சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இராணுவ மற்றும் பொருளாதார மையங்கள் மீதான விடுதலைப் புலிகளின் வான்படை நடத்திய அண்மைய தாக்குதல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய ஆங்கில நாளேடான 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை:
கொழும்பில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார மையங்களை அவதானித்தால் அது வெளிநாட்டு வர்த்தகம், உல்லாசப்பயணத்துறை போன்றவற்றில் தங்கியுள்ளது. எனவே தலைநகரத்தின் மீதான கடுமையான அச்சுறுத்தல் முழு நாட்டிலும் தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியது.
கடந்த மார்ச் 26 ஆம் நாள் நடைபெற்ற வான்புலிகளின் முதலாவது வான்தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத்தளத்தை தாக்கியிருந்தது. அது அருகில் இருந்த அனைத்துலக வானூர்தி நிலையத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. இரண்டாவதாக ஏப்பிரல் 29 ஆம் நாள் நடைபெற்ற தாக்குதல் எண்ணெய் சேமிப்பு மையங்களான கொலன்னாவ மற்றும் முத்துராஜவல பகுதிகளை தாக்கியிருந்தது.
இந்த இரு தாக்குதல்களிலும் ஏற்பட்ட பௌதீக சேதங்கள் குறைவானது ஆனால் அது நாட்டின் பொருளாதாரத்தின் முகாமையாளர்களை தட்டி எழுப்பியுள்ளது. தமது வான் தாக்குதல்கள் தொடரும் எனவும், அரசு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழர் பகுதிகள் மீது தொடர்ந்தும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களை நடத்தினால் தாம் அரசின் முக்கிய கேந்திர மையங்களை தாக்குவோம் எனவும் விடுதலைப் புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்ந்தால் அது முதலில் உல்லாசப் பயணத்துறையையே பாதிக்கும். கடந்த வருடம் 500,000 உல்லாசப்பயணிகள் சிறிலங்காவிற்கு வந்திருந்தனர். அதன் மூலம் உல்லாசப்பயணத்துறை 410 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருந்தது. அதவாது மூன்றாவது பெரிய டொலர் சம்பாதிக்கும் துறையாக அது விளங்கியது. மேலும் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை 4 மில்லியன் மக்கள் கடந்து செல்வதுண்டு அது தென் ஆசியாவில் ஒரு முக்கியமான வானூர்தி நிலையம்.
ஆனால் ஏப்பிரல் 29 ஆம் நாள் தாக்குதலின் பின்னர் ஏமிரேற்ஸ், கதே பசுபீக் போன்ற வானூர்தி நிறுவனங்கள் தமது வானூர்தி சேவையை நிறுத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இரவில் நடைபெறுவதால் சிங்கப்பூர் வானூர்தி நிறுவனம் தனது இரவு நேர வானூர்தி சேவையை நிறுத்தியுள்ளது.
சில ஐரோப்பிய நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்து தமது மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இவை உல்லாசப்பயணிகளின் வரவை பாதிக்கும். இந்த வரவு கடந்த ஆண்டு 36 விகிதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. எனவே முன்னனி விடுதிகள் தமது விரிவாக்க பணிகளை நிறுத்தியுள்ளன.
கொழும்பு தென் ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய இடைத்தரிப்பு மையமாக விளங்கும் போது இது நிகழ்ந்தது துரதிர்ஸ்டவசமானது. போர் தொடர்ந்தால் கொழும்பு தனது நிலையை இழக்கும் என ஆசியாவின் லிர்னி அமைப்பின் பொருளியல் நிபுணரான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏப்பிரலில் சிறிலங்காவானது அதன் பாதுகாப்பு, பொருளாதார உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி பேன்றவற்றில் பிபி என்ற தரப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது என பிற்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இது எதிரான நிலையாகும்.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பாதுகாப்பு கட்டமைப்பிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. மிகவும் பெறுமதி வாய்ந்த வான் கண்காணிப்பு, வான் கண்டறிதல், இரவு நடவடிக்கை, அதிகளவான வானூர்திகள் போன்ற சாதனங்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவு 139 பில்லியன் ரூபாய்கள் ($1.25 bn), இது கடந்த ஆண்டை விட 28 விகிதம் உயர்வாகும். ஆனால் இது 200 பில்லியன் ரூபாய்களாக ($1.80 bn)அதிகரிக்கலாம் என முன்னாள் வான்படைத் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்காக செலவு செய்யப்படும் மேலதிக தொகை அபிவிருத்திக்கான செலவுகளை குறைவடையச் செய்யும். குறிப்பாக நாட்டின் உட்கட்டுமானங்களை நலிவடையச் செய்யும். பொருளாதாரம் 7.5 விகிதமாக வளர்ச்சிகண்ட போதும் அது முக்கியமான பகுதிகளில் அல்ல என சில்வா மேலும் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு துறை வளர்ச்சி 20 விகிதமாக உள்ளபோது விவசாயத்துறையின் வளர்ச்சி 1 விகிதமாக உள்ளது.
பணவீக்கம் 17 வீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் ஊதியம் விவசாயத்துறையில் 10 வீதத்தினாலும், சேவைகள் துறையில் 12 வீதத்தினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிகரிப்புக்கள் போதுமானவை அல்ல, பொதுத்துறைகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வரவு - செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை மொத்த உற்பத்தியில் 8.4 வீதமாக உள்ளது. பொது மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. குறைந்த வட்டியலான கடன்கள் வெளிநாட்டு கொடையாளிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதன் தொகை அதிகமானது நாட்டின் மொத்த உற்பத்தியில் அது 93 விகிதமாகும். கடன்களுக்கான வட்டியானது அரசினால் அறவிடப்படும் வரிகளில் 30 விகிதங்களை உள்வாங்கிவிடுகின்றது என பிற்ச் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
போர் 3 வருடங்களில் முடிந்து விடும் என அரசு எண்ணுகின்றது. ஆனால் அதற்கு முன்னர் பாதுகாப்புத் துறை செலவீனங்களின் அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்
Thursday, May 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment