Saturday, June 09, 2007

மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: 'தி எக்கனொமிஸ்ற்'

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது.


அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்:

மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க்க வைத்தனர். பின்னர் அவரையும் தமது அமைப்பில் சேர்த்துக் கொண்டனர். இந்த அநியாயத்தைச் செய்தவர்கள் அரசின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரே என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் உக்கிரமடைந்துள்ள மோதல்களில் ஆப்கானிஸ்தானை விட அதிகளவான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களில் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னைய 3 வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் 200 இலும் குறைவானவர்கள்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பயங்கரவாத வழிகளைப் பயன்படுத்தி வருகின்றார். யாழ். மாவட்டத்தில் மட்டும் 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. கட்சி அரசுடன் நெருங்கிய தொடர்புடையதுடன் இராணுவத்தினருக்குப் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றது. பல கொலைகளுக்கு இந்த கட்சியும் காரணம்.

யாழில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியரான எம்.வி.கனகமயில்நாதன் தனது நாளேட்டு அலுவலகத்தில் கொல்லப்பட்ட தமது நாளேட்டின் பணியாளர்களின் புகைப்படங்களால் அலங்கரித்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஊடக சுதந்திர நாளில் உதயன் நாளேட்டின் இரு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் வன்னியில் தாக்குதலை நடத்திய பின்னர் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு இதுவே தருணம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது ஒரு பெரிய மாற்றமாகும்.

கிழக்கில் 25,000 துருப்புக்களை கொண்டு வடமேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் உள்ள 500 விடுதலைப் புலிகளை வெளியேற்ற அரசு முயன்று வருகின்றது. கருணா குழு, 200 சிறுவர்களை பலவந்தமாக சேர்த்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது அந்த குழுவுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு தனது புலனாய்வுப் பணிகளுக்கு கருணா குழுவை பயன்படுத்தி வருகின்றது. எனினும் அரசு இதனை மறுத்து வருகின்றது.

வடக்கில் விடுதலைப் புலிகளிடம் நிழல் அரசு உண்டு. அதில் காவல்துறை, நீதித்துறை, வரித்திணைக்களம் என்பன உண்டு. அவர்களின் பிரதேசங்கள் நன்கு பலப்படுத்தப்பட்ட அரண்களை கொண்டவை. அதனை கைப்பற்ற இராணுவம் பல தடவைகள் முயன்று தோல்வி கண்டுள்ளது. அவர்களின் பிரதேசங்களுக்குள் ஊடுருவுவது சாத்தியமற்றது.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது ஓமந்தைக்கு அருகாக இராணுவத்தினரால் 6-க்கும் மேற்பட்ட தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதனை அரசு மறுத்த போதும் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது. இந்த ஒவ்வொரு தாக்குதல் முயற்சிகளிலும் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுய பயிற்சி பெற்ற 10,000 விடுதலைப் புலிகள் 250,000 படையினருடன் மரபுவழிச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் மிகப்பிந்திய ஆயுதம் 10 இலகுரக வானூர்திகளாகும். அவற்றை கொண்டு விடுதலைப் புலிகள் தலைநகர் கொழும்பின் மீது இரு முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகளை எதிர்கொள்ள அரசு மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஸ்பிற்பையர் இதற்கு போதும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசில் அங்கம் வகிக்கும் புத்த மத துறவிகளைக்கொண்ட கட்சியான ஹெல உறுமய போர் நிறுத்தம் நாட்டை பிரிவடையச் செய்யும் எனக்கூறி வருகின்றது. சிறிலங்காவானது சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறுகின்றது.

அரச நிர்வாகத்தில் 3 முக்கிய அமைச்சுக்களை நிர்வகிப்பதற்கு மகிந்த தனது 3 சகோதரர்களை நியமித்துள்ளார். மேலும் நிதி, பாதுகாப்பு, பொது வேலைத்திட்டம் போன்றவற்றை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார். சிறிலங்காவின் வரவு - செலவுத்திட்டத்தில் 70 வீதத்தை மகிந்த சகோதரர்கள் கொண்டுள்ளனர். பாதுகாப்புச் செலவு இந்த ஆண்டு 40 வீதத்தால் அதிகரித்துள்ளது. அது தேர்தலில் தெரிவு செய்யப்படாத கோத்தபாய ராஜபக்சவின் பெறுப்பில் உள்ளது.

முன்னாள் இராணுவ அதிகாரியான அவர் 17 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தவர். ஒரு சமயத்தில் அங்கு 7-11 வர்த்தக நிலையங்களை நிர்வகித்து வந்திருந்தார். அரசின் தவறான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மத்திய வங்கி அதிகளவு புதிய பணத்தை அச்சிட்டுள்ளது. அது பணவீக்கத்தை 15 விகிதமாக அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை தொடர்ந்து உல்லாசப்பயணத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது.

அமைதி முயற்சியை மகிந்த தோற்றுவிக்க வேண்டுமானால் தமது கூட்டணியில் உள்ள தேசியவாத கட்சிகளை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனில் அது மகிந்தவின் கீழ் உருவாக்க முடியாது. உடனடியான அமைதி முயற்சிகளுக்கு தற்போது சாத்தியமில்லை. ஏனெனில் 2010 ஆம் ஆண்டு வரை பொது தேர்தல் நடைபெறப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

இவன் said...

சர்வதேசம் தமிழர்களின் நிலையை சரியாக உணர ஆரம்பத்திருகின்றது. சர்வதேசத்தின் அழுத்தம் சிங்கள அரசின் அடக்குமுறையை விடவைத்தால் சரி.

சிங்கள அரசின் மீதான சர்வதேசத்தின் அழுத்தத்தை அதிகரிக்கவைக்கவும், அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுக்கவும் தமிழர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம்.