Friday, June 15, 2007
ஐநாவின் மனிதஉரிமை கண்காணிப்பகத்தை நிறுவுக - மகிந்தவிடம் மன்னிப்புசபை.
மகிந்தவை சந்தித்த அனைத்துலக மன்னிப்புசபையின் செயலர் ஐரின் கான் அவர்கள் சிறீலங்காவின் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒன்றை சிறீலங்காவில் நிறுவ தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மன்னிப்புச் சபையின் கருத்துப்படி கடந்த 12 மாதகாலப்பகுயில் 1000 ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயும் பலர் சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர். மன்னிப்புச்சபை சிறீலங்கா படைகள் கருணாகுழு மற்றும் விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது.
சிறீலங்காவில் அச்சம் ஆட்சி செய்வதாகவும் இது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்தரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட மன்னிப்புச்சபை சிறீலங்கா சனாதிபதியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துலக நிபுணர்கள் குழுவின் நம்பகத்தன்மையும் வினைத்திறனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 18 மாதகாலமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கவும் அதில் சம்பத்தப்பட்டோரை தண்டிக்கவும் உரிய சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் ஏற்பாடுகள் யாவும் சிதைவடைந்து விட்டதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் இம்மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரிக்கவும் சுதந்திரமான கண்காணிப்பாளர்களின் அவசியத்தை சுட்டிக்காட்டிய மன்னிப்புச்சபை அக்காண்காணிப்பகத்தை ஏற்படுத்துமுகமாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தை அழைக்கும்படி மகிந்தவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிப்படையான சுதந்திரமான முழுவளங்களும் நிறைந்த அனைத்துலக மனித உரிமை அமைப்பொன்றின் தளச்செயற்பாட்டின் ஊடாக நீதிக்கும் நம்பகத்தன்மைக்குமான தேசிய கட்டமைப்புக்களை பலப்படுத்த முடியும். இது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிராந்தியங்களையும் உள்ளடக்கும் என்று கூறிய ஐரின்கான் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான அரசின் செயற்பாடுகள் மிகக்குறைவாக உள்ளதாகவும் அவற்றை பலப்படுத்த இச்சந்தர்ப்பத்தை மகிந்த பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நன்றி>பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment