Thursday, June 14, 2007

அனைத்துலக நிறுவனப் பணியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடற்படைதான்: சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு!

திருகோணமலையில் மெர்சி கோர்ப்ஸ் என்ற அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனியோ மகாலக்ஸ் மீது சிறிலங்கா கடற்படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

திருகோணமலையில் கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் இரவு நேரத்தில் அந்நபர் சென்று கொண்டிருந்தார். கடற்படையினர் விடுத்த எச்சரிக்கைகளை அந்நபர் பொருட்படுத்தப்பவில்லை. அதனால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று நாம் எச்சரித்திருந்தும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதனால் நாம் வருந்தவில்லை. அதிர்ஸ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பிவிட்டார். இது எங்கள் தவறு அல்ல. அவர் நலமுடன் உள்ளார் என்றார் அவர்.

திருகோணமலை நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலெஸ் தோட்டம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்துள்ளது.

திருகோணமலையில் மெர்சி கோர்ப் நிறுவனத்தின் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்று மெர்சி கோப் பேச்சாளர் இவெட்டா ஓவ்ரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அந்தோனியோ மகாலக்ஸ் அதன் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் உப்புவெளி சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
நன்றி>புதினம்.

No comments: