Tuesday, June 26, 2007

சிறிலங்காவும் சர்வதேச சமூகமும்.

தேசம், தேசிய அரசு, தேசியவாதம் என்பன, உளவியல் ரீதியான ஒரு விடயம், தனித்தொரு குழு மக்களால் ஒருமித்து உய்த்துணரப்படும் போது, உருவாகும் தோற்ற நிலைகளாகும். பற்றுணர்வும், அடையாள உணர்வும் இயல்பாகவும் தானாகவும் எழும் நிலை இது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் புவியியல் ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் கொடுக்க முயலும் எவரேனும், அந்த நாட்டு மக்களின் எந்தவொரு பகுதியினரின் மீதும் அவர்களின் விருப்புக்கு எதிராக, அவர்கள்மேல் தேசியவாதத்தைத் திணிக்கமுடியாது.


இவ்வாறு உத்தரவாதம் கொடுப்பது ஒருவேளை ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பத்தில் அர்த்தமுள்ளதாக அமையலாம். ஆனால் அந்த நாட்டினுள், சுதந்திரத்துக்கான ஒரு உண்மையான போராட்டம் நிகழ்கின்ற வேளையில் இந்த உத்தரவாதம் அர்த்தமற்றதாகின்றது.

தாம் எந்த அரசின் கீழ் வாழவேண்டும் என்பதைத் தேர்வு செய்கின்ற உரிமை அந்த மக்களுக்கே உண்டு என்ற கோட்பாடு, 1941 ஆம் ஆண்டு, உலகப்போரின் பின்னதாக அமையவிருக்கும் உலகு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற அத்திலாந்திக் உடன்படிக்கையின் திறவுகோல்களுள் ஒன்று. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேச்சிலும், அமெரிக்க அரச தலைவர் பிராங்ளின் றூஸ்வெல்டும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

ஒரு தேசிய அரசு என்ற அளவீட்டில் இன்று சிறிலங்கா ஒரு பரிதாபமான தோல்வியின் அடையாளமாக விளங்குகின்றது. இத்தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள், இந் நாட்டின் சிங்கள, தமிழ் மக்கள், குடியேற்றவாதத்தின் பெறுபேறாக, அவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியவாதக் கருத்துருவைப் புரிந்துகொண்ட முறையினாலும், பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு அடிப்படைகளினாலும், உருவானவை. ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு இலங்கையைப் பரிசீலித்துப் பார்த்தது பிரித்தானிய குடியேற்றவாத அரசேயாகும். 1838 இலிருந்து 1945 வரை, சமஷ்டி முறையை அறிமுகப்படுத்தும் அபிப்பிராயங்களைக் கருத்திலெடுக்காமல், கொண்டுவரப்பட்ட ஐந்து குடியேற்றவாத அரசியலமைப்புக்கள், பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தவே உதவின. இலங்கையில் அரசியல் பிரிவினையின் தோற்றுவாய் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழமை கொண்டது.

இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர், இலங்கையில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும்; துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒருவேளை இந்தியா தலையிடுமோ என்பதே சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் பிரதான அச்சமாக இருந்தது. இந்தியாவையே தமது இரட்சகனாக தமிழரின் எல்லாப் பகுதியினரும் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. சிங்கள அரசியல்வாதிகள், இந்தியாவை ஏமாற்றுவதற்காகவோ அல்லது இந்தியாவை இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சனையில் தலையிடாதபடி தூரத்தே வைத்திருப்பதற்காகவோ, அணிசேரா நாடுகள் என்ற அமைப்பில் பங்குபற்றுதல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல் என்ற சர்வதேச அரங்கின் துருப்புச் சீட்டுக்களை மிகத் திறமையாகவே கையாண்டனர். இதற்குப் பலியாகிய ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், தமது சொந்த நாட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களையே காவுகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்திரா காந்தியே தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்த முதலாவது இந்தியத் தலைவராகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிநாட்டுக் கொள்கைள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஓரளவுக்கு, சிங்கள அரசியல்வாதிகளின் ஏமாற்று நடவடிக்கைகளின் பங்களிப்புடன், ராஜீவ் காந்தி அரசு இந்த விடயத்தைத் தவறான முறையில் கையாண்டதனால், தென்னாசியப் பிராந்தியத்திற்கு உள்ளேயே இப் பிரச்சனையைத் தீர்க்கின்ற சாத்தியக்கூறுகள் பாழ்பட்டுப் போயின. தென்னாசியப் பிராந்தியத்தின் பொலிசுக்காரனாக இருக்கக்கூடிய நிலைமை இந்தியாவுக்கு இப்போது இல்லை.

சர்வதேசச் சமூகம் என்ற போர்வையில், சிறிலங்காவின் பிரச்சனைகளுள் சக்திமிக்க நாடுகள் நுழைந்துள்ளன என்பது இப்போ இரகசியமான சங்கதியல்ல. கணிசமான நிதி உதவிகளைச் செய்தும், உள்நாட்டு சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்லியும், ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற இருவரது மனித உரிமை மீறல்களையும் ஒரே தராசிலிட்டு நோக்கியும், இந்த வல்லரசுகள், தவறிழைத்துக் கொண்டே நிலைகுலையும் அரசு ஒன்றின் புவியியல் ஒருமைப்பாட்டுக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

சிறிலங்காவின் பிரச்சனையில் இந்த வல்லரசுகளினால் கைக்கொள்ளப்படும் அணுகுமுறை, ஆரம்பத்திலிருந்தே, சர்வதேசச்சமூகத்தின் நடுநிலைத் தன்மையையும், நோக்கத்தையும் தீவிர சந்தேகத்துக்கு உள்ளாக்கின்றன.

சர்வதேச சமூகம் என்ற நாமம், ஒடுக்குகிறவர்களின் அணிதிரள்வை மறைக்கப் பயன்படும் ஒரு புகைத்திரையா? தேசிய அரசு என்ற, காலாவதியாகிப்போன, கருத்துருவாக்கத்தின் மயக்கம் தீராத நிலையைத் தெளியவைக்கும் அளவுக்கு சர்வதேச சமூகத்துக்கு உண்மையாகவே வல்லமை உள்ளதா? அல்லது, பலவீனமானவர்களை வெருட்டி அடிபணிய வைக்கும் ஒரு முயற்சிதானா? இன அழிப்பை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கின்றதா? சுதந்திரத்துக்கான போராட்டத்தை காலத்துக்குப் பொருந்தாத ஒரு கருத்துருவாக்கம் என அது கருதுகின்றதா? சுதந்திரத்துக்கான ஒரு போர் நிகழ்ந்திராவிடின், சர்வதேசச்சமூகத்தின் முதன்மை அங்கத்தவர் ஒருவர் இன்று இருந்திருக்க மாட்டார். ஒரு சில சுதந்திரப் போராட்டங்களை ஆதரிப்பதும் ஏனையவற்றை நிராகரிப்பதுமாக சர்வதேசச்சமூகம் இரட்டை நாடகம் ஆடுகின்றதா? இன்றைய சிறிலங்கா அரசு தன்னையும், தன் நாட்டின் வளங்களையும் வாரிக்கொடுக்க ஆயத்தமாக இருப்பதால்தான், ஒரு ஒன்றுபட்ட சிறிலங்காவுக்கு அது உத்தரவாதம் அளிக்கின்றதா? சாமுவேல் ஹன்டிங்டனின் சிந்தனைகளை பின்பற்றுவோரால் அமுல்படுத்தப்படும் ஒரு நவீன குடியேற்றவாதக் காலகட்டத்தினுள் நாம் பிரவேசிக்கின்றோமா? தற்போது ஊடகத்துறையில் அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள் இவையாகும்.

"சர்வதேச சமூகம்" என்பது, பின்பனிப்போர் காலத்தில், அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு மந்திரம் போலாகிவிட்டது. உலகின் ஒரு பகுதியில், அதாவது பழைய தேசங்களும், புதிய தேசங்களும் உதித்த அதே இடத்தில் (மேற்குலகில்), நாம் இன்று காண்பது, புதிய வரைவிலக்கணத்தைக் கொண்டதொரு தேசியவாதமாகும். உலகின் இப்பகுதியில் ஓங்கி ஒலிக்கும் பதங்கள், பின்நவீனத்துவம், தகர்ப்புவாதம், பண்பாட்டு அடையாளம், பண்பாட்டுப் பன்மைத்துவம், தனது சொந்த வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம் என்பனவாகும். ஆனால் உலகின் இன்னுமோர் பகுதியில், குடியேற்றவாதத்தின் எச்சமாய், பன்மைத்துவத்துக்கு மதிப்பளிக்காமல், தேசிய அரசின் இடிபாடுகளாய் இன்று விளங்கும் ஒரு அரசைத் தூக்கி நிறுத்த முயலும் சர்வதேச சமூகத்தை நாம் காண்கின்றோம். சர்வதேச சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பானது, தான் தொடர்பாளும் மக்கள், அவர்கள் என்னதான் எளியவர்களாகவும் இளைத்தவர்களாகவும் இருந்தாலும், தனது நம்பகத்தன்மையை அம் மக்கள் மத்தியில் நிரூபிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் மீது அந்தச் சிறுகுழு மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டால், வேறு மாற்று வழிகளை தேடிக்கொள்கின்ற வேட்கையை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம்.

சர்வதேச சமூகம் என்ற பதமே தகர்ப்புக்கு உட்படவேண்டிய ஒரு விடயமாகும். தேசிய அரசுகள் வீழ்ந்த பின்னருங்கூட, சர்வதேசம் என்ற பதத்தில் தேசம் இருக்கவே செய்கின்றது. ஒருவேளை, அப் பதம் அதிகாரத்திலுள்ள அரசுகளையும், அதிகார உலகையும் பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், இன்று அவற்றைவிடப் பிரமாண்டமான ஒன்றிருப்பது எமக்கு தெரியவருகிறது. அதுதான் உலக சமூகம். தகவல் பரிவர்த்தனைப் புரட்சியின் விளைவாய் வந்ததொரு ஆயுதத்தைத் தாங்கி நிற்கும் உலக சமூகம், யாவற்றையும் யாவரையும் சத்தமின்றி, ஆனால் பயமின்றி, கவனித்தவாறே உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் உண்மையான "பெரியண்ணன்" உலக சமூகமே.

விடுதலைப் புலிகளின் இருப்புக்கான சமூகப் பின்புலம், அந்த அமைப்பைக் காட்டிலும், ஆய்வுகளுக்கு முக்கியமானது. மிகநொந்து இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுதான் புலிகள். அதனில் ஏதாவது குறையிருப்பின் அதையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தச் சமூகமே ஒழிய ஏனையோர் அல்ல. தமது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை புலிகளுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டியது ஒரு நியாயமான காரியமாகும்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கும், வேறு அமைப்புக்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கும், ஒத்த மனமுடையோர்க்கும் நேசக்கரம் நீட்டி, அவர்களுடைய பணியையும் தியாகங்களையும் அங்கீகரித்து, கசப்பான பழையதை மறந்து நடப்பதற்கு புலிகள் முன்வரவேண்டிய வேளை இது.

வெளியிலிருந்து வாடகைக்கு ஆட்களைக் கொண்டுவந்து தமிழ்த் தேசியம் என்ற இருப்பை ஒழித்துவிடலாம் என யாராவது எண்ணினால் அது அவர்களின் தவறாகும். திரு. ராஜபக்ச போன்ற ஒருவரின் அரசுடன் துணை போகும் ஒருவர் தமது செயலை எவ்வாறு எதிர்காலச் சந்ததிக்கு நியாயப்படுத்தப் போகின்றார் என்பதைக் கற்பனை செய்வதே கடினமான காரியமாகத் தோன்றுகின்றது.

புலிகளை இராணுவ நடவடிக்கையால் தோல்வியடையச் செய்ததும், தமிழர்களின் உரிமைகள் மீள அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்தில் சிறிலங்கா அரசும் அதன் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். அரசியல் தீர்வொன்றுக்கு சிங்கள மக்கள் ஒத்துக்கொள்வதற்கு, இந்த நடவடிக்கையையே மிக அவசியமானது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த பம்மாத்துப் பிரச்சாரம் வெளியுலகில் சற்று எடுபடுகிறது என்றே தோன்றுகின்றது. தமிழர் விவகாரம் என்று வரும் போது, கைதேர்ந்த சிங்கள மேல்வர்க்கத்தின் நுட்பமான ஏமாற்று, வெளியாருக்கு விளங்காத புதிய அனுபவம் கூட வாழ்வோருக்கு இது கூட விளங்கும்.

சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையை அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் தீர்க்கமுடியும் என்ற யோசனை, குடியேற்றவாத ஆட்சிக் காலத்துக் கதை ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகின்றது. பிரித்தானிய அன்னை தன் குடியேற்றநாட்டு குழந்தைக்கு ஒரு புதிய சட்டையைத் தைத்துக் கொண்டு வருகின்ற ஒவ்வொரு தடவையும், அந்தக் குழந்தை வளர்ந்துவிட்ட காரணத்தால் அந்தச் சட்டை அளவின்றிப் போய்விட்டதாம். தமிழர் விவகாரம் இன்று முழுதாக வளர்ந்த பிள்ளை. தன் சுயமுயற்சியினால் சம்பாதித்த, மரபுரீதியான தரை, கடல், வான் படைகளை கொண்டு, சிறிலங்கா அரசுக்கு இணையான அரசொன்றை நடத்தும் நிலைக்கு அது வந்திருக்கிறது. ஆனால், ராஜபக்சவோ எந்தவொரு சட்டையையும் தமிழர்களுக்குத் தரும் மனநிலையில் இல்லை. பழம் பாணியிலான கீழங்கி ஒன்றைக் கொடுத்துச் சமாளித்துவிடலாம் என அவர் எண்ணுகின்றார். அவர் தன் கழுத்தைச் சுற்றி வழமையாக அணியும் ஆடையின் அளவை ஒத்த ஒரு கோவணத்துண்டுதான் அது.

ஒன்றுபட்ட, செல்வச் செழிப்பான சிறிலங்காவை காணும் ஆசையை மனதில் வைத்திருக்கும் எவரும், செய்யவேண்டிய இன்றைய யதார்த்தம், முதலில் தமிழீழத்தை ஏற்றுக்கொள்வதும், தமிழர் தம் நிலத்தை அமைதியாக விருத்திசெய்ய விடுவதும்தான். அதற்குப்பின், சில வருடங்களிலேயே, தமிழர்களும் சிங்களவர்களும் மீண்டும் ஒன்றுபடக்கூடிய சாத்தியம் உண்டு. ஆனால் இம்முறை இந்த உறவு சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு வலுவுள்ள பந்தமாக அமையும்.

தமிழ்நெட் இணையத்தளத்தின் கண்ணோட்டப் பத்தியில் 24.06.2007 இல் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் ஒப்புநோக்கிய தமிழாக்கம்.
நன்றி>புதினம்.

No comments: