Thursday, June 14, 2007

3 ஆண்டுகளுக்குள் பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு!!!

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்ய சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸின் சர்வதேச பதிப்பான அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.



பாரீசில் அச்சிடப்பட்டு 35 நாடுகளில் விநியோகிக்கப்படும் அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூனில் நேற்றைய

வெளியீட்டின் முதல் பக்கத்தில் புதுடில்லியைச் சேர்ந்த அதன் தெற்காசிய செய்தியாளர் சோமினி சென்குப்தா எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

யாழ்குடா நாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சிபுரிகின்றன.

கறுப்பு நிற ஏரியை தாண்டி நிகழ்த்தப்பட்ட பீரங்கித் தாக்குதல் இரவின் அமைதியை குலைத்தது. யாழ்குடா நாட்டில் இருந்து வெளியே செல்லும் சாலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து மூடப்பட்டுள்ளது. இது அந்தப்பகுதியை மக்கள் செல்ல முடியாத பகுதியாக மாற்றியுள்ளது.

இன்று உணவு எரிபொருட்கள் என்பன குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் அங்குள்ள நகரத்தின் சந்தை மாலை வேளைகளில் மூடப்பட்டுவிடும். கடை உரிமையாளர்கள் அதிகளவு பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க விரும்புவதில்லை ஏனெனில் எப்போது கடையை மூடிவிட்டு ஓடிவிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியாது.

இரவு 7.00 மணிக்கே எல்லா கடைகளும் யாழ் நகரத்தில் மூடப்பட்டுவிடும் கட்டாக்காலி நாய்கள் மட்டுமே நகரத் தெருக்களில் ஓடித்திரிகின்றன. இரவு 8.00 மணிக்கு அமூல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்திற்கு முன்னராக மக்கள் விடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள், கதவுகள் பூட்டப்பட்டுவிடும். இது கடந்த 10 மாதங்களாக நடந்துவரும் நிகழ்வு.

இராணுவத்தினர் ஒடுங்கிய வீதிகளில் முனைகளில் மறைந்து பதுங்கிவிடுவார்கள், வாகனங்கள் செல்லும் போது வெளிச்சங்கள் பாச்சப்படும் நாய்களை தவிர எல்லாம் அசைவின்றி இருக்கும். இது தான் யாழ்ப்பாணம், கால் நூற்றாண்டு இனப்போரின் வடிவம் இது. புதிய பூகம்பத்துக்கான ஆயத்தம் இது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாத பருவமழைக்கு முன்னர் யாழ் குடாநாட்டுக்கான பெரும் சமரை தான் எதிர்பார்ப்பதாக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக தீவில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்துள்ளது. இராணுவம் சிங்களவர்களையே பெரும்பான்மையாக கொண்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் படி கடந்த 18 மாதங்களில் 4,800 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இது சுயாதீன தகவல்கள் அல்ல. இது மேலும் தொடரலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை அழிப்பதற்கும், விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிப்பதற்கும் தமது படையினருக்கு தான் அறிவுறுத்தி உள்ளதாகவும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தை அழிப்பதே தமது பிரதான இலக்கு எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா கடந்த மாதம் எமக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் பணி முடிய 3 ஆண்டுகாலமாகும் என்றும் அவர் கூறினார்.

அமைதி பேச்சுக்கள் அண்மையில் இல்லை. அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உதவி நிதிகளின் நிறுத்தங்களும் சிறீலங்கா அரசின் இராணுவ தீர்வுத் திட்டத்தில் சிறிய தாக்கத்தையே உண்டு பண்ணியுள்ளது.

விடுதலைப்புலிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகள் தடைசெய்துள்ளன. இரு இருக்கைகளை கொண்ட இலகுரக வாணூர்திகள் மூலம் அவர்கள் வான் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஆயுதம் தற்போதுள்ள மிகவும் வலிமையானது.

ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள், உதவி நிறுவன பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏப்பிரல் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் மாவட்டத்தில் இயங்கும் தமிழ் நாளேடு ஒன்றின் ஊடகவியலாளர் தனது வேலைக்கு ஈருளியில் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மே மாதம் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோருக்கு எதிரான எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தேடி கொழும்புக்கு வருவதற்காக 15,000 மக்கள் கப்பலுக்கு காத்திருக்கின்றனர். அவர்கள் தற்போதும் அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். எந்த நேரமும் எதுவும் நடைபெறலாம் என ரவீந்திரன் இராமநாதன் என்ற தையல் தொழிலாளி தெரிவித்தார் எல்லாவற்றிலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு போர் புதிதல்ல. அங்குள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் முன்னர் நடைபெற்ற போரின் வடுக்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கு ஓடுவதும், மரணங்களும் பழக்கமாகி விட்டது. வேறு எந்த இடமும் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கவில்லை, ஏனெனில் அவைகளுக்கு யாழ்ப்பாணத்திற்குள்ள சிறப்பம்சங்கள் இல்லை. அது விடுதலைப்புலிகள் போர் புரியும் தாய்நாட்டின் இதயப்பகுதியாகும்.

எனினும் யாழ்குடா நாட்டில் தற்போது புதிய ஒரு அச்சம் தோன்றியுள்ளது. முன்னர் நடந்தவைகளை விட இது புதுவிதமான ஆபத்தாகும். இந்த விசித்திரமான அச்சம் ஊரடங்கு வேளைகளில் மக்கள் கடத்தப்படுவதனால் ஏற்பட்டுள்ளது. இந்த கடத்தல்கள் நிகழும் போது இராணுவத்தினரும் கட்டாக்காலி நாய்களும் தான் வீதிகளை ஆட்சிபுரிகின்றன.

யார் கடத்தப்படப் போகின்றனர்? ஏன்? என்பது யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் வீதிகளில் சடலங்கள் கிடக்கும் பல சமயங்களில் அதுவும் கிடைப்பதில்லை.

கடந்த மே மாதத்தில் ஒரு இரவில் ஊரடங்கு வேளையில் சி. குகரஞ்சனின் மகனான கண்ணன் தனது பெற்றோரின் படுக்கை அறையின் தரையில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென முன்கதவை தள்ளித் திறந்து கொண்டு உள்நுளைந்த நான்கு ஆயுததாரிகள் கண்ணனை விசாரணைக்காக தம்முடன் வருமாறு பலவந்தமாக அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளவில்லை. தமது அடையாளங்களை தெரிவிப்பது உங்களுக்கு தேவையற்றது என தெரிவித்தனர். ஏன்? எங்கு கண்ணன் கொண்டு செல்லப்படுகின்றார் என்ற விளங்கங்களும் தரப்படவில்லை. ஆயுததாரிகள் சிவில் உடையில், கைத்துப்பாகியுடன் வந்திருந்தனர். மகனை விரைவில் விட்டுவிடுவதாக உறுதியளித்தனர்.

பாடசாலை உயர்தர மாணவனான கண்ணன் மே 4 ஆம் நாள் கடத்தப்பட்ட பின்னர் இன்று வரை வீடு திரும்பவில்லை. உயர் தரவகுப்பு மாணவனான கண்ணன் மாணவச் செயற்பாட்டளாவார், அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தவர். இதனை படையினர் அரச எதிர்ப்பு போராட்டம் என கூறிவருகின்றனர். எனினும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என தனது மகனுக்கு தாம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், அவரை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு மாதம் காத்திருந்து மற்றும் தேடுதல் நடத்தியதற்கு பின்னர், கடத்தியவர்கள் ஏன் தனது மகளை வீட்டில் வந்து விசாரணை செய்யவில்லை? ஏன் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்ற கேள்விகளை கண்ணனின் தந்தை எழுப்பியுள்ளார். பெற்றோரின் கரங்களில் இருந்து பிள்ளைகளை பறித்துச் செல்வது மிகவும் கொடுமையானது என அவர் மேலும் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் வரையிலும் யாழ்குடாநாட்டில் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பாக தமக்கு 805 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறீலங்கா மனித உரிமை ஆணைக்குழு, அரச நிறுவனங்கள் என்பன தெரிவித்துள்ளன. எனினும் 230 கடத்தல்களே நடைபெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் மட்டும் சிலர் இதில் இருந்து தப்புவதுண்டு. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருணகிரிநாதன் நிரூபராஜ் என்ற பல்கலைக்கழக மாணவன் அவரது கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவர் பல தொடர்ச்சியான இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளாரா என விசாரணை செய்யப்பட்டார்.

அதன் போது கடத்தல் காரர்கள் தன்னை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தமது பாதத்தில் அடித்ததாகவும், தனது தலையை பொலித்தின் பையினால் மூடிக் கட்டிவிட்டு அதற்குள் பெற்றோலை ஊத்தியதாகவும், தனது மலவாசலிணுடாக தடியை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

7 நாட்களின் பின்னர் தொடரூந்து பாதையருகே அவர் விடப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டது. ஒரு காதும் கேட்பதில்லை. எந்த உணவையும் அவரால் உண்ண முடியவில்லை. ஏப்பிரல் மாதம் நிரூபராஜ் (26) தென்னிந்திய நகரான சென்னைக்கு சென்று விட்டார். தனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகளை; இல்லை என அவர் கூறிவருவதுடன் தனது கடத்தல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை அகற்றும் நோக்குடன் கடத்தல்களை துணை இராணுவக்குழுவினர் செய்வதாக சந்திரசிறீ தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு படையினரிலும் எல்லோரும் சுத்தமானவர்கள் என தன்னால் கூற முடியாது

எனவும் தமது கடமை அவர்களை பிடித்து தண்டிப்பது தான், கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களல்ல விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குகரஞ்சனின் மகன் தொடர்பாக கருதத்து தெரிவிக்கையில், தன்னால் அவரை தனிப்பட்ட முறையில் கண்டறிய முடியும் எனவும், நாம் தினமும் மக்களை கொல்வதாக அனைத்துவக சமூகம் நினைப்பதை நான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் உயர் பிரதிநிதியான றிச்சார்ட் பௌசர் யாழ் வந்த போது சந்திரசிறீயை சந்தித்து கடத்தல்கள் தொடர்பாக தமது அதிதிருப்தியை தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கடத்தல்கள் குறைந்திருந்தன.கத்தோலிக்க ஆலயங்களுக்கும் நிட்சயம் அற்ற தன்மை தோன்றியுள்ளது. அது அல்லைப்பிட்டியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் இல்லமாக மாறியிருந்தது. சிறீலங்காவில் 300,000 மக்கள் இடம்பெயாந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பமாகியதில் இருந்து இந்த ஆலயத்திற்கு சில குடும்பங்கள் 4 முறை இடம் பெயாந்துள்ளன. கடந்த ஆகஸ்ட்டில் அல்லைப்பிட்டியில் மோதல் நடைபெற்ற போது மக்கள் தேவாலயத்தை நோக்கி ஓடினார்கள் ஆனால் எறிகணைகள் அங்கு ஏவப்பட்டன. தேவாலயத்தின் மதகுருவான வண. ஜிம் பிரவுண் அடிகள் வெள்ளை கொடியை பிடித்தவாறு மக்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.சிறீலங்காவின் கடற்படையினர் மக்களை தாக்கிய போது பிரவுண் கோபத்துடன் வாதாடியிருந்தார். ஆனால் சில நாட்களில் அவர் காணாமல் போய்விட்டார்.
கடற்கரைப் பகுதியை படையினர் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு மீன் பிடிக்க முடியாது என பல குடும்பங்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளன. பல வராங்களாக உணவு உதவிகளும் கிடைக்கவில்லை. அரிசிக்காக பெண்கள் தமது தங்க வளையல்களை விற்பனை செய்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் சாப்பிடுவதில்லை. அதனை தமது பிள்ளைகளுக்கு சேமிக்கின்றனர்.

சத்தியசீலன் திலகா என்ற தாய் சிறிதளவான உணவே உட்கொள்வதால் முகாமில் பிறந்த தனது 4 மாதக் குழந்தைக்கு போதிய பாலூட்ட முடியாத நிலையில் உள்ளார்.

முன்னைய போர் நிலைமைகளிலும் தான் 4 பிள்ளைகளை வளர்த்ததாகவும் எனினும் பாலுக்கு பற்றக்குறை அப்போது ஏற்படவில்லை எனவும், இன்று காலை தனது மூத்த மகன் சாப்பாடு இன்றியே பாடசாலை சென்றதாகவும், தாயாரும் எதுவும் சாப்பிடவில்லை எனவும் சத்தியசீலன் (39) தெரிவித்தார்.

ஐ.நாவினால் மேற்கொள்ளப்பட்ட அவசர ஆய்வுகளில் யாழில் பெருமளவான சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் ஆய்வு வெளியீடுகளை அரசு தடுத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: