Friday, June 08, 2007

சிறிலங்கா குடிமக்களா? "தமிழீழ"க் குடிமக்களா? கேள்வியை எழுப்பியிருக்கும் கொழும்பு நடவடிக்கை!

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள், சிறிலங்காவின் குடிமக்களா? அல்லது தமிழீழக் குடிமக்களா? என்ற கேள்வி பல தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக இந்திய பத்தி எழுத்தாளர் எம்.ஆர்.நாராயணசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் எழுதிய செய்திக்கட்டுரையின் தமிழ் வடிவம்:

எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு அரசாங்கமும் தவறு செய்யலாம். ஆனால் சில தவறுகள் அரசியல் மடத்தனமானதாகி விடும். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் எண்ணிக்கையிலான விடுதிகளிலிருந்து தமிழர்களை வெளியே துரத்தியமையும் இந்த வகையில்தான் அடங்கும்.

சிறிலங்காவின் ஆளும் வர்க்கமானது நீண்டகாலமாக "தமிழர் தாயகம்" எனும் எனும் கோட்பாட்டை நிராகரித்து வந்தது. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே யுத்தம் இல்லாத பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அரசாங்கமும் தலைவர்களும் கூறி வந்தனர்.

ஆனால் வியாழக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட உச்சகட்ட நடவடிக்கையானது "தமிழர் தாயகம்" நடைமுறையில் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசம் என்பதை பிரித்தும் காட்டியிருக்கிறது.

கொழும்பில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் பிரதேசங்களில் உள்ள சிறிய விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள், தங்கள் பொதிகளுடன் வவுனியாவுக்கும் மட்டக்களப்புக்கும் பேரூந்துகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கில் "தமிழர் தாயகம்" எனப்படுகிற பிரதேசத்தில் முக்கியமான இரு நகரங்கள் வவுனியாவும் மட்டக்களப்பும்.

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழர் தேசங்கள் உள்ளன என்றும் இந்த இரு தேசங்களும் இணைந்து செயற்பட முடியாதவை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்து வரும் வாதத்தை நிரூபிப்பது போல் கொழும்பின் ஒரே ஒரு நடவடிக்கை அமைந்துவிட்டது.

இத்தகைய பாரிய வெளியேற்ற நடவடிக்கைக்கு சிறிலங்காவிலும் சிறிலங்காவுக்கு வெளியேயும் பாரிய கண்டனத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமானது அல்ல. சிறிலங்கா தலைமை நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட தமிழர்கள் - விடுதலைப் புலிகளின் முகவர்கள் அல்லது சக்திவாய்ந்த தற்கொலைதாரிகள் என்று சிறிலங்கா காவல்துறையினர் வாதிடலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலி முகவர்கள் கொழும்பின் வழமையான பிற பகுதிகளில் ஏன் வசிக்கக்கூடாது?

ஆக கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றினால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை?

1980-களில் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆயுதப் போராட்டம் வேர்விட்ட காலத்தில், ஈருருளில் தமிழ் கெரில்லாக்கள் தாக்குதலை நடத்துகின்றனர் என்று கூறி ஈருருளிகளை தடை செய்தனர்.

அப்படியானால் போராளிகள் முச்சக்கர வாகனங்களை பயன்படுத்தினால் அதுவும் தடை செய்யப்பட்டுவிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கணவன் அல்லது மனைவியை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உடலுறவைத் தடை செய்வார்களா?

கொழும்பில் நீண்ட காலம் அல்லது குறுகிய காலம் தங்கியிருந்தபோது தமிழ் மற்றும் சிங்களவர் இடையே ஆழமான பிளவு இருப்பதை அறிய முடிந்தது.

கொழும்பு நகரில் பலமுறை முச்சக்கர வாகனங்களில் சென்றிருக்கிறேன். காவல்துறை அல்லது இராணுவ சோதனைச் சாவடி அருகே தமிழ் வானொலி ஒலிபரப்புகளை தமிழ் சாரதிகள் நிறுத்தி விடுவதை அவதானித்திருக்கிறேன். "அவர்கள் உங்களை யார் என்று கேட்டால் தமிழர் என்று சொல்ல வேண்டாம். இந்தியன் என்றும் டில்லியிலிருந்து வந்திருப்பதாகவும் கூறுங்கள்" எனத் தெரிவிப்பர்.

மிகவும் கட்டுக்கோப்பான நவீனமான எதிரியுடனான இலங்கை யுத்தம் மிகக் கடினமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் துரத்தப்பட்டமையானது- எண்ணிக்கை 500 ஆக இருக்கலாம்- விடுதலைப் புலிகளின் தவறான தத்துவத்தை நிரூபிப்பதாக உள்ளது.

கொழும்பிலிருந்து வியாழக்கிழமை பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் சிறிலங்காவின் குடிமக்களா? அல்லது தமிழீழத்தின் குடிமக்களா? என்ற கேள்வி பல தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

தமிழ் அமைப்புக்கள் கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதை அவசரப்பட்டு நிறுத்தியது மிகப் பெரிய முட்டாள்தனம். தொடர்ந்து வெளியேற்றி இருந்தால் இலங்கை அரசு உலக நாடுகளின் கடும்கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் கண்டித்திருக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. முக்கியமாக இந்தியா, ஐரோப்பிய ஒண்றியம் வாய் திறக்க முன்னர் தமிழர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். சிங்கள நீதீ மன்றம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை ஒரு நேர்மையானவர்களாக காட்டிக் கொண்டதுடன், இலங்கை அரசையும் சர்வதேச கண்டனத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டது.


இலங்கை நீதிமன்றம் என்பது இனப்பாரபட்சமற்ற நீதி தேவதையின் ஆலயம்
என்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க வழக்குத் தொடுத்த தமிழர்களே காரணமாகிவிட்டார்கள்.