Wednesday, June 13, 2007

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல்!!!

இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது.

இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சம இடைவெளியை கொண்டுள்ள இந்தியா, தற்போது இலங்கை இராணுவத்துக்கு பக்கபலமாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதி திரும்பும் நடவடிக்கைகளில் சில வெளிநாடுகள் ஈடுபடுவது, ஓரளவு மட்டுமே பயன்தரும் என்பதை உலக நாடுகளும் உணர்ந்துள்ளன. நோர்வே நாடு, எடுத்த அமைதி முயற்சி தோல்வியடைந்ததும் இதனால்தான். இலங்கை பிரச்சினையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் இருந்தது இந்தியா. ஆனால், சமீப காலமாக இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

'இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் விற்பனை செய்யாது' என்று அறிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், 'பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதும் கூடாது' என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தது, பலரையும் வியப்படையச் செய்தது. டில்லியிலும், சென்னையிலும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, இலங்கை பிரச்சினை தொடர்பாக பேசிய நாராயணன், 'விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு தான்' என்பதை தெளிவுபடுத்தினார். 'புலிகளின் கடற்படை பிரிவான கடற்புலிகள் மற்றும் அவர்களிடம் உள்ள போர் விமானங்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றும் பகிரங்கமாக கூறினார்.

இலங்கையில் உள்நாட்டு போர் விவகாரத்தை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கவனித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், துருக்கியில் இருந்து இந்தியா வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இராணுவத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். தற்போதைய நிலையில், இலங்கையின் தேவைகளையும், அதிகாரிகளிடம் ராஜபக்ச கோடிட்டு காட்டினார். வேறு எந்த நாட்டை விட இந்தியாவையே சார்ந்திருக்க இலங்கை விரும்புவது தெளிவானது. இந்தியா கூறும் எந்த ஆலோசனையையும் ஏற்க இலங்கை தயாராக இருக்கிறது. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு இராஜதந்திர முறையில் இலங்கை செயல்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஓயில் கோர்ப்பரசேனை, இலங்கையில் செயல்பட அனுமதித்தது. இலங்கையில் பல பெட்ரோல் பங்க்களையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தியாவின் மற்றொரு மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம், 'தேசிய அனல் மின் கழகம்!' இந்த நிறுவனமும் இலங்கையில் பல இடங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருகோணமலை பகுதியில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கை அமைக்க இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தினமும் 150 கப்பல்கள் வரை ஐரோப்பாவில் இருந்து சிங்கப்பூர் வரை செல்கின்றன. இந்த கப்பல்களுக்கு வழியில் எரிபொருளை நிரப்ப சரியான இடவசதி இல்லை. இந்த கப்பல்களுக்கு எரிபொருள் சப்ளை செய்ய திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. திருகோணமலையில் தேசிய அனல்மின் கழகமும், சிலோன் மின்வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சம்பூர் என்ற இடம் இதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த இடத்தை புலிகள் சமீபத்தில் தாக்கினர். விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் உள்ளன. கப்பல்களை தாக்கி அழிக்கும் கடற்புலிகள் பிரிவும் உள்ளன.

அவற்றை கட்டுப்படுத்தும் சக்தி இலங்கை இராணுவத்திடம் இல்லை. இந்திய இராணுவம் முழு வீச்சில் இலங்கைக்கு உதவினால் மட்டுமே புலிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்க முடியும் என்பதே இலங்கையின் வியூகம். இந்தியன் ஓயில் கோர்ப்பரேசன் மற்றும் இலங்கையில் அமைய இருக்கும் இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. புலிகளின் போர் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன ராடார்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்றவற்றை இலங்கைக்கு இந்தியா விரைவில் வழங்கும் என தெரிகிறது. இதற்கு முன், இலங்கையிடம், 'அழிவு ஏற்படுத்தாத இராணுவ தளவாடங்கள் மட்டுமே தர முடியும்' என இந்தியா கூறி இருந்தது.

இதனால், பாக்., மற்றும் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கியது இலங்கை. இது இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் என்பது இலங்கைக்கு தெரியும். ஆனாலும், இராணுவத்துக்கு போதுமான ஆயுதங்கள் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, இந்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. எனவே, பாக்., மற்றும் சீனாவிடம் இலங்கை உதவி பெறுவதை நிறுத்த வேண்டுமானால், இந்தியா தான் உதவியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இரகசியமான வகையில் இலங்கை இராணுவத்துக்கு உதவும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்ற்>புதினம்.

No comments: