Monday, September 18, 2006

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: முஸ்லிம்கள்

3வது இணைப்பு

படுகொலைக்கு புலிகள் காரணமில்லை- சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
படுகொலைச் சம்பவ இடத்துக்கு ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வர முடியாது. இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
படுகொலைச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேச உள்ளேன்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.
படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். அங்கு விடுதலைப் புலிகள் உள்நுழைந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஹக்கீம்.
நன்றி>புதினம்.

2வது இணைப்பு

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லிமிரர்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.
இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:
அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.

மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப் படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

1வது இணைப்பு

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: முஸ்லிம்கள்

அம்பாறையில் 10 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொத்துவில் மசூதியில் கூடியிருந்தனர்.
அவர்களில் எம்.எஸ். மொகதீன் என்பவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் இந்தப் படுகொலைக்கு காரணம். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிக்குள் வரமுடியாது. இது முழுமையாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். சிறப்பு அதிரடிப்படைக்குத் தெரியாமல் யாரும் இந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது என்றார் அவர்.
இதனிடையே சிறிலங்கா அதிரடிப்படையின் இந்தப் படுகொலைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தின் இதர மாவட்டங்களில் கறுப்புக் கொடி ஏற்றி துக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது.
நன்றி>புதினம்

2 comments:

Anonymous said...

மீண்டும் மீண்டும் மக்களை பாதுகாக்க முடியாத தோல்வி அடைந்த அரசு என்பதை சிறீலங்கா நிரூபிக்கிறது.
இறந்த முஸ்லீம்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Anonymous said...

முஸ்லீம்களுக்கா வாய்கிழிய கதைப்பது போண்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் இந்த ஒட்டுகுழு ஊடகங்கள் கூட உண்மையை வெளிக்கொண்டுவர நினக்கவில்லை. அவர்களும் முஸ்லீம்களுக்கு எதிராக அரசை காப்பாற்றுவதிலேயே முணைப்பு காட்டுகின்றன.
http://vizhippu.net/node/5152