Thursday, May 03, 2007

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள மக்ளிடையே நல்ல ஆதரவு இருப்பது தெளிவு-இங்கிலாந்து.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு
இருதரப்புகளுடனும் பேச பிரிட்டன் தயார்!
நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம்.

லண்டன்,மே 3 இலங்கையின் நிலைவரம் தொடர்பாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவுவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் ஒன்று இடம்பெற்றது.

பிரிட்டனின் ஆளும் தொழிற்கட்சி, கன்ஸர்வேட்டிவ் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றனர்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஒரு சமமான அணுகுமுறையை கைக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை வெளிக்காட்ட விடுதலைப் புலிகளை அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்திய போதிலும் அதற்கு பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின்றமைக்கு இலங்கை அரசு மீதும் பிரிட்டன் நாடாளுமன்றம் வன்மையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இந்த விவாதத்தில் உரையாற்றும்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பான தமது அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார்.
""இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கையிலேயே விடுதலைப் புலிகளை சந்திக்க பிரிட்டிஷ் அரசு தயாராக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு இந்த விடயத்தில் ஒரு முழுமையான சமநிலையை கடைப்பிடிக்கிறது. விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இருதரப்புகளுடனும் நாம் தொடர்பில் இருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

""இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு கிடையாது என்று பிரிட்டிஷ் அரசு நம்புகிறது. ஓர் உடன்பாடு குறித்த நம்பகத்தன்மை மிக்க கட்டமைப்பு தேவை. அனைத்து இலங்கையர்களும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
""இலங்கையில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதற்காக முடிந்தவரையில் பங்களிப்பு வழங்க பிரிட்டன் தயாராகவே இருக்கிறது. என்றும் அவர் கூறினார்.

இந்த விவாத்தில் உரையாற்றிய கன்ஸர்வேட்டிங் கட்சியின் உறுப்பினர் ஜெவ்ரி கிளிவ்டென் பிறவுண் தெரிவித்தாவது:

இலங்கையில் வன்முறை அதிகரித்து நிலைமை மோசமடைந்தமைக்கு இலங்கை அரசுக்கு பங்கே இல்லை என்று கூறிவிட முடியாது. நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தை இணைக்கும் முக்கியமான வீதியான ஏ9 நெடுஞ்சாலையை அரசு மூடியமை இலங்கையை மேம்படுத்த உதவில்லை. இதுதவிர இலங்கையின் வடக்குகிழக்கு மக்களுக்கு உதவி மிகவும் அவசியமாக தேவைப்பட்ட நிலையில் சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்ல அரசு அனுமதி தரவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாதது.

சிறுபான்மையினருக்கு இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்பது தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு நீண்டகால அரசியல் தீர்வு எட்டத் தகுதியுடையதாக இலங்கை அரசு மாறவேண்டுமானால் அனைத்துத் தரப்பினையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் வழிமுறை என்பது மிகமிக அவசியம். தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்பது தெளிவாக்கப்படவேண்டும்.

இனப்பிரசினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு குறித்தும் நான் இங்கு கூறவிரும்புகிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பத்தில் இந்திய அரசுக்கு முக்கிய பங்கு இருப்பதாக நான் நம்புகிறேன்.

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள மக்ளிடையே நல்ல ஆதரவு இருப்பது தெளிவு என்றார்.
நன்றி>உதயன்

No comments: