Saturday, September 16, 2006

சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது.

அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

சிறிலங்கா அரசியலில் மிகப் பெரிய இனவாதிகளில் ஒருவரான இரட்ணசிறி விக்கிரமநாயக்கா அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துப் படி படையினரால் மீட்கப்பட்ட நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இனி விட் டுக் கொடுக்க முடியாது எனக் கூறியிருப்பதிலிருந்தும் சிறிலங்காப் பேரின வாதிகள் ஒரு போதும் போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒத்திசைவினை வழங்கமாட்டார்கள் என்பது உறுதி.

அதுமாத்திரமின்றி இன்னும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலங்கள் மீட்கப்படும் எனத் தெரிவித்ததிலிருந்து சிங்கள அரசு இன்னும் நில ஆக்கிரமிப்புப் போரை தீவிரப்படுத்துவதற்கான நோக்கில் செயல்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் சமாதான வழிமுறைகள் இனி நடைமுறைப்படும் என்பது சாத்தியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்திருக்கும் கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம். தமிழர் தாயகப் பகுதியான சம்பூரை ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லாது விடின் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அவர்கள் வெளியேறா விடின் அவர்களை வெளியேற்றுவதற்கான போரை ஆரம்பிப்பது தவிர்க்க முடியாததொன்றாகி விடும் எனப் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பூர் ஆக்கிரமிப்பு எதிர் காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தப் போகும் விடயமாக மாறியுள்ளது.

இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தீர்க்கமான கருத்து எதனையும் இது வரை தெரிவிக்காதது வேதனைக்குரியது. ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் கைச்சாத் திடப்பட்டதாகும்.

அவ்வாறான உடன்படிக்கையை அமுல்படுத்துவது என்பதில் சிறிலங்கா அரசு இன்று எதிர் மாறாக நிற்கின்றது. உடன்படிக்கையின் அனைத்து விதி முறைகளையும் மீறி தற்போது உச்சக்கட்டமாக நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்கள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இது போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்துள்ள நிலையில் இன்னும் இன்னும் சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பான செயற்பா டுகளுக்கும் கருத்துரைகளுக்கும் சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் செவிமடுக்கப் போகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை விட்டு சிறிலங்கா அரசு விலகிவிட்ட நிலையில் தமிழ் மக்கள் தமது இறுதி யுத்தத்திற்கு முகம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.

சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து தமிழ் மக்கள் படுகொலை செய்ய ப்படுவது மாத்திரமின்றி பெரும் இடப்பெயர்வைச் சந்தித்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி அவலங்களை சந்தித்து நிற்கின்ற இன்றைய நிலையில் இனி இறுதி உபாயம் போர் தான் என்பது தற்போது தமிழர் தாயகம் உணர்ந்து கொண்ட விடயம்.

தற்போது புலம் பெயர் உறவுகளும் தமிழகத்திலும், ஈழத்தமிழனின் உரிமை முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் சர்வதேச சமூகம் சரியான கண்ணோட்டத்தில் இலங்கை விவகாரத்தில் தமது அணுகுமுறைகளைக் கையாண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தாது விடின் தமிழீழ விடுதலைப்புலிகள் கூறியிருப்பது போன்று சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும் என்பது மறு பேச்சுக்கு இடமில்லை.

நன்றி - மட்டு ஈழநாதம்.

2 comments:

Anonymous said...

we must fight. LTTE should not compromise with SL Govt. but WE (LTTE) are in the hands of EU and USA. LTTE must come out from International Net.

Trinco Boy

Anonymous said...

we must fight. LTTE should not compromise with SL Govt. but WE (LTTE) are in the hands of EU and USA. LTTE must come out from International Net.

Trinco Boy