங்களில் 6 வருடங்களும் சேவையாற்றி உள்ளேன்.
பாதுகாப்புச் செயலாளர்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கும் படி கோரியது எனக்கு தெரியாது. அந்த பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. 1995 ரத்வத்தையும், ஜெரி டீ சில்வாவும் போர் 6 மாதங்களில் முடிந்துவிடும் என கூறினார்கள். ஆனால் அது முடிவடைய குறைந்தது 3 வருடங்கள் எடுக்கும் என நான் தெரிவித்தேன். அந்த அறிக்கையால் எனது பதவி பறிக்கப்பட்டு நான் மணலாற்றுப் பகுதிக்கு பிரிக்கேட் கொமாண்டராக நியமிக்கப்பட்டேன் என்றார் ஜனக பெரேரா.
நன்றி>புதினம்.
Sunday, May 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பதிவிற்கு நன்றி.
Post a Comment