

மன்னாரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு கைப்பற்றப்பட்ட 15 சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களில் 13 சடலங்களை இராணுவத்தினர் பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.
கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை 12 சடலங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர்.
வவுனியாவில் இராணுவத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்ட போது அவற்றில் இரண்டை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்.
ஏனைய 10 சடலங்களையும் இராணுவத்தினர் தம்முடையதில்லை என்று கூறி பொறுப்பேற்க மறுத்து விட்டனர். அந்த இடத்தில் செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் முடிவு எடுக்க முடியாத நிலையில் நேரம் கடந்தது.
மன்னாரில் வைத்து இராணுவத்தினரின் மூன்று சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் கையளிக்கப்படவிருந்தன.
இந்த சர்ச்சையால் சடலங்களை பொறுப்பேற்க அங்கு செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மறுத்து விட்டனர்.
இன்று பிற்பகல் ஓமந்தை சோதனை நிலையம் மூடப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் 10 சடலங்களுடன் பார ஊர்தி இராணுவத்தினரின் சோதனை நிலையப்பகுதிக்குள் நிற்கின்றது.
செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் சோதனை நிலையம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சென்று விட்டனர்.
மன்னாரில் படைத்தோல்வியையும் இழப்புக்களையும் மறைப்பதற்காக சிறிலங்கா அரசு இராணுவத்தினரின் சடலங்களை தம்முடையவை இல்லை என்று ஏற்க மறுத்து விட்டது.
1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு 1200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்ட நிலையில் 800-க்கும் அதிகமான சடலங்களை படையினர் ஏற்க மறுத்தனர். அதனால் அவை வன்னியில் அரசாங்க அதிபர்கள் முன்னிலை சாட்சியாக எரிக்கப்பட்டன.
மேலும் கையேற்ற இராணுவச் சடலங்களில் பெருமளவிலானவை வவுனியாவில் காட்டுப்பகுதியில் வைத்து சிறிலங்கா அரசினால் எரிக்கப்பட்டன.
இன்று வரை அந்த 1,200 இராணுவத்தினரையும் காணாமற் போனோர் பட்டியலில் சிறிலங்கா அரசு வைத்துள்ளது. அவர்களின் உறவினர்களுக்கும் அவ்வாறே காணாமற்போயுள்ளனர் என்ற தகவலை கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு வாகரையில் இவ்வாறு படையினரின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்படவிருந்த நிலையில் அவற்றை தம்முடையதல்ல என்று கூறி சிறிலங்கா இராணுவத்தரப்பு ஏற்க மறுத்தது.
இதனையடுத்து அவற்றை விடுதலைப் புலிகள் புதைத்து விட்டனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்ட சடலங்களிற்குரிய இராணுவ அடையாள அட்டைகள், இலக்கத்தகடுகள் ஒளிப்படங்களாக விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட, உடனடியாக சடலங்கள் தம்முடையவை என்று இராணுவத்தினர் கேட்க, புதைக்கப்பட்டவை மீளத்தோண்டி எடுத்து ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
No comments:
Post a Comment