Wednesday, June 06, 2007

ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும்!!!

சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார்.


புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன்,

"இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகினால் அது குறித்து பரிசீலித்து முடிவெடுப்போம். அவர்கள் சீனா அல்லது பாகிஸ்தானிடம் செல்வதை இந்தியா விரும்பவில்லை. சிறிலங்காவுக்கு இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்கவில்லை. கண்காணிப்பு ரேடார்களை மட்டுமே அளித்துள்ளது. அது தாக்குதல் தொடுக்கக் கூடிய சாதனம் அல்ல. அது தற்காப்பு சாதனம்தான். தற்காப்பு சாதனங்களை மட்டுமே நாம் வழங்குவோம்" என்று சென்னையில் கடந்த மே மாதம் 31 ஆம் நாள் பேட்டியளித்திருந்தார்.

எம்.கே.நாராயணனின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்து

சிறிலங்காவின் ஊடகங்கள் குய்யோ முறையோ என ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன.

சிங்களப் பத்தி எழுத்தாளர்களோ "நாராயணா! ஓ நாராயணா!" என நக்கலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களப் பேரினவாதிகள், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் "இந்தியப் பேரரசின் வல்லாதிக்கம்" குறித்து வன்மையாகக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்தப் பேட்டியின் நாயகன் "சகுனி" நாராயணனின் உண்மையான கருத்து-

"சீனா- பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆயுதக் கொள்வனவு செய்யக் கூடாது என்பதுதானா?" என்றால்

இல்லவே- இல்லை.

மாறாக

"இந்தியா ஆயுதம் வழங்காவிட்டால் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சிறிலங்கா சென்று ஆயுதம் வாங்கிவிடும் எனவே அனைத்து வகை ஆயுதங்களையும் நாம் வழங்க வேண்டும்" என்ற கருத்துருவாக்கத்துக்கு அடித்தளமிட்டு விட்டுத்தான் நாராயணன், சென்னையிலிருந்து புறப்பட்டிருக்கிறார்.

ஏன் அப்படிச் சொல்கிறோம்?

அமெரிக்காவும், சிறிலங்காவும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான 10 ஆண்டுகால உடன்படிக்கையில் கடந்த மார்ச் மாதம் கைச்சாத்திட்டன.

"பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற அந்த உடன்படிக்கைக்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு ஏதேனும் தெரிவித்ததா? எனில் இல்லையே.

ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை?

வொய்ஸ் ஓஃப் அமெரிக்காவின் தளம் அமைக்க இந்திரா எடுத்த ஆயுதத்தை ஏன் தற்போதைய இந்திய அரசாங்கம் எடுக்கவில்லை

1987 ஆம் ஆண்டு ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில்

I) Your Excellency and myself will reach an early understanding about the relevance and employment of foreign military and intelligence personnel with a view to ensuring that such presences will not prejudice Indo Sri Lanka relations.

II) Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.

III) The work of restoring and operating the Trincomalee Oil Tank will be undertaken as a joint operation between India and Sri Lanka.

IV) Sri Lanka's agreement with foreign broadcasting organisations will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka are used solely as public broadcasting facilities and not for any military or intelligence purposes"

என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலும்

அதற்கு எதிராக- சிறிலங்கா இன்று செயற்பட்டிருக்கிறதே என்று இந்தியா அஸ்திரத்தை ஏவியிருக்கிறதா இல்லையே.

மாறாக இந்த ஒப்பந்தமே இந்தியாவின் அனுசரணையால்தான் ஏற்பட்டது என்கிறது இந்துஸ்தான் ரைம்ஸ் ஏடு.

"பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் என்கிற இந்த சிறிலங்கா- அமெரிக்கா ஒப்பந்தத்தை உருவாக்க கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா முயற்சித்து வந்தது. ஆனால் இந்தியாவின் ஆட்சேபனையால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. தனது நாட்டின் பின்தளத்தில் அமெரிக்கா இராணுவம் காலூன்ற இது வழிவகுக்கும் என்று இந்தியா முன்னர் கருதி வந்தது. ஆனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான அண்மைக்கால உறவு வளர்ச்சியினாலும் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் உத்திகள் தொடர்பிலான கூட்டுச் செயற்பாடுகளினாலும் இந்த ஒப்பந்தத்துக்கான எதிர்ப்பை இந்தியா கைவிட்டுவிட்டது" என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் எழுதியுள்ளது (இந்துஸ்தான் ரைம்ஸ் மார்ச் 7 2006).

ஆகா! என்னே இந்தியர்களின் "இந்திய தேச"ப் பற்று!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய வளர்ச்சியின் மூலமாக தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது இந்தியப் பேரரசை ஆட்டுவிக்கும் தங்களுக்கு எப்போதும் பேராபத்துதான் என்பதை இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் பார்ப்பன சக்திகள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

ஆக ஈழத் தமிழ் மக்களை ஒழிக்க சிறிலங்காவுக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆயுதங்கள் கொடுங்கள்! அமைதி காப்போம்!

இந்தியாவை அடகு வைத்தேனும் தமிழ் மக்களை அழித்தொழித்துவிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்!

- என்கிறார்கள் நாராயணன்கள்.

ஈழத் தமிழ் மக்களை அழிக்க அமெரிக்கா வருகிறதா? அவர்கள் அனுமதிப்பார்கள்.

ஈழத் தமிழ் மக்களை அழிக்க சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏன் காவடி தூக்குகிறீர்கள்? நாங்கள் இல்லையா? என்று அறிவிக்காமல் அறிவிப்பார்கள் இந்த நாராயணன்கள்-

அதற்காக முன்னோட்டம் விடுவார்கள்-

கருத்துருவாக்க தளத்தை தானே இறங்கிச் செய்வார்கள் இந்த நாராயணன்கள்-

"தாக்குதல் சாதனம்- தற்காப்பு சாதனம்" என்றெல்லாம் தர்க்க நியாயங்களை முன்வைப்பார்கள் இந்த நாராயணன்கள்.

இந்த நாராயண்களை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாம் அகம் மகிழ்ந்துவிட வேண்டியதில்லை.

இந்தியாவை நட்புமிக்க ஒரு நேச சக்தியுள்ள நாடாகவே ஈழத் தமிழ் மக்கள் இன்றும் கருதுகிறோம். ஆனால் அந்த உறவைச் சீர்குலைத்துவிட சகுனி நாராயண்கள் காலம் காலமாக சதி செய்தே பழகிவிட்டனர்.

இந்திய இறைமையைப் பாதுகாக்கிறோம் என கூவிக்கொண்டு தமிழ் மக்களை வேட்டையாட சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்க வழியேற்படுத்தும் இந்த நாராயணன்கள் போடுகிற வேடத்தை புரிந்து தமிழர்கள் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி>புதினம்.

No comments: