






கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்று நடத்தப்பட்டிருப்பது, அரசியல் யாப்பிற்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று அதிகாலை கொழும்பிலுள்ள தங்ககங்களைச் சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சுமார் 800 தமிழர்களில் 500 பேர் மட்டுமே இதுவரை மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களுக்கு பலவந்தமாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய தமிழர்களில் 300 பேர் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் புறக்கோட்டை காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, வத்தளை பகுதிகளிலுள்ள தங்ககங்களில் மருத்துவம், வெளிநாட்டு பயணம், வெளிநாட்டிலிருந்துவரும் குடும்பத்தவரைச் சந்திப்பதற்கு, கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த மக்கள் தங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தவிர மேலும் சில தங்ககங்களில் தங்கியுள்ளவர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியேறவில்லை என்றால், அவர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறீலங்கா அரசின் திடீர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்பிற்கு 5 பேரூந்துகளிலும், வவுனியாவிற்கு 3 பேரூந்துகளிலும் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களிற்குரிய மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சென்றடைந்துள்ள பேரூந்துகளில் பயணித்த மக்களிற்குரிய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான நிறுவனம் முன்னேற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment