Friday, June 22, 2007
சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை!!!
சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை என்று இலங்கைக்கு வருகை தந்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் குழு சாடியுள்ளது.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் வின்செண்ட் ப்ரோசெல், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ஜாக்குலின் பார்க் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரும் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினர் ஊடக சுதந்திரத்தை மீறிச் செயற்படுகின்றனர். வடக்கு - கிழக்கில் இத்தகைய பிரச்சினைகளுக்கு தமிழ் ஊடகங்கள் முகம் கொடுக்கின்றன. கொழும்பிலும் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சுபாஸ் சந்திரபோஸ் என்ற மாத இதழின் ஊடகவியலாளர
உதயன் நாளிதழின் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன
ஆகியோர் அண்மையில் கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்ட நிலையில் இன்னமும் மீட்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களை அவமதிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை அரசாங்கத் தரப்பு மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.
சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களை, விசர் பிடித்த நாய்கள் என்று விமர்சிக்கிறார்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் இதர அமைச்சர்களும் ஊடகவியலாளர்களை அவமதிப்பதுடன் பகிரங்கமாக அச்சுறுத்தலும் விடுக்கின்ரனர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் எமது குழுவினர் இலங்கை வந்தபோது, ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
இருப்பினும் அச்சுறுத்தல்கள் மற்றும் காணாமல் போதல் தொடர்பாக சிறப்பு காவல்துறை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ஊடகங்களுடனான மோதல் போக்கை அதிகாரிகள் கையாள்கின்றனர். சில அமைச்சர்கள் மோசமான வார்த்தைகளால் ஊடகவியலாளர்களை விமர்சிப்பதுடன் சுய தணிக்கை செய்து கொள்ளும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
90 நாட்களாக ஒரு ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார். அரசாங்க ஊடகம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியும் ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண குடாநாட்டி தமிழ் ஊடகங்கள் அச்சிடுவதற்குரிய செய்தித்தாள் மற்றும் அச்சு மை ஆகியவற்றுக்கு போக்குவரவு கட்டுப்பாடுகளின் பெயரால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது.
அண்மையில் முன்னணி தமிழர் இணையத்தளமான "தமிழ்நெட்"டை சிறிலங்கா இணைய சேவை வழங்குநர்கள் முடக்கி வைத்தனர்.
இராணுவ நடவடிக்கைகளின் போதான பொதுமக்களின் பாதிப்பு குறித்த தரவுகளை பிரச்சனைக்குரிய பகுதிகளில் உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சேகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அங்கீகார அடையாள அட்டை போன்றவற்றால் உள்ளுர் ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்த உள்நாட்டு வருவாய் திணைக்கள அதிகாரிகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது. சிங்கள "மௌபிம" மற்றும் "சண்டே ஸ்டாண்டர்ட்" ஊடக நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதனால் ஸ்டாண்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் குழுமத்தின் 2 நாளிதழ்கள் மூடப்பட்டன.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் எமது குழு அளித்த பரிந்துரைகள் தற்போதும் தேவையானதாக இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்.
ஊடகவியலாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நேரத்தில் வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அண்மைய சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் செல்வராஜா ரஜிவர்மன் படுகொலைகளையும் அதில் இணைக்க வேண்டும்.
11 படுகொலைகளில் 10 படுகொலைகள் நடைபெற்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைக்க வேண்டும்.
அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், தாக்குதல்கள் ஆகியவை கைவிடப்பட வேண்டும்.
யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் ஊடக பணியாளர்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
ஊடகங்களின் தலையங்கங்கள் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் தரவுகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் பரிசீலிப்பது நிறுத்தப்பட வேண்டும். அரசாங்க ஊடகங்கள் பன்முகத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
அனைத்து சிறிலங்காவின் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், அதிகாரங்கள் குறிப்பாக அவசரகால சட்ட விதிமுறைகள் (ஓகஸ்ட் 25), பயங்கரவாத தடுப்புச் சட்டம் (டிசம்பர் 2006), உத்தியோகப்பூர்வ இரகசிய சட்டம், ஊடக சபை சட்டங்கள் மற்றும் ஒலி-ஒளிபரப்புச் சட்டங்கள் அனைத்துமே அனைத்துலக ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு முகம் கொடுக்கத் தவறிவிட்டன என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment